பட மூலாதாரம், @ChiefAdviserGoB
வங்கதேசத்தின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பாகிஸ்தான் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். வங்கதேசத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் வரை, பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோவுடன் (பின்னர் பிரதமரானவர்) பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் மறுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் பாகிஸ்தானும் வங்கதேசத்தின் சுதந்திரத்தை ஏற்க மறுத்தது. ஆனால், பாகிஸ்தானின் நிலைப்பாடு திடீரென மாறியது. பிப்ரவரி 1974இல், லாகூரில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாடு நடைபெற்றது.
அப்போது பிரதமராக இருந்த பூட்டோ, முஜிபுர் ரஹ்மானுக்கு அதிகாரபூர்வ அழைப்பு விடுத்தார். முஜிபுர் ரஹ்மான் முதலில் அதில் கலந்துகொள்ள மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார்.
பிப்ரவரி 22, 1974 அன்று பாகிஸ்தான் வங்கதேசத்தை அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்தை பூட்டோ இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாட்டிலேயே அறிவித்தார்.
இந்த அங்கீகாரத்தை அறிவிக்கும்போது ஜுல்பிகர் அலி பூட்டோ, “அல்லாவின் பெயராலும், இந்த நாட்டு குடிமக்களின் சார்பாகவும், வங்கதேசத்திற்கான அங்கீகாரத்தை நாங்கள் அறிவிக்கிறோம். நாளை ஒரு தூதுக் குழு வரும், அவர்களை 7 கோடி முஸ்லிம்கள் சார்பாக நாங்கள் வரவேற்போம்,” என்று கூறினார்.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இருந்த கசப்புணர்வு முழுமையாக நீங்கவில்லை.
ஆனால் இப்போது, கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான சூழல் மாறி வருவதாகத் தெரிகிறது. ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான வரலாற்று ரீதியான இடைவெளி குறைந்து வருவது போலத் தெரிகிறது.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
இந்தியாவுடன் பதற்றம், பாகிஸ்தானுடன் நெருக்கம்
இன்குலாப் மஞ்ச் (Inquilab Manch) இளைஞர் அணித் தலைவர் உஸ்மான் ஹாதி டிசம்பர் 18 அன்று இறந்தார்.
டிசம்பர் 12 அன்று டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வாரத்தில் , வங்கதேசத்தில் இந்து தொழிற்சாலை தொழிலாளி ஒருவர் கும்பல் வன்முறையால் பகிரங்கமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவில் ஏற்கெனவே இருந்த பதற்றம் திடீரென அதிகரித்தது. இந்தப் பதற்றம் தணியாத நிலையில், இரு நாடுகளும் தற்காலிகமாக விசா சேவைகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
டிசம்பர் 20 அன்று, பாகிஸ்தான் ஜமாத்-இ-இஸ்லாமியின் முன்னாள் அமீர் சிராஜ்-உல்-ஹக், வங்கதேச இளைஞர்களைப் பாராட்டி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதிவில் சிராஜ்-உல்-ஹக், “வங்கதேசத்தின் படித்த மற்றும் துணிச்சலான இளைய தலைமுறை ‘ஒன்றிணைந்த இந்தியா’ என்ற கருத்தியலை அழித்துவிட்டது. இந்தியா இந்தப் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கி வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உஸ்மான் ஹாதியின் கொலையைத் தொடர்ந்து, கொலையாளிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் தப்பிச் சென்றுவிட்டதாக வங்கதேச சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.
ஆனால், வங்கதேச காவல்துறையோ அல்லது அங்கு ஆட்சியிலுள்ள இடைக்கால அரசாங்கமோ இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அதிகாரபூர்வமாக முன்வைக்கவில்லை.
இருப்பினும், இந்த வதந்திகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளைப் பாதித்தன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே போராட்டங்கள் வெடித்தன.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
அதிகரித்து வரும் நெருக்கம்
இத்தகைய வதந்திகள் பரவியது மற்றும் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் குறிவைக்கப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் டிசம்பர் 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் குறித்து முன்வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். இந்தச் சம்பவங்கள் குறித்து இடைக்கால அரசு முறையான விசாரணை நடத்தவோ அல்லது இந்தியாவுடன் உறுதியான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு சென்ற பிறகு, பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதை உணர்த்தும் வகையில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
கடந்த 1971இல் நடந்த வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு, முதன்முறையாக இரு நாடுகள் இடையிலான நேரடி கடல்வழித் தொடர்பு கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்டது.
இதற்கு முன்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகம் சிங்கப்பூர் அல்லது கொழும்பு வழியாகவே நடைபெற்று வந்தது.
வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு ஒரு சரக்குக் கப்பல் நேரடியாக வருவது இதுவே முதல் முறை. இது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான கட்டம்,” என்று தெரிவித்தது.
வங்கதேசத்திற்கான பாகிஸ்தான் தூதர் சையத் அகமது மரூப், கடந்த ஆண்டு நவம்பர் 6 அன்று கூறுகையில், “வங்கதேச குடிமக்களுக்கு பாகிஸ்தான் செல்ல இலவச விசா வழங்கப்படும். இதற்கான முடிவு 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்படும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஓர் இணையதளத்தில் விவரங்களைச் சமர்ப்பிப்பது மட்டும்தான். வணிகம், சுற்றுலா என இரண்டு வகை விசாக்கள் உள்ளன. இதற்கு, பயணிகள் தங்களுடைய திரும்புதலுக்கான பயணச்சீட்டு (Return ticket) மற்றும் தங்கும் விவரங்களை வழங்கினால் மட்டும் போதும்,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
அரசியலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் பங்கு
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் ஜமாத்-இ-இஸ்லாமியும், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளன. இவை இரண்டுமே வங்கதேச விடுதலைப் போர் குறித்துக் கேள்வி எழுப்புகின்றன.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி, விடுதலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறது.
ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு, வங்கதேச விடுதலைப் போரின் வரலாற்று மரபுகள் மீதான தாக்குதல்களும் தொடங்கின.
வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லமும் தாக்கப்பட்டது. வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேச செய்தி இணையதளமான ‘புரதோம் ஆலோ’வுக்கு அளித்த பேட்டியில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், “1971இல் எங்கள் நிலைப்பாடு கொள்கை அடிப்படையிலானது. இந்தியாவின் நன்மைக்காக ஒரு தனி நாடு கிடைப்பதை நாங்கள் விரும்பவில்லை.
பாகிஸ்தான் எங்களுக்கு வாக்குரிமை வழங்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருந்தது. அது சாத்தியமில்லாத பட்சத்தில், பல நாடுகள் கொரில்லா போர் மூலம் சுதந்திரம் அடைந்திருக்கும்” என்று கூறினார்.
அதோடு, ஷஃபிகுர் ரஹ்மான் தொடர்ந்து பேசுகையில், “நாம் யாராவது வழங்கும் உதவியுடனோ அல்லது யாருக்காகவோ சுதந்திரம் பெற்றால், அது ஒரு சுமையை இறக்கி வைத்துவிட்டு மற்றொரு சுமையை ஏற்றுக்கொள்வது போலாகிவிடும். கடந்த 53 ஆண்டுகளாக வங்கதேசத்திற்கு இதுதானே உண்மையாக இருக்கிறது?
ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பிடிக்கவில்லை என்பதை நாம் ஏன் கேட்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட நாடு விரும்பாவிட்டால் ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்பது சுதந்திர நாட்டின் அடையாளமா? வங்கதேச இளைஞர்கள் இப்போது இதையெல்லாம் கேட்க விரும்புவதில்லை,” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், @sajeebwazed
இந்தியாவின் சிக்கல்
“முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயல்கிறது” என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜேத் ஜாய், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை இந்தியாவுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 54 வயதான வஜேத் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இடைக்கால அரசுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து வஜேத் கூறுகையில், “இது இந்தியாவுக்கு தீவிரமான கவலையளிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்க வேண்டும். எங்களது அவாமி லீக் அரசாங்கம் இந்தியாவின் கிழக்கு எல்லைகளை அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாப்பாக வைத்திருந்தது. அதற்கு முன்பு வரை, இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கான தளமாக வங்கதேசம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது” என்றார்.
“இப்போது மீண்டும் அதே நிலை திரும்பும். யூனுஸ் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற இஸ்லாமிய கட்சிகளுக்கு நாட்டில் முழு சுதந்திரம் அளித்துள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமிய கட்சிகள் ஒருபோதும் ஐந்து சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதில்லை. அனைத்து முற்போக்கு மற்றும் தாராளவாதக் கட்சிகளையும் தடை செய்து, மோசடியான ஒரு தேர்தலை நடத்துவதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆட்சியில் அமர்த்த யூனுஸ் முயல்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Abu Sufian Jewel/AFP via Getty Images
இதற்கிடையில், பிரபல அறிஞரும் ‘கொள்கை உரையாடல் மையத்தின்’ (Centre for Policy Dialogue) நிறுவனருமான ரஹ்மான் சோபனிடம் இது குறித்து வங்கதேச ஆங்கில செய்தி இணையதளமான ‘புரதோம் ஆலோ’ கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஜூலை இயக்கம், ஜனநாயகத் தோல்வி மற்றும் அநீதியான ஆட்சியால் ஈர்க்கப்பட்டது. ஆனால் விடுதலைப் போரை எதிர்த்தவர்கள் இந்த இயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்” என்றார்.
மேலும், “விடுதலைப் போரை எதிர்த்தவர்கள் நீண்ட காலமாகவே நமது அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இந்த இயக்கத்திற்குள் ஊடுருவி, அதன் போக்கை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி காணப்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து பேசிய ரஹ்மான் சோபன், “வங்கதேச இடைக்கால அரசாங்கத்தில் அவர்களின் எழுச்சி தெளிவாகத் தெரிகிறது. தேர்தல்களில் அவர்களின் வாய்ப்புகள் வலுவாக உள்ளன. 1971இல் பாகிஸ்தான் ராணுவத்தின் கூட்டாளிகளாக இருந்த தங்கள் வரலாற்றுப் பாத்திரத்தை மாற்றி எழுத இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்.
அரசியல் ரீதியாக விவேகமான தலைவர்களின் கீழ், விடுதலைப் போர் குறித்த அவர்களின் நிலைப்பாடு சற்று எச்சரிக்கையுடன் முன்வைக்கப்படும். ஆனால், 1971இல் அவர்கள் ஆற்றிய பங்கை மறைக்க அல்லது நியாயப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அவர்களுடைய வியூகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும்,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், @narendramodi
இந்தியாவுடன் பதற்றம், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சாதகமான உறவு
ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரும், ‘இந்தியாஸ் வேர்ல்ட்’ இதழின் ஆசிரியருமான ஹேப்பிமோன் ஜேக்கப், டிசம்பர் 22 அன்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைவது இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“வங்கதேசத்துடனான உறவுகள் வேகமாகச் சீர்குலைந்து வருவது இந்தியாவுக்கு மும்முனை சவால்களை ஏற்படுத்துகிறது. 4,000 கி.மீ. நீளமுள்ள எல்லையில் பாதுகாப்பின்மை மற்றும் ஊடுருவல் அச்சுறுத்தல் அதிகரிக்கும். மேலும், எல்லைக்கு அப்பால் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் தளங்களை அமைக்கும் அபாயமும் உள்ளது” என்று ஜேக்கப் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இந்தியா-வங்கதேச பதற்றத்தை பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. வங்கதேசத்தில் பாகிஸ்தானின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவின் குன்மிங்கில் சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் வங்கதேசம், பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையே நடந்த முத்தரப்புச் சந்திப்பு இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, 2024 பிற்பகுதியில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வருகை தந்தது. சீனாவும் முகமது யூனுஸ் அரசுடனான தனது உறவைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது” என்று ஹேப்பிமோன் ஜேக்கப் எழுதியிருந்தார்.
“எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. இந்தப் பதற்றம் வங்கதேசத்திற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் வங்கதேச இடைக்கால அரசுக்கு இதுவொரு பிரச்னையாக இருக்காது. ஏனெனில், இந்தப் பதற்றம் அதன் உள்நாட்டுத் தோல்விகளையும் திறமையின்மையையும் மறைக்க உதவுகிறது. எனவே, இந்தியாவுடன் மோசமாகும் உறவு வங்கதேசத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுவது மிகவும் தவறான கணக்கீடாக அமையலாம்” என்றும் ஹேப்பிமோன் ஜேக்கப் எழுதியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்தியாவின் கொள்கைகளும் மோசமடைந்து வரும் உறவுக்குக் காரணம் என்று வங்கதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டாக்காவின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி டெய்லி ஸ்டார்’ , டிசம்பர் 22 அன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவது குறித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது.
அதில், “இந்தியா-வங்கதேச உறவின் அடித்தளம் பல ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு இந்தியா அளித்த அசைக்க முடியாத ஆதரவால் பலப்படுத்தப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம். இப்போது அந்தக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்ட அதன் தலைவர் இந்தியாவில் இருந்து எரிச்சலூட்டும் கருத்துகளைத் தெரிவித்து வருவதால், அந்த அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று டெய்லி ஸ்டார் தனது தலையங்கத்தில் எழுதியிருந்தது.
மேலும், “அந்த இடத்தில் இப்போது பரஸ்பர சந்தேகத்தால் நிரப்பப்பட்ட ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக சதி செய்யும் தப்பியோடியவர்களின் புகலிடமாக இந்தியாவை டாக்கா பார்க்கிறது. மறுபுறம் இந்தியா, தனது அண்டை நாடு பெரும்பான்மைவாத அராஜகத்திற்குள் சிக்குவதாகக் கருதுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு விஷயத்தில் இடைக்கால அரசின் அணுகுமுறையை இந்தியா சந்தேகத்துடன் பார்க்கிறது, டாக்காவின் உறுதிமொழிகள் போதுமானதாக இல்லை என்று நிராகரிக்கிறது.”
ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த விரும்புகிறது.
ஆனால், இந்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இது குறித்து வங்கதேச அரசு பலமுறை தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் மகேந்திர பி. லாமா கூறுகையில், “ஷேக் ஹசீனா பதவியை விட்டு வெளியேறியதில் இருந்து, நாம் அங்கு எங்குமே காணப்படவில்லை. ஷேக் ஹசீனா தவிர வங்கதேசத்தில் வேறு யாருடனும் உறவை மேம்படுத்த நாம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் சீனா முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சீனாவின் உறவுகள் அமைவதில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘இஸ்லாமிய தேசியவாதம்’
பாகிஸ்தான் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டது, பின்னர் மொழி அடிப்படையில் அதிலிருந்து வங்கதேசம் பிரிந்தது. வங்கதேச சுதந்திரத்தின் அடித்தளம் ‘வங்காள தேசியவாதம்’ ஆகும்.
ஆனால் இந்தத் தேசியவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமது அலி ஜின்னா உருது மொழியை பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவித்தபோது, வங்காள தேசியவாதத்தின் விதைகள் விதைக்கப்பட்டன.
இது 1952இல் கிழக்கு பாகிஸ்தானில் மொழிப் போராட்டத்திற்கு வழிவகுத்து, இறுதியில் வங்கதேசத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், தற்போது அந்த மொழி தேசியவாதம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான ஹிமாத்ரி சாட்டர்ஜி கூறுகையில், வங்கதேசத்தில் எப்போதும் ஒரு ‘கலப்புத் தேசியவாதம்’ இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
“வங்கதேசம் வங்காள தேசியவாதம் மூலம் உருவானது, ஆனால் அங்கு இஸ்லாம் மறைந்துவிடவில்லை. வங்காள தேசியவாதத்தை ஆதரித்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே அங்கு ஒரு கலப்புத் தேசியவாதம் இருந்தது.
வங்காள தேசியவாதத்தைக் கொண்டு மட்டுமே வங்கதேசத்தை நிர்வகிக்க முடியும் என்று ஷேக் ஹசீனா நினைத்ததுதான் அவர் செய்த தவறு. வங்கதேசம் விடுதலைப் போர் குறித்த பழைய நினைவுகளில் இருந்து வெகுதூரம் நகர்ந்துவிட்டது என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்,” என்கிறார் பேராசிரியர் சாட்டர்ஜி.

பாகிஸ்தானின் பிரபல அரசியல் ஆய்வாளர் பர்வேஸ் ஹூத்பாய் கடந்த ஆண்டு நவம்பரில் வங்கதேசத்திற்குச் சென்றிருந்தார். அவரும் வங்கதேசத்தில் வங்காள தேசியவாதத்தைவிட இஸ்லாமிய தேசியவாதம் ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்ததாகக் கூறுகிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் பர்வேஸ் ஹூத்பாய், “வங்கதேசத்தில் ஒருவித அமைதியற்ற சூழல் நிலவுகிறது. ஒருபுறம் மொழி அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மதச்சார்பற்ற தேசியவாதம் உள்ளது. இது குறித்து வங்கதேச மக்கள் நீண்ட காலமாகப் பெருமைப்பட்டு வருகின்றனர்.
மறுபுறம், வங்கதேசத்திற்குள் மதரீதியான சக்திகளும் வளர்ந்து வருகின்றன. அவர்கள் வங்கதேசத்திற்கு இஸ்லாமிய தன்மையைக் கொடுக்க முயல்கின்றனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இருப்பினும், வங்கதேச சமூகத்திற்குள் ஒரு வலிமை இருப்பதாக நான் நம்புகிறேன். வங்கதேச பெண்கள் புர்கா அணிவதில்லை, ஆண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். மேலும் பாகிஸ்தானிய பெண்களைவிட நவீனமானவர்களாக இருக்கிறார்கள். வங்கதேசத்தில் கொந்தளிப்பு இருக்கலாம், ஆனால் இஸ்லாமிய சக்திகள் வெற்றி பெறாது. 1971இல் இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்ட அட்டூழியங்களை வங்கதேச மக்கள் மறக்க மாட்டார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு