பட மூலாதாரம், Getty Images
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் நடுநிலையாக இருப்பதாகத் தோன்றும் வேளையில் துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்கள் ஆதரவை வெளிப்படையாக வெளிப்படுத்தின.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னையில் பாகிஸ்தானுக்கு துருக்கி வெளிப்படையாக ஆதரவளித்தால், இஸ்ரேல் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.
இரு நாடுகளுக்கு இடையிலான சண்டைநிறுத்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் துருக்கி, இந்த வாய்ப்பை இரு நாடுகளும் நேரடி மற்றும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
டிரோன்களுக்காக துருக்கியை பாகிஸ்தான் நாடுகிறது என்று இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. அதேபோல, இஸ்ரேலிய டிரோன்கள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறியிருந்தது.
துருக்கி அதிபர் எர்டோகன் வியாழக்கிழமை பேசியபோது, பாகிஸ்தான் மக்கள் தங்கள் சகோதரர்கள் என்றும், அவர்களுக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருந்தார்.
துருக்கி விமானப்படையின் சி-130 ஜெட் விமானம் பாகிஸ்தானுக்கு இந்த வாரம் வந்தது. எரிபொருள் நிரப்புவதற்காகவே விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. அதுமட்டுமல்ல, கடந்த வாரத்தில் துருக்கியின் போர்க்கப்பல் ஒன்றும் கராச்சி துறைமுகத்திற்கு வந்தது. அது, பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது என்று துருக்கி கூறியது.
துருக்கியின் விமானமும், போர்க்கப்பலும் பாகிஸ்தானுக்கு வந்த சமயத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்திருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
வியாழக்கிழமையன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய 300 – 400 டிரோன்கள் துருக்கி நாட்டினுடையது என இந்திய ராணுவம் கூறியது.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்ற பின், அவர் பல நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் துருக்கிக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்பது, இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமானதாக இல்லை என்பதை உணர்த்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஒத்துப்போகும் கருத்தியல்
துருக்கி பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக உதவுவதற்கான காரணம் என்ன என்று செளதி அரேபியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் தல்மிஸ் அகமதுவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இஸ்லாமின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் சித்தாந்த ரீதியாக நெருக்கத்தைக் கொண்டுள்ளது துருக்கி என்பதைத் தவிர, பனிப்போரில் துருக்கியும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் பங்காளிகளாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகவும் ஆழமானது. பாகிஸ்தான் ஜெனரல்களில் பலர் துருக்கியுடன் தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார்.
“பாகிஸ்தானுடனான பழைய உறவை தற்போது எர்டோகன் மேலும் வலுப்படுத்தி வருகிறார் என்று நினைக்கிறேன். தன்னை ஒரு இஸ்லாமியத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டு இஸ்லாமிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் எர்டோகன். அவர், காஷ்மீர் பிரச்னையை அவ்வப்போது எழுப்பி அதனை இஸ்லாமியப் பிரச்னையாக முன்வைக்கிறார். பாகிஸ்தானுடன் நிற்பதை துருக்கி தெளிவுபடுத்தியுள்ளது” என்று அவர் விளக்குகிறார்.
“மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான சக்திகளில் ஒன்றான துருக்கி, பாகிஸ்தானுடனும், மற்றொன்றான இஸ்ரேல் இந்தியாவுடனும் உள்ளன. எர்டோகனின் வருகைக்குப் பிறகே இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இஸ்லாம் நுழைந்தது. ஆனால் அதற்கு முன்னரே, 1950 முதல் பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் ஆழமாக உள்ளன. இப்போது அது ஒரு முக்கிய இடத்தை அடைந்துள்ளது என்பது சுவராஸ்யமானது” என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.
மதம் மற்றும் சித்தாந்தத்தில் நெருக்கம் இருந்து, வேறு எந்தவித நன்மைகளும் இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர முடியுமா? என்ற கேள்வியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துக்கான இந்திய தூதராக இருந்த நவ்தீப் சூரியிடம் கேட்டோம்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நவ்தீப் சூரி, “துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சித்தாந்த ரீதியிலான நெருக்கம் மட்டும் இல்லை, பாகிஸ்தானின் பாதுகாப்பு சந்தை முழுவதும் துருக்கியிடம் உள்ளது” என்று கூறினார்.
“இதன் மூலம், துருக்கி இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் தான் நிற்பதாக இஸ்லாமிய நாடுகளிடையே காட்ட முயற்சிக்கும். நீண்ட காலமாக இஸ்லாமிய உலகிற்கு தலைமையேற்க துருக்கி முயற்சித்து வருகிறது. ஆனால், துருக்கிக்கு போட்டியாக செளதி அரேபியா இருக்கிறது” என்று நவ்தீப் சூரி கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய உலகில் தலைமைத்துவ போட்டி
செளதி அரேபியாவில் மெக்கா, மதீனா போன்ற இஸ்லாமிய புனிதத்தலங்கள் உள்ளன, அதே நேரத்தில் ஒட்டோமான் பேரரசின் பரந்த பாரம்பரியத்தைக் கொண்டது துருக்கி. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (Organization of Islamic Cooperation (OIC)) செளதி அரேபியா ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால், எர்டோகன் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஒரு அமைப்பை உருவாக்க முயன்றார்.
அதற்கான முயற்சியில் ஒருபகுதியாக, எர்டோகன் 2019 டிசம்பரில் மலேசியா, இரான் மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து முன்முயற்சி எடுத்தார். இந்த விஷயத்தில், பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை போட்டது செளதி அரேபியா. செளதி அரேபியா ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு மட்டுமே பாகிஸ்தான் துருக்கியுடன் ஒத்துழைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு என்ற காரணத்தால், இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் உண்டு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் துருக்கிக்கு ராணுவ ஒத்துழைப்பு இருக்கும் நிலையில், தற்போது இஸ்லாம் என்ற மத அபிமானமும் சேர்ந்துவிட்டது என்று தல்மிஸ் அகமது நம்புகிறார்.
“இஸ்லாம் என்பது சந்தர்ப்பவாத முழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று கூறும் தல்மிஸ் அகமது, “நன்மைகள் என்று வரும்போது, அவர்கள் இஸ்லாத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் புவிசார் அரசியலில் தங்கள் நாட்டுக்கு பாதகமாக இருந்தால், இஸ்லாம் என்ற முழக்கம் பின்தங்கிவிடும். துருக்கிக்கு இஸ்லாத்தில் தற்காலிக ஆர்வம் இருப்பதாக நினைக்கிறேன். ஒட்டோமான் பேரரசைப் போலவே மேற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த துருக்கி விரும்புகிறது. எனவே துருக்கி பாகிஸ்தானை ஒரு முக்கியமான கூட்டாளியாகப் பார்க்கிறது” என்று விளக்குகிறார்.
பாகிஸ்தானுடனான துருக்கியின் நெருக்கம் இந்தியாவிற்கு பின்னடைவா? என்ற கேள்விக்கு, “இந்தியாவுடன் ஒருபோதும் துருக்கி சுமூகமாக இருந்ததில்லை. காஷ்மீர் பிரச்னையில் எப்போதும் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் போக்கைக் கொண்டுள்ளது துருக்கி. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் இஸ்ரேல், செளதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளன. இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் இணக்கமாக உள்ளன” என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு முக்கியமான நாடு துருக்கியா அல்லது செளதி அரேபியாவா?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா என இரு நாடுகளுக்குமே செளதி அரேபியா ஒரு முக்கியமான நாடு என்று தல்மிஸ் அகமது கூறுகிறார். கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாகிஸ்தானை பலமுறை செளதிஅரேபியா மீட்டுள்ளது. செளதி அரேபியா உதவிய அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஒருபோதும் துருக்கி உதவியதில்லை என்பதால், தனது ஒத்துழைப்பு பாகிஸ்தானுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை செளதியும் அறிந்திருக்கிறது.
இந்தியாவுடன் மிகவும் இணக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது செளதி அரேபியா. இந்த இரு நாடுகளுக்குமான உறவில் அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன. ஆனால், இந்த உறவில் இல்லாத ஒரு விஷயம் என்றால், அது செளதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் இந்தியா அளிக்காததுதான். இது எப்போதும் முடியாத விஷயமாகவும் இருக்கலாம் என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.
துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று நவ்தீப் சூரி கூறுகிறார். “உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகள் உள்ளன, அதில் பாகிஸ்தானுடனான துருக்கியின் தொடர்பை ஒரு பெரிய விஷயமாக கருதத் தேவையில்லை. இஸ்லாம் குறித்து எர்டோகனுக்கு உள்ள நிலைப்பாடு உலகிற்கே தெளிவாகத் தெரிந்தது தான்” என்று நவ்தீப் சூரி கருதுகிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் பதற்றத்தைக் குறைக்க வேண்டுகோள் விடுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC), காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை ஆதரித்தது. கடந்த புதன்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தபோது, இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான பிரச்சினையாக காஷ்மீர் விவகாரத்தை இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு விவரித்திருந்தது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.
இஸ்லாம் தொடர்பு
சர்வதேச அளவில், துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒற்றுமை பல தசாப்தங்களாக தொடர்கிறது. இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளில் பரஸ்பரம் ஆதரவளித்து வருகின்றன. அஜர்பைஜான் தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கம் உள்ளது.
துருக்கி, பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையேயான நட்பு என்பது ஆர்மீனியாவிற்கு சுமையாக இருக்கும். ஆர்மீனியாவை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பகுதியை அஜர்பைஜான் உரிமை கோருகிறது. அதை பாகிஸ்தானும், துருக்கியும் ஆதரிக்கின்றன. அதேபோல, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை துருக்கி ஆதரிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 2020 இல், துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கியர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆட்சி செய்ததை பெருமையுடன் கூறினார்.
“உங்கள் வருகை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் துருக்கியுடனான உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். துருக்கியர்கள் 600 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர்” என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.
இம்ரான் கானின் இந்த பெருமிதமான கருத்து குறித்து பாகிஸ்தானின் பிரபல வரலாற்றாசிரியர் முபாரக் அலியிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “இம்ரான் கானுக்கு வரலாறு தெரியாது, அவர் சரித்திரத்தை மதத்தின் வழியாகப் பார்க்கிறார் என்று தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏகாதிபத்திய அமைப்பு பற்றி யாராவது இவ்வளவு புகழ்ந்து பேச முடியுமா? அந்த ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இம்ரான் கான் இப்படி சொல்கிறாரா?” என்று கூறினார்.
1980களில் பாகிஸ்தானை ஆண்ட ராணுவ சர்வாதிகாரி ஜியா உல்-ஹக், “பாகிஸ்தான் ஒரு சித்தாந்த நாடு… பாகிஸ்தானில் இருந்து இஸ்லாத்தை அகற்றி மதச்சார்பற்ற நாடாக மாற்றினால், அது சிதைந்துவிடும்” என்று கூறியிருந்தார். துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கம், இந்தக் கருத்தியல் கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகிறது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு