பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
காபூலில் நடந்த வான்வழி தாக்குதல்கள் உட்பட பகைமை கடுமையாக தீவிரமடைந்த பிறகு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இது, சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது.
எல்லைப் பகுதியில் வன்முறை ஏற்படுவது புதிதல்ல. 2021 ஆகஸ்டில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் டிடிபி (தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) தொடர்புடைய செயல்பாடுகள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாகிஸ்தானும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கான் மண்ணில் பத்துக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் 2014 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கை சர்ப்-இ-அஸ்ப்-க்குப் (Zarb-e-Azb) பிறகு, முன்னாள் பழங்குடிப் பகுதிகளில் இருந்து பல குடும்பங்கள் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிச் சென்று, எல்லையில் குடியேறினர்.
தாலிபன் அரசு அவர்களை எல்லாம் இழந்த அகதிகள் என்று விவரிக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அவர்களில் பலரை டிடிபி போராளிகளாகப் பார்க்கிறது. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காபூலுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக, அமெரிக்காவால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட டிடிபி போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தாலிபன் அரசு தொடர்ந்து மறுத்து வந்தாலும், உறுப்பு நாடுகளின் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்ட 2025 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் அறிக்கை, இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து தளவாட மற்றும் செயல்பாட்டு ஆதரவைப் பெறுவதாகக் கூறுகிறது.
இஸ்லாமாபாத்தின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தாலிபன் அரசு சிலரை எல்லைப் பகுதிகளில் இருந்து இடமாற்றம் செய்ததாகவும், தனது வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபடவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என்றும் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் திருப்தியடையாத பாகிஸ்தான் டிடிபி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.
டிடிபி-க்கு எதிராக தாலிபன் அரசாங்கத்தின் தெளிவான நடவடிக்கை எடுக்காத போக்கு, மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து இந்த பிரச்னையை உலகளாவிய தளங்களில் முன்னிலைப்படுத்துவது, அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு உறுதியான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பல அடிப்படை காரணிகள் இந்த பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
பொதுவான சித்தாந்தம்
ஆப்கானிஸ்தானில் அமைதியை மீட்டெடுப்பதாகவும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதாகவும் உறுதியளித்து தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்தது. டிடிபி-யும் இந்தக் குறிக்கோளைப் பகிர்ந்து கொள்கிறது. அதாவது, பாகிஸ்தானில் ஷரியா அடிப்படையிலான அமைப்பை நிறுவ முற்படுகிறது.
இரண்டு குழுக்களும் ஜிஹாத்தை ஒரு மத கடமையாக வலியுறுத்தும் தியோபந்தி சன்னி இஸ்லாம் பிரிவை பின்பற்றுகின்றன. இருப்பினும், இந்த நம்பிக்கை தியோபந்திகளுக்கு மட்டுமே உரியது அல்ல.
“ஆப்கான் தாலிபனின் முக்கிய பிரமுகர்கள் டிடிபி-யை சித்தாந்த ரீதியான கூட்டாளிகளாகப் பார்க்கின்றனர். இது 1980கள் மற்றும் 1990களில் இருந்து பகிரப்பட்ட வரலாறு மற்றும் நெருங்கிய உறவுகளில் வேரூன்றியுள்ளது. பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து, பரஸ்பர செல்வாக்கால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சித்தாந்தப் பிணைப்பு காரணமாக, தாலிபன்கள் டிடிபி-க்கு எதிராகச் செயல்படத் தயங்குவதில் ஆச்சரியமில்லை,” என ஆப்கான் அரசியலில் ஒரு முன்னணி அறிஞரான வில்லியம் மாலே கூறுகிறார்.
“டிடிபி மற்றும் ஆப்கான் தாலிபன் சித்தாந்த ரீதியான உறவினர்கள். தாலிபனுக்குள், டிடிபி-க்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரிவுகள் உள்ளன, குறிப்பாக பாகிஸ்தான் சிறைகளில் இருந்தவர்கள் அல்லது குவாண்டனாமோவுக்கு அனுப்பப்பட்டவர்கள்” என முன்னாள் தூதரும், பாகிஸ்தானின் காபூலுக்கான சிறப்புத் தூதருமான ஆசிஃப் துரானி சொல்கிறார்.
ஆப்கான் தாலிபனுக்குப் பாகிஸ்தான் நீண்ட காலமாக புகலிடம் அளித்த கொள்கை பொறுப்பற்றது என்றும், அது தற்போதைய ஆயுதக்குழுக்களின் எழுச்சி போன்ற எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தன்னுள் கொண்டிருந்தது என்றும் மாலே வாதிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மேற்குலகிற்கு எதிரான பொதுவான போராட்டத்தின் வரலாறு
ஆப்கான் தாலிபன் மற்றும் டிடிபி ஆகிய இரண்டு குழுக்களும் தங்களது பிராந்தியத்தில் மேற்குலகின் செல்வாக்கையும் ராணுவ இருப்பையும் எதிர்த்தன. மேலும், பாகிஸ்தான் அரசாங்கத்தை மேற்குலக சக்திகளுடன் கூட்டணி வைத்திருப்பதாகப் பார்க்கின்றன.
ஆப்கான் தாலிபன் மற்றும் டிடிபி ஆகிய இரண்டிற்கும், மேற்குலகிற்கு எதிராகப் போராடுவது என்பது நம்பிக்கை அற்றவர்களுக்கு எதிரான ஒரு மதப் போராக கருதப்படுகிறது. மதச்சார்பற்ற நிர்வாகத்தையும் மேற்குலக விழுமியங்களையும் திணிக்க முயலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான ஒரு அரசியல் போர் என்றும் கட்டமைக்கப்பட்டது.
டிடிபி மற்றும் ஆப்கான் தாலிபன் ஆகிய இரண்டும் அல் கொய்தாவுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன. இருப்பினும், டிடிபி-யின் உறவு அல் கொய்தாவுடன் நெருக்கமாக இருந்தது, மேலும் சில சமயங்களில் சர்வதேச அபிலாஷைகளையும் உள்ளடக்கியிருந்தது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு மாறாக, ஆப்கான் தாலிபன் தனது போரை ஆப்கானிஸ்தானிற்குள் மட்டும் மையப்படுத்தியது.
டிடிபி மற்றும் ஆப்கான் தாலிபன் ஆகிய இரண்டும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராகப் போரிட ஒருவருக்கொருவர் உதவி செய்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரும், கிளர்ச்சிக் குழும வலையமைப்புகளில் நிபுணருமான வண்டா ஃபெல்பாப்-பிரவுன் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு, தாலிபன் மற்றும் டிடிபி-யின் உறவு பகிரப்பட்ட புவியியல் மற்றும் தளவாடங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வலியுறுத்துகிறார்.
பாகிஸ்தானில் உள்ள புகலிடங்களில் இருந்து செயல்படும்போது ஹக்கானி பிரிவினர் நீண்ட காலமாக டிடிபி வலையமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனர். இது துண்டிக்க முடியாத நீண்டகால நேரடி மற்றும் செயல்பாட்டுத் தொடர்புகளை உருவாக்கியது என்று அவர் குறிப்பிடுகிறார்.
டிடிபி மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அது இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்துடன் (ISKP) ஒரு கூட்டணிக்குத் தள்ளப்படலாம் என்று தாலிபன் அரசில் உள்ள ஹக்கானி பிரிவினர் அஞ்சுகிறார்கள் என்பதையும் ஃபெல்பாப்-பிரவுன் சுட்டிக்காட்டுகிறார். ஐ.எஸ்.கே.பி-யை அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் கடந்தகால நடவடிக்கைகளை இரட்டை வேடமாகப் கருதும் தாலிபன், டிடிபியின் நடவக்கைகளால் ஒரு “இனிமையான நீதி”யைப் பெற்ற உணர்வு இருப்பதை அவர் எடுத்துரைக்கிறார்.
இதில் முல்லா பரதார் போன்ற மூத்த பிரமுகர்களைச் சிறையில் அடைத்தது மற்றும் தாலிபன் தலைவர் முல்லா மன்சூரை அமெரிக்கா கொல்வதில் பாகிஸ்தானின் பங்கு ஆகியவையும் அடங்கும்.
தங்களது சித்தாந்த ரீதியான உறவினர்களாக மட்டுமல்லாமல், பாகிஸ்தானிய செல்வாக்கிற்கு ஒரு உத்தி ரீதியான எதிர் சமநிலையாகவும் பார்க்கும் டிடிபிக்கு எதிராக தாலிபன் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதை இந்த உணர்வு மேலும் வலுப்படுத்துகிறது.
இருப்பினும், மற்றொரு கருத்துப்படி, தாலிபன் அரசாங்கம் டிடிபி-யின் செயல்பாடுகளை பாகிஸ்தானின் உள்விவகாரமாகவே கருதுகிறது. மேலும், அது தனக்குத்தானே புதிய எதிரிகளை உருவாக்குவதைத் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறது.
ஐ.எஸ்.கே.பியைப் போலல்லாமல், டிடிபி நேரடியாக ஆப்கான் தாலிபனின் அதிகாரத்திற்குச் சவால் விடவில்லை. டிடிபி ஒரு சித்தாந்த ரீதியான அல்லது வன்முறை அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வரை, தாலிபன் அரசாங்கம் அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க எந்தவித நியாயத்தையும் காணாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதன் காரணமாகவே, ஆப்கான் தாலிபன் டிடிபி-யை பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்துவதாகத் தெரிகிறது. மேலும், மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் வலியுறுத்துகிறது.
பஷ்டூன் சமூகங்கள் மீதான செல்வாக்கைப் பராமரித்தல்
ஆப்கான் தாலிபன் மற்றும் டிடிபி ஆகிய இரண்டும் முக்கியமாக ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஷ்டூன் மக்களிடையே இருந்து தோன்றின.
தாலிபன் 1990களின் நடுப்பகுதியில் மதப் பள்ளிகளிலிருந்து உருவானது. அதேசமயம், டிடிபி 2007 இல் பாகிஸ்தானின் மத்திய நிர்வாகத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் (FATA) ஒன்று சேர்ந்த போராளிக் குழுக்களின் கூட்டணியாக உருவாக்கப்பட்டது.
பஷ்டூன்கள் மற்றும் அடுத்தடுத்த ஆப்கான் அரசாங்கங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான எல்லையான துராந்த் கோட்டை அங்கீகரிக்கவில்லை. பிரிட்டிஷார் 1893 இல் தங்கள் பிரதேசங்களுக்கும் ரஷ்ய விரிவாக்கத்திற்கும் இடையே ஒரு இடையக மண்டலமாக துராந்த் கோட்டை உருவாக்கினர். ஆனால், இந்தக் கோடு எல்லை முழுவதும் உள்ள பஷ்டூன் இன சமூகங்களைப் பிரித்தது என்பதே உண்மை.
டிடிபி-ஐ ஆதரிப்பதன் மூலம், தாலிபன் அரசாங்கம் பஷ்டூன் சமூகங்களில் வேரூன்றிய போராளிக் குழுக்கள் வழியாக, பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முற்படுகிறது.
பல டிடிபி உறுப்பினர்கள் இந்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் அந்தக் குழு அங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான செல்வாக்கை பேணுகிறது. பரந்த இஸ்லாமிய எமிரேட்டுக்கான தனது பார்வையை முன்னெடுப்பதில் தாலிபனுக்கு இந்த உண்மை, டிடிபியை ஒரு பயனுள்ள கூட்டாளியாக உணர்த்துகிறது.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் மீதான அவநம்பிக்கை
தாலிபன் அரசாங்கத்தின் இஸ்லாமாபாத்துடனான உறவு டிடிபி பிரச்னைக்கு அப்பாற்பட்டது என்றாலும், தனது கொள்கைகளில் சுதந்திரத்தை வலியுறுத்துவதிலும், அதன் சொந்த அடையாளத்தை வடிவமைப்பதிலும் அது ஆர்வம் கொண்டுள்ளது என்று பல பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
“பாகிஸ்தானுடன் அதிக நட்பு பாராட்டுவதாகத் தோன்றும் காபூலில் உள்ள எந்தவொரு நிர்வாகமும் ஒரு கைப்பாவை என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது. இது உள்நாட்டு எதிர்ப்பைத் தூண்டி, அதன் சட்டபூர்வமான தன்மையை பலவீனப்படுத்தும்,” என்று ஆய்வாளர் சமி யூசுஃப்சாய் குறிப்பிடுகிறார்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆப்கான் விவகாரங்களில் ஒரு எதிர்மறையான பாத்திரத்தை வகித்துள்ளது என்ற பரவலான உணர்வையும் யூசுஃப்சாய் ஒப்புக்கொள்கிறார். இதில் 1970களில் ஆப்கான் இஸ்லாமியர்களுக்கும், பின்னர் 1980களில் சோவியத் போரின்போது முஜாஹிதீன் பிரிவினருக்கும் ஆதரவளித்தது, 1990களில் உள்நாட்டுப் போரின்போது தாலிபனுக்கு ஆதரவளித்தது மற்றும் 2001 முதல் அமெரிக்க தலையீட்டின் போது ஆதரவளித்தது ஆகியவையும் அடங்கும்.
ஆப்கான் பொதுவெளியில் பாகிஸ்தான் ஒரு நட்பு அண்டை நாடாக மட்டுமல்லாமல், மோதலைத் தூண்டியும், கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் அளித்தும், ஆப்கான் இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் நாடாகவும் பார்க்கப்படுகிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல் சையத், ஆப்கான் தாலிபன் டிடிபி-ஐ ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதவில்லை என்றும், பாகிஸ்தானில் அதன் தாக்குதல்களை பகிரங்கமாகக் கண்டிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்றும் கூறுகிறார்.
மாறாக, தாலிபன் டிடிபி பிரச்னையை பாகிஸ்தானின் உள்விவகாரமாகவே கட்டமைக்கிறது. மேலும், அந்தக் குழுவின் எழுச்சி இஸ்லாமாபாத்தின் 9/11 க்குப் பிந்தைய கொள்கைகளின் விளைவாகும் என்று வாதிடுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு