பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காஸா அமைதி திட்டத்தை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நிலைப்பாட்டை பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாகிஸ்தான் முன்னாள் ராஜ்ஜிய அதிகாரிகளும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இப்படியான சூழலில் பாகிஸ்தான் அரசு தன்னை தற்காக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான இஷாக் தார், காஸாவில் போரை நிறுத்துவதற்கான டிரம்பின் 20 அம்ச திட்டம், இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் முன்வைத்த வரைவு ஆவணத்துடன் ஒத்துப்போகவில்லை என தெரிவித்துள்ளார்.
“டிரம்ப் பொதுவெளியில் வெளியிட்டுள்ள 20 அம்ச திட்டம் வித்தியாசமானது என்பதை தெளிவுபடுத்துகிறேன். வரைவு ஆவணத்தில் இருந்த 20 அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன,” என இஷாக் தார் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பொதுவெளியில் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே டிரம்பின் 20 அம்ச திட்டத்திற்கு ஆதரவளித்தார். அவர் அமெரிக்க அதிபரையும் பாராட்டினார்.
காஸா தொடர்பான தன்னுடைய அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் பாகிஸ்தான் ராணுவ ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீரும் முற்றிலும் ஆதரிப்பதாக செப்டம்பர் 30-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்.
டிரம்பின் அறிவிப்புக்கு சற்று முன்னதாக இருவரும் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் எதிர்ப்பு
அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதி, காஸாவுக்கான டிரம்பின் அமைதி திட்டத்தை ஆதரிப்பது, இஸ்ரேல் மீதான பாகிஸ்தானின் நீண்ட கால நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றார்.
“இதற்கு பாகிஸ்தானில் எதிர்மறையான கருத்துகள் வருகின்றன,” என ஜெர்மன் ஊடகமான டி.டபிள்யூ-க்கு மலிஹா லோதி தெரிவித்தார்.
“டிரம்பின் அமைதி திட்டம் தெளிவற்றதாகவும், பல வழிகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான போதுமான உறுதிப்பாடு அதில் இல்லை. அதனால் தான் இங்குள்ள (பாகிஸ்தான்) மக்களும் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிராக உள்ளனர்.”
டிரம்பின் 20 அம்ச திட்டத்தில் 15வதாக, காஸாவை பாதுகாப்பதற்காக சர்வதேச ஸ்திரப்படுத்தும் படை (ஐஎஸ்எஃப்) நிறுத்தப்படும் எனவும் போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் இதுகுறித்து பாகிஸ்தானில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பாகிஸ்தானும் தன் ராணுவத்தை ஐஎஸ்எஃப் படைக்கு அனுப்புமா? அவ்வாறு ராணுவத்தை அனுப்புமாறு கூறினால் பாகிஸ்தான் என்ன செய்யும்?
“ராணுவத்தை அனுப்புமாறு பாகிஸ்தானிடம் கேட்கும் பட்சத்தில், பாகிஸ்தான் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் என நம்புகிறேன்,” என டி.டபிள்யூவிடம் மலிஹா லோதி கூறினார்.
“ஹமாஸின் அனைத்து ஆயுதங்களையும் அழிப்பதில் ஐஎஸ்எஃப் படை ஈடுபடுவதையோ அல்லது தன் பாதுகாப்பு வளையத்தையும் நிலைநிறுத்த இஸ்ரேலுக்கு உதவுவதையோ பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டான் (Dawn) பத்திரிகையில் மலிஹா லோதி எழுதுகையில், “ஐஎஸ்எஃப் குறித்த அனைத்து தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயுதக் குறைப்பு நடவடிக்கையிலும் ஐஎஸ்எஃப் ஈடுபடுமா? அதன் பணிகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ஹமாத்-இ-இஸ்லாமியின் எச்சரிக்கை
பாகிஸ்தானின் ஹமாத்-இ-இஸ்லாமி, டிரம்பின் காஸா அமைதி திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்துள்ளது. கடந்த வாரம், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் ஹஃபீஸ் நயிமுர் ரெஹ்மான், டிரம்பின் அறிவிப்பு காலனியாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.
இஸ்ரேலை அங்கீகரிப்பது குறித்து இன்னும் ஒரு படி முன்னெடுத்து வைத்தாலும், அனைத்து மட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என, அவர் பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரெஹ்மான், “முகமது அலி ஜின்னாவின் நிலைப்பாட்டுக்கும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கும் எதிராக யாராவது முடிவெடுத்தால், அது ஒடுக்கப்பட்ட பாலத்தீனர்களின் ரத்தத்துடன் பேரம் பேசுவதாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கருதப்படும்,” என்றார்.
மற்றொருபுறம், ஜமியத் உலெமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தலைவர் மௌலானா ஃபஸ்லர் ரெஹ்மான், டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை கடந்த வார செவ்வாய்கிழமை நிராகரித்தார்.
பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது மற்றும் ஜெருசலேமுக்கு விடுதலை அளிப்பதை விட இஸ்ரேலின் விரிவாக்கத்திற்கான நடவடிக்கையாகவே இது மாறும் என அவர் கூறினார்.
டிரம்பின் காஸா அமைதி திட்டம் மீதான பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து மௌலானா ஃபஸ்லர் ரெஹ்மான் கூறுகையில், “பிரதமர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் இருவரும் தங்களுடைய முந்தைய கருத்துகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள முரண்கள் அப்போது வெளிப்படும்.” என்றார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரிக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் டிரம்பின் திட்டத்தை எதிர்த்துள்ளது.
அக்கட்சியின் தகவல் தொடர்பு செயலாளர் ஷேய்க் வகாஸ் அக்ரம் தன் எக்ஸ் பக்கத்தில், “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பது மற்றும் சிரியாவின் கோலன் குன்றுகளை இஸ்ரேலிய் பகுதியாக அங்கீகரிப்பது ஆகியவை சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஐ.நா. தீர்மானங்கள் மீதான அப்பட்டமான விதிமீறலாகும்,” என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பை சமாதானப்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள்
பாகிஸ்தானின் தற்போதைய அரசு டிரம்பை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது, இது அங்கு அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கூறிவருகிறது. காஸாவில் இஸ்ரேலின் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் டிரம்ப் ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆயுதங்களையும் வழங்கிவருகிறார்.
பாகிஸ்தானின் பிரபலமான பாதுகாப்பு ஆய்வாளரான ஆயிஷா சித்திகா கடந்த மாதம், இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்பை திருப்திப்படுத்த ஷெபாஸ் ஷெரீஃப் அல்லது பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் செல்லாது என்றார்.
அவர் கூறுகையில், “பாலத்தீன விவகாரத்தில் அரபு முஸ்லிம்களை விட பாகிஸ்தான் மக்கள் உறுதியாக உள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக சாயும் எந்தவொரு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ஆட்சியில் நீடிப்பது கடினமானது,” என்றார்.
தன்னுடைய முதலாவது ஆட்சிக்காலத்தில், இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, சூடான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றார் டிரம்ப்.
மற்றொருபுறம், 1979-ஆம் ஆண்டில் எகிப்து இஸ்ரேலை அங்கீகரித்தது, ஜோர்டான் 1994-ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. எனினும், இஸ்ரேல் விவகாரத்தில் பாகிஸ்தான் மிகவும் ஆக்ரோஷமாக இருந்துள்ளது, தேர்தல் அரசியலில் இது மக்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளதாக, அதன் முந்தைய அரசாங்கங்கள் கருதின.
இஸ்ரேல் மற்றும் இரான் போரால் பாகிஸ்தானின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் குறித்து தெளிவின்மை நிலவுகிறதா?
இந்த விவகாரத்தில் இரானுக்கு உதவுவதிலிருந்து பாகிஸ்தான் விலகியிருப்பதையே மேற்கத்திய நாடுகள் விரும்பும், ஆனால், பாகிஸ்தான் தங்களுடன் இருப்பதையே இரான் விரும்புகிறது.
பனிப்போர் காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தது. இரானுக்கு ஆதரவாக இருப்பது அந்நாட்டுக்கு கடினமானது.
இஸ்ரேலுடன் பாகிஸ்தானுக்கு எவ்வித சச்சரவுகளோ மோதல்களோ இல்லை, ஆனாலும் இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. அரபு நாடுகளுடன் இஸ்லாமிய ஒற்றுமையை வெளிப்படுத்தவே பாகிஸ்தான் அவ்வாறு செய்கிறது.
ஆனால், இஸ்ரேலுடன் சில அரபு நாடுகளே நெருக்கமான நிலையில், அதனுடன் உறவை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2020-ஆம் ஆண்டு இதற்கான பதிலை அளித்தார்.
“மற்ற நாடுகள் என்ன செய்தாலும் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. முகமது அலி ஜின்னா 1948-ஆம் ஆண்டில், ‘பாலத்தீனர்கள் தங்கள் உரிமைகளை பெறும் வரை, நாங்கள் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள மாட்டோம்,’ என கூறினார்” என்று இம்ரான் கான் தெரிவித்தார்.
இஸ்ரேலை அங்கீகரித்தால் அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவுகள் மேம்படும் என பலரும் வாதிடுகின்றனர். எனினும், சாமானிய பாகிஸ்தான் மக்களிடம் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை, அடிக்கடி தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு சென்றுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறுகையில், இஸ்ரேலும் பாலத்தீனமும் அமைதி ஒப்பந்தத்தை எட்டினால், இஸ்ரேலுடன் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை ஏற்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி கடந்த 2005-ஆம் ஆண்டு, இஸ்ரேலின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சில்வன் ஷாலோமை இஸ்தான்புல்லில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு, துருக்கியின் தற்போதைய அதிபர் எர்துவான் ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு பாகிஸ்தானில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குர்ஷித் கசூரியுடனான சந்திப்புக்கு பின் பேசிய சில்வன் ஷாலோம், “எங்களின் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகளுக்கு மட்டும் இந்த பேச்சுவார்த்தை முக்கியமானது அல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்திற்கே முக்கியம். அரபு இஸ்லாமிய நாடுகளை போன்றே, பாகிஸ்தானுடனும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை விரும்புகிறோம்,” என்றார்.
பாகிஸ்தானில் இஸ்ரேல் ஓர் எதிரியாக பார்க்கப்படும் நிலையில், அந்நாட்டில் நிலவும் கோபம், இஸ்ரேலில் காணப்படவில்லை. 2018-ஆம் ஆண்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தந்தார்.
அப்போது, நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் பாகிஸ்தானின் எதிரி அல்ல, அதேபோன்று எங்களுக்கும் பாகிஸ்தான் எதிரி அல்ல,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு