பட மூலாதாரம், X/@ACBofficials
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று வீரர்கள் தவிர, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா இந்தச் சம்பவம் தொடர்பாக தனது இரங்கலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் பேசியதாக தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரங்கல் தெரிவித்த ஜெய் ஷா
பட மூலாதாரம், Getty Images
ஐசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள இன்று (அக்டோபர் 18) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அர்த்தமற்ற வன்முறையால் அவர்களது கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “இத்தகைய திறமையான வீரர்களின் இழப்பு ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு கிரிக்கெட் உலகிற்கும் ஒரு பெரும் சோகமாகும். இத்தகைய துயரமான சூழலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், நாங்கள் துணை நிற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரான் கூறியது என்ன?
பட மூலாதாரம், EPA
இந்நிலையில், தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் பேசியதாக தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாக முத்தாகி கூறியுள்ளார்.
“ஆப்கானிஸ்தான் போரை ஆதரிக்கவில்லை என்று முத்தாகி கூறினார், ஆனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி போரைத் தொடங்கியுள்ளது” என்று தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
தாலிபன் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் இன்று (அக்டோபர் 18) தோஹாவில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் முத்தாகி கூறினார்.
“ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடங்கியது, திருப்தி அளிப்பதாக உள்ளது” என இரானிய வெளியுறவு அமைச்சகம் ஒரு டெலிகிராம் செய்தியில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களைக் குறிப்பிட்டு, “இந்தப் பிரச்னை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்” என இரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் இரங்கல்
“வீரர்கள் மீதான மதிப்பு மற்றும் இந்த துயர சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, நவம்பர் மாத இறுதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்” என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நவம்பர் 17 முதல் 29 வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது.
மூன்று வீரர்களின் மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை “சோகம்” என்று ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார். “பொதுமக்களைக் குறிவைப்பது முற்றிலும் கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அநீதியான நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகும்.” என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக ரஷித் கான் கூறினார்.
குல்புதீன் நயீப் இந்தத் தாக்குதலை “பாகிஸ்தான் இராணுவத்தின் கொடூர செயல்” என்று கூறினார். “இது நமது மக்கள், பெருமை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஆனால் இது ஆப்கானிஸ்தானின் உணர்வை ஒருபோதும் உடைக்காது.” என்று அவர் கூறினார்.
பிபிசி பஷ்டூ சேவையின் கூற்றுப்படி, முகமது நபி, “இந்தச் சம்பவம் பக்டிகாவிற்கு மட்டுமல்ல, முழு கிரிக்கெட் குடும்பத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் மிகவும் சோகமான சம்பவம். அவர்களது தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Chris Hyde-ICC/ICC via Getty
தாலிபன் கூறியது என்ன?
ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தின் மீது வெள்ளிக்கிழமை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியிருப்பதாக தாலிபன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தாலிபன் அரசாங்கத்தின் மாகாண அதிகாரி ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் வெள்ளிக்கிழமை, “பக்டிகா மாகாணத்தின் அர்குன் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பாகிஸ்தான் குண்டுவீசித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர்.” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை தொடங்கியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த தாலிபன் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பக்டிகாவில் மூன்று இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்கும்,” என்று அவர் கூறினார்.
போர் நிறுத்த மீறல்கள் அல்லது ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்தும் பாகிஸ்தானிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார். பல மோதல்களுக்குப் பிறகு புதன்கிழமை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. கத்தாரின் மத்தியஸ்தத்தின் கீழ் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு