பட மூலாதாரம், Getty Images
“நான் சிந்து நதிக்கரையில் என் கைகளால் தங்கம் தேடிவந்தேன். நல்ல நாட்களில் சுமார் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும். என் குடும்பத்தை கவனிப்பது எளிதாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் இந்த தங்கச் சுரங்க வேலையில் இயந்திரங்களின் பயன்பாடு தொடங்கியது”
“பல நூற்றாண்டுகளாக ஆற்று நீரிலிருந்து தங்கள் கைகளால் தங்கம் எடுத்து வந்த பழங்குடியினருக்கு இப்போது இடமில்லை என்று நான் உணர்கிறேன்.”
“இப்போது நான் இயந்திரங்களில் வேலை செய்பவர்களுக்குக் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறேன்; அந்த தினக்கூலி சில நேரங்களில் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைக்காமலும் போகிறது.”
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானின் டியாமிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபிபுல்லா இப்படிக் கூறினார்.
ஆற்று நீரிலிருந்து தங்கம் எடுக்கும் வேலையை தனது மூதாதையர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் 35 வயதான ஹபிபுல்லா. அவரையும் சேர்த்து, அவரது பழங்குடி மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டத் தெரிந்த ஒரே தொழிலாகவும் அவர் அதைக் குறிப்பிடுகிறார்.
முன்னர் இந்த வேலையை கைமுறையாகச் செய்த சில உள்ளூர் மக்களிடம் சொந்த நிலம் இருந்தது என்று கூறும் அவர், அதனால் இப்போது அவர்கள் அதே இடத்தில் இயந்திரங்களை நிறுவி இந்த வேலையைத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறுகிறார்.
இந்த இயந்திரங்கள் வாடகைக்கும் கிடைக்கின்றன. அதே சமயம், வரலாற்று ரீதியாக இந்தத் தொழிலுடன் தொடர்பில்லாத சிலரும், நிலம் சொந்தமாக இருந்ததால், தங்கம் தேடுபவர்கள் மற்றும் இயந்திர உரிமையாளர்களுடன் சேர்ந்து இந்த வேலைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், “பல ஆண்டுகளாக இந்த வேலையை கைமுறையாகச் செய்து வந்த, ஆனால் பெரிய இயந்திரங்களை வாங்குவதற்கு வழியில்லாத, நிலமும் சொந்தமாக இல்லாத பழங்குடியினர் நசுக்கப்பட்டுள்ளனர்” என்று ஹபீப் புகார் கூறுகிறார்.
பிரபல சுற்றுலாத் தலமான பாபுசர் டாப் பகுதியைச் சேர்ந்த ஆசம் கான், “நான் இந்த வேலையை கைமுறையாகச் செய்து வந்தேன், ஆனால் என் பழங்குடியினருக்குச் சொந்தமாக நிலம் இருந்ததால், நாங்கள் இயந்திர ஆபரேட்டர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தோம்” என்கிறார்.
பட மூலாதாரம், Mohammad Ravan
பரம்பரைபரம்பரையாக தங்கத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள்
கில்கிட்-பல்டிஸ்தான் மற்றும் டயமிர் மாவட்டத்தில், நதியிலிருந்து தங்கம் பிரித்தெடுப்பவர்கள் பொதுவாக ‘சோனேவால் பழங்குடியினர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பழங்குடியினருக்கு சொந்த சங்கம் கூட உள்ளது.
2023 வரை அவர்களது பகுதியில் இயந்திரங்கள் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்கிறார் டயாமிர் மாவட்டத்தில் உள்ள அஞ்சுமன் சோனே வால் கபாயிலின் தலைவர் முகம்மது ரவ்வான். “அதற்குப் பிறகு சில உள்ளூர் நில உரிமையாளர்கள் பல்வேறு வழிகளின் மூலம் இயந்திரங்களை கொண்டு வரத் தொடங்கினர். இப்போது இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டு, நதிநீரிலிருந்து தங்கம் எடுக்கப்படுகிறது” என அவர் கூறுகிறார்.
உள்ளூர்வாசியான அசீம் கான் இதை உறுதிப்படுத்துகிறார். தனது பழங்குடியினரின் நிலத்தில் இரண்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்கிறார் கூறுகிறார்.
“எங்கள் பகுதியில் தங்கம் தேடுவதற்காக அரசு மட்டத்தில் நிலமோ அல்லது சிறப்பு இடமோ ஒதுக்கப்படவில்லை” என்று கூறிய அவர், “நான் இயந்திரங்களை நிறுவிய இடத்திலிருந்து சிறிது தூரத்தில், மற்றவர்கள் ஆறு முதல் ஏழு இயந்திரங்களை நிறுவியுள்ளனர். அதேசமயம் இந்த பகுதியின் சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள், சுமார் 150 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
பாகிஸ்தானின் வடக்கு பிராந்தியங்களுக்குப் பயணம் செய்தவர்கள், சிந்து நதிக்கரையில் மக்கள் மணலை சலித்து தங்கம் எடுப்பதைப் பார்த்திருக்கலாம். இருப்பினும், காலப்போக்கில் முறைகள் மாறிவிட்டன. இன்று, நீங்கள் டயமிர் மாவட்டத்தில் உள்ள சிந்து நதிக்கரையில், குறிப்பாக பாஷா அணை நீர்த்தேக்கத்தைச் சுற்றிப் பயணம் செய்தால், ஒன்றிரண்டு அல்ல, நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் தீவிரமாகத் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
“சுமார் 3,180 கிலோமீட்டர் நீளமுள்ள சிந்து நதி, திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் உருவாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது பாகிஸ்தானின் சமவெளிகளுக்கு பாசனம் அளிக்கிறது.”
இந்த நதி பல நூற்றாண்டுகளாக மனித நாகரிகம், கலாசாரம், வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் வருவாய்க்கான ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து இன்றுவரை, சிந்து நதி இந்த பிராந்தியத்தின் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது.
சிலருக்கு இந்த நதி தங்கத்தையே தருகிறது. அவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பியே இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
“மலைகளுக்குள் தங்கம் இருப்பு”
அபோட்டாபாத் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்தின் (COMSATS University) சூழல் அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் பாரிதுல்லா, சிந்து நதிக்கரையில் காணப்படும் மண் மற்றும் மணலில் தங்கம் இயற்கையாகவே உள்ளது என்கிறார்.
“பொதுவாக தங்கம் மலைகளின் ஆழத்தில் உள்ள உலோகப் படிவுகளிலிருந்து வருகிறது. மலைகளில் உள்ள சுரங்கங்களிலிருந்து தங்க இழைகள் (Gold strands) மற்றும் சிறிய துகள்கள் பல்வேறு வழிகளில் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மழை நீர் அல்லது பனிப்பாறைகள் மலைகளிலிருந்து கீழே பாயும்போது, அவை சிறிய தங்கத் துகள்களை மலைப் பாறைகள் மற்றும் மண்ணுடன் ஆற்றில் கொண்டு செல்கின்றன” என்று அவர் விளக்கினார்.
“நதி பாயும் போது, அத்தகைய துகள்கள் அடியில் படிந்து, ஆற்றங்கரையின் மணல் மற்றும் மண்ணில் சேர்கின்றன. அதனால்தான் சிந்து நதியின் மணல் மற்றும் மண்ணில் சிறிய தங்கத் துகள்கள் காணப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
“கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் கில்கிட்-பல்டிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்”.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கில்கிட்-பால்டிஸ்தானில் தங்கம் சலிக்கும் இயந்திரங்கள் அரிதாகவே இருந்ததாகச் சொல்கிறார் டயமிர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா.
முன்னதாக, அத்தகைய இயந்திரங்கள் பெரும்பாலும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள காபூல் நதிக்கரையிலும், பஞ்சாபில் உள்ள சிந்து நதிக்கரையிலும் அமைந்திருந்தன என்று அவர் கூறுகிறார். “ஆனால், அங்குள்ள அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தபோது, இந்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். சமீபத்தில், பஞ்சாபில் இருந்து ஒரு முதலீட்டாளர் என்னை தொடர்பு கொண்டு, என் நிலத்தில் இயந்திரங்களை நிறுவ அனுமதித்தால், எனக்கு வாடகை செலுத்துவதாகக் கூறினார்” என்றார் அப்துல்லா.
“என் நிலத்தை வாடகைக்கு விடுவதற்குப் பதிலாக, லாபத்தில் 40 சதவிகிதப் பங்கிற்கு கூட்டு வைத்துக்கொள்வது மிகவும் லாபகரமானது என்று அறிந்துகொண்டேன்” என்றும் அவர் கூறினார்.
அவரைப் போலவே, இப்போது பல உள்ளூர் மக்களும் இயந்திர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகிறார் அப்துல்லா. அவர்கள் வாடகைக்கு நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள், அல்லது வெளியாட்களுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Mohammad Ravan
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் தங்கம் தேட தடை
கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாப் அரசும் கைபர் பக்துன்க்வா அரசும் சிந்து நதியில் இயந்திரங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் தங்கம் தேடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு பதிவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய சட்டவிரோத தங்கத் தேடுதலுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிந்து மற்றும் காபூல் நதிக்கரையில் தங்கம் தேடுவதற்கும் அங்கீகரிக்கப்படாத சுரங்க வேலைகளுக்கும் தடை விதித்துள்ள கைபர் பக்துன்க்வா அரசு, பிரிவு 144-ஐயும் அமல்படுத்தியுள்ளது.
சட்டவிரோத சுரங்க வேலைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளைச் சமாளிக்க, சுவாபி, நவ்ஷெரா, கோஹாட் மற்றும் அது சார்ந்த பிற பகுதிகளில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.”
அதோடு, சட்டவிரோத இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளூர் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
“முன்பு அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் கிடைக்கும், ஆனால் இப்போது ஐந்து முதல் ஆறு கிராம் வரை பெறலாம்.”
கில்கிட்-பல்டிஸ்தானில் உள்ள கனிமத் துறை, வர்த்தக சபை மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து தங்கம் எடுப்பது பற்றிய உறுதியான தகவல்களைப் பெற பிபிசி முயன்றது. ஆனால் விரிவான அரசு தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
கைமுறையாகத் தங்கம் எடுத்த போது, அவரது குடும்பத்தினர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு கிராம் கண்டுபிடிப்பார்கள் என்றார் அசீம் கான். “இப்போது என் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அல்லது ஏழு பேர் இயந்திரங்களில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு கிராம் தங்கம் கண்டுபிடிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
‘சோனேவால்’ பழங்குடியினர் ஆற்றுப் பகுதியில் உள்ள தனது நிலத்தில் முன்பு தங்கம் தேடுவார்கள் என்று கூறினார் உள்ளூர்வாசியும் நில உரிமையாளருமான நுஸ்ரத் கான். ஆனால், இயந்திரங்கள் வரத் தொடங்கியதிலிருந்து, தனது நிலத்தின் ஒரு பகுதியை பஞ்சாபில் உள்ள ஒரு தரப்பினருக்கு வாடகைக்கு விட்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தபோது, அவர் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கி, இயந்திரங்களை ஒரு மணி நேரத்திற்கு 2,400 பாகிஸ்தான் ரூபாய்க்கு வாடகைக்கு விட ஆரம்பித்தார்.”
பட மூலாதாரம், Mohammad Ravan
பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது
தற்போதைய சூழ்நிலையில், பல நூற்றாண்டுகள் பழமையான அந்தத் தொழில் (கையால் தங்கம் பிரித்தெடுப்பது) அழிந்து வருகிறது என்கிறார் அஞ்சுமன் ‘சோனேவால் பழங்குடியின் டயமிர் மாவட்டத் தலைவர் முகமது ரவ்வான்.
“முன்பு எங்கள் பகுதியில் புகை அல்லது சலசலப்பு எதுவும் இல்லை. ஆனால், இப்போது இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களால் தொடர்ச்சியான சத்தம் வருகிறது. ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. டயமிர் மற்றும் சிலாஸ் பகுதிகளில் ஒரு புதிய உலகம் உருவாகி வருகிறது. ஆனால், இந்த சத்தத்தில் எங்கள் தொழில் அழிந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “எங்கள் மக்களில் சிலர் இயந்திரங்கள் மற்றும் நிலத்தை வாடகைக்கு எடுத்து இந்த வேலையைச் செய்ய முயன்றனர். ஆனால், அவற்றை வாடகைக்கு எடுக்கும் செலவு மிகவும் அதிகமாகவும் லாபம் மிகக் குறைவாகவும் இருப்பதால், தேவையான செலவுகளைக் கூட ஈடுகட்டவில்லை. இதற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் தினசரி கூலியைத் தேடத் தொடங்குகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
“நீர், மணல் மற்றும் மண்ணுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் வேலை செய்யும் வழியை எங்களுக்கு வழங்குமாறு அரசிடம் பலமுறை கேட்டுள்ளோம். இந்த வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். பல நூற்றாண்டுகள் பழமையான இந்தத் தொழில் மற்றும் திறனை உயிர்ப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ள 2,300 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.
கில்கிட்-பல்டிஸ்தானில் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் கரைகளில் தங்கம் எடுக்கும் பொதுவான நடைமுறை பல நூற்றாண்டுகள் பழமையானது என்று கூறுகிறார் அபோட்டாபாத் காம்சாட்ஸ் பல்கலைக்கத்தின் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் டாக்டர் ஃபரிதுல்லா
இந்த முறையில், ஆற்றுப் பகுதியிலிருந்து மணல், சரளை மற்றும் கற்கள் சேகரிக்கப்பட்டு, தட்டுகள் (pans), சல்லடை வலைகள், தொட்டிகள் மற்றும் சிறிய மண்வெட்டிகளைப் பயன்படுத்தி தண்ணீரில் கழுவப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.
இந்த வழியில், இலகுவான மண் கழுவப்பட்டு, கனமான, நுண் துகள்கள் கொண்ட தங்கம் அடியில் விடப்படுகிறது. இந்த செயல்முறை குறைவான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இப்போது இந்த வேலை இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது என்று கூறும் டாக்டர் ஃபரிதுல்லா, இதற்காக எக்ஸ்கவேட்டர்கள் (excavators), தண்ணீர் குழாய்கள் மற்றும் தொழில்துறை வடிகட்டுதல் இயந்திரங்கள் உள்பட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
இவற்றின் மூலம், அதிக அளவு மணல் மற்றும் மண்ணைச் சுத்தம் செய்வதன் மூலம் குறைந்த நேரத்திலேயே அதிக தங்கம் பெறலாம்.
பட மூலாதாரம், Getty Images
இயந்திரங்களால் ஏற்படும் மாசு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது
கில்கிட்-பல்டிஸ்தான் கனிமங்கள் மற்றும் சுரங்கங்களின் இயக்குநர் அஹ்மத் கான் கருத்துப்படி, டயமிர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இயந்திரங்கள், பாஷா அணை நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.
அந்த இயந்திரங்களில் பல சட்டவிரோதமானவை என்று கூறும் அவர், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அஹ்மத் கான் கருத்துப்படி, சிந்து நதியில் தங்கம் எடுக்கும் பணி செய்பவர்கள் கில்கிட்-பல்டிஸ்தான் மினரல் அண்ட் மைன்ஸ் போர்ட்டலில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குப் படிப்படியாகச் சட்ட அங்கீகாரம் வழங்க முடியும்.
கில்கிட்-பல்டிஸ்தானில் சிந்து நதியிலிருந்து தங்கம் பிரித்தெடுப்பதற்குத் தனி சட்டங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, மாறாக அவை அந்தப் பிராந்தியத்தில் சுரங்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களான கில்கிட்-பல்டிஸ்தான் சுரங்க விதிமுறைகள் 2016 மற்றும் அதில் 2024-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
இருப்பினும், மறுபுறம், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
டாக்டர் ஃபரிதுல்லா கூறுகையில், இயந்திரங்கள் மூலம் தங்கம் பிரித்தெடுக்க டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள், எக்ஸ்கவேட்டர்கள் மற்றும் தொழில்துறை பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் அனைத்திலிருந்தும் வெளியேறும் புகையில் கார்பன் டை ஆக்சைடு, சல்ஃபர் மற்றும் நுண் துகள்கள் உள்ளன.
இந்த நுண் துகள்கள் காற்றில் பரவும்போது, அவை சுவாச நோய்கள், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
காற்றின் மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளை கறுப்பு கார்பன் சென்றடையும் போது, அவை சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை உறிஞ்ச காரணமாகின்றன. அதன் விளைவாக அவற்றின் உருகுதல் செயல்முறை விரைவுபடுகிறது என்பதுதான் மிகவும் ஆபத்தான விஷயமாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
தங்கத்தை கையால் பிரித்தெடுக்கும் பாரம்பரிய முறையில் ஜெனரேட்டர்கள் அல்லது கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படாத வரையிலும், காற்று மாசுபாடு மிகக் குறைவாகவே இருந்தது என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கையால் தங்கத்தைப் பிரித்தெடுத்தல்
ஜெனரேட்டர்கள், நசுக்கும் இயந்திரங்கள் (crushing machines) மற்றும் கனரக வாகனங்கள் மூலம் சுரங்கம் தோண்டுவது தொடர்ச்சியான சத்தத்தையும் உருவாக்குகிறது என்கிறார் டாக்டர் ஃபரிதுல்லா.
இந்த சத்தம் மனிதர்களுக்கு மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் காது கேளாமைப் பிரச்னைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தப் பகுதிகளில் உள்ள வனவிலங்குகளையும் பாதிக்கிறது.
“மலைப்பகுதிகளில், இந்த சத்தம் வெகு தொலைவில் கேட்கக்கூடியதாக இருக்கிறது. நிசப்தம் நிறைந்த பள்ளத்தாக்குகளின் இயற்கையான அமைதியை இது சீர்குலைக்கிறது. இதற்கு நேர்மாறாக, கையால் தங்கத்தை தேடுவதில் சத்தம் மிகவும் குறைவு. அமைதியான மற்றும் இயற்கையான சூழலை அது விட்டுச்செல்கிறது”.
டாக்டர் நுஸ்ரத் எசான், லாகூர் வணிக கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் சுற்றுச்சூழல் ஆலோசகராகவும் உள்ளார். அவர் கூறுகையில்”ஆற்றில் மணல் மற்றும் மண் இப்போது இயந்திரங்களால் தோண்டப்படுகிறது, இதனால் தண்ணீர் கலங்கலாகிவிடுகிறது. இந்த கலங்கிய நீரில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களால் வாழ முடியாது. அவற்றின் முட்டைகள் அழிக்கப்படுகின்றன. நீர்வாழ் அமைப்பு பாதிக்கப்படலாம். சில சமயங்களில் இயந்திரங்களிலிருந்து டீசல் மற்றும் எண்ணெய் கசிவு காரணமாக நீர் அதீதமாக மாசுபடுகிறது” என்று அவர் கூறுகிறார்.
“இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு நிலம் புதைந்து போகிறது. இந்த நிலைமை நீண்ட காலமாகத் தொடர்ந்தால், நதி அதன் இயற்கையான பாதையை மாற்றிக்கொள்ளக்கூடும். அதனால், வெள்ள அபாயமும் அதிகரிக்கிறது” என்றும் அவர் கூறினார்.
டாக்டர் ஃபரிதுல்லா மற்றும் டாக்டர் நுஸ்ரத் எசான் இருவரும் கைமுறைத் தங்கம் பிரித்தெடுத்தல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஏனெனில் “அது காற்றை மாசுபடுத்தவில்லை, சத்தத்தை ஏற்படுத்தவில்லை, பனிப்பாறைகளில் பாதகமான விளைவுகள் ஏற்படும் அபாயமும் இல்லை. இயந்திரங்கள் அதிக தங்கம் மற்றும் அதிக லாபத்தை அளித்தாலும், அது காற்று, நீர், நிலம் மற்றும் பனிப்பாறைகளையும் பாதிக்கின்றன”
பட மூலாதாரம், Getty Images
நீண்ட கால சேதம் பற்றிய பயம்
இயந்திரங்களின் பயன்பாடு அவசியமானதாக இருந்தால், கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று இந்த நிபுணர்கள் வலியுறுத்தினர். “இல்லையெனில், சிந்து நதியும் அதனுடன் தொடர்புடைய பனிப்பாறைகளும் நீண்டகால சேதத்தைச் சந்திக்கக்கூடும்” என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
கில்கிட்-பல்டிஸ்தான் சுற்றுச்சூழல் மற்றும் கனிமத் துறையின்படி, அவர்களிடம் தற்போது, ஆற்றுநீரில் தங்கம் பிரித்தெடுப்பவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவுகள் இல்லை.
இருப்பினும், தற்போது இரு துறைகளும் தீவிரமாக செயலாற்றுகின்றன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளன. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் முன்பு பாதரசம் பயன்படுத்தி, கையால் தங்கம் வெட்டினார்கள் என்று கூறிய கில்கிட்-பால்டிஸ்தான் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த காதிம் ஹுசைன் “தற்போது, இந்த வேலை வணிக ரீதியாகச் செய்யப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெள்ளம் வந்த பகுதிகளில் இது நடக்கிறது” என்றார்.
இருப்பினும், கையால் தங்கம் தேடுபவர்கள் பாதரசம் பயன்படுத்துகிறார்கள் என்ற கூற்றை முகமது ரவ்வான் மறுத்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் நதியை மாசுபடுத்துவது அனுமதிக்கப்படாது என்றும், பாதரசம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காதிம் ஹுசைன் தெரிவித்தார்.
தங்கம் எடுப்பதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அஹ்மத் கான் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு