பட மூலாதாரம், @CMShehbaz
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த நிகிதா எஸ். குருஷ்சேவ் 1955-ல் ஸ்ரீநகருக்கு வந்தார். அப்போதைய ஜம்மு-காஷ்மீர் பட்டத்து இளவரசர் கரண் சிங் அவரை அழைத்திருந்தார்.
இந்த பயணத்தின் போது, நிகிதா குருஷ்சேவ், பாகிஸ்தான் தன்னையும் சோவியத் யூனியனின் பிரதமர் நிகோலாய் புல்கானினையும் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
“கரண் சிங்கின் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், கராச்சியில் உள்ள சோவியத் தூதரிடம் வலியுறுத்தியது,” என நிகிதா குருஷ்சேவ் கூறினார்,
பாகிஸ்தானின் செயல் குறித்து கூறிய குருஷ்சேவ், “இது தீய எண்ணத்தால் செய்யப்பட்ட செயல். பாகிஸ்தான் தனது தோள்களில் அதிக பொறுப்பை ஏற்றிக்கொள்கிறது. இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தானின் முன்னெப்போதும் இல்லாத தலையீடு ஆகும். என்ன செய்ய வேண்டும், யாரை நண்பராக்க வேண்டும் என்று எங்களிடம் கூற எந்த நாட்டுக்கும் துணிச்சல் இருந்ததில்லை. இந்தியாவுடன் எங்களுக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது.” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த பயணத்தின் போது, குருஷ்சேவ் காஷ்மீர் பிரச்னை குறித்து விரிவாகப் பேசினார். காஷ்மீர் குறித்து அவர் கூறுகையில், “காஷ்மீர் பிரச்னையை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டும் நாடுகளின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் அவை பிரபலமான பெயர்கள்தான்.” என்றார்.
“காஷ்மீர் பிரச்னையை தூண்டிவிடுபவர்கள், இரு நாடுகளுக்கு இடையே வெறுப்பின் விதைகளை விதைக்கின்றனர். பல நாடுகள், காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ளதால், அது பாகிஸ்தானுடன் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றன. ஆனால், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்க முடிவு செய்துவிட்டனர். காஷ்மீர் மக்கள் பேரரசுவாத சக்திகளின் கையில் விளையாட்டுப் பொருளாக விரும்பவில்லை,” என குருஷ்சேவ் கூறினார்.
பாகிஸ்தான் மீது குருஷ்சேவின் கோபம்
இந்த பயணத்தில் குருஷ்சேவ் இந்தியாவின் பிரிவினையையும் விமர்சித்தார் மற்றும் பிரிவினை மதத்தின் காரணமாக நடக்கவில்லை, மாறாக ‘பிரித்தாளும்’ கொள்கையை பின்பற்றும் மூன்றாவது நாட்டால் நடந்தது என்று கூறினார்.
குருஷ்சேவ், பாகிஸ்தானின் அமெரிக்காவுடனான நெருக்கத்தையும் விமர்சித்தார். அப்போது பாகிஸ்தான் ‘பாக்தாத் ஒப்பந்தத்தில்’ இணைந்திருந்தது, இது குருஷ்சேவுக்கு பிடிக்கவில்லை. அவர் பாக்தாத் ஒப்பந்தத்தை சோவியத் எதிர்ப்பு என்று கூறினார்.
1955-ல் துருக்கி, இராக், பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இரான் இணைந்து ‘பாக்தாத் ஒப்பந்தத்தை’ உருவாக்கினர். இந்த ஒப்பந்தம் ஒரு பாதுகாப்பு அமைப்பாகக் கூறப்பட்டது. இதில் ஐந்து நாடுகளும் தங்களது பொதுவான அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைய ஒப்புக்கொண்டன. இது நேட்டோவைப் போன்ற அமைப்பாக இருந்தது.
“நாங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நீங்கள் எங்களை மலை உச்சியிலிருந்து அழைத்தாலும், நாங்கள் உங்களுடன் இருப்போம்,” என ஸ்ரீநகரில் நிகிதா குருஷ்சேவ் இந்தியாவிடம் தெரிவித்தார்.
ஆனால், இப்போது சோவியத் யூனியன் இல்லை, 1955-ன் காலமும் இல்லை. சோவியத் யூனியன் சிதறிய பிறகும், காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறவில்லை, ஆனால் பாகிஸ்தான் குறித்து ரஷ்யாவின் அணுகுமுறை குருஷ்சேவின் காலத்தைப் போல இல்லை.
பட மூலாதாரம், @narendramodi
பாகிஸ்தானின் விருப்பமும் ரஷ்யாவின் ஒப்புதலும்
பிரதமர் மோதி சீனாவிலிருந்து திரும்பியவுடன், செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், புதின் ஷெபாஸ் ஷெரீஃபிடம், பாகிஸ்தான் இன்னும் ரஷ்யாவின் பாரம்பரிய நட்பு நாடாகவே உள்ளது என்று கூறினார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க விரும்புவதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் புதினிடம் கூறினார். ஷெரீஃப் இவ்வாறு கூறும்போது, அதை ஏற்றுக்கொள்வதுபோல் புதின் தலையசைத்தார்.
புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் புதினின் உரையாடலின் வீடியோ கிளிப்பை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்து, “மீம்களின் உலகத்துக்கு அப்பால் உண்மையான உலகமும் உள்ளது. புதின் ஒரு நாட்டுடன் மட்டும் பிணைக்கப்படவில்லை. அவர் ஷெபாஸ் ஷெரீஃபை சந்தித்து, பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புவதாக கூறினார். இது புதியதல்ல. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லோரும் டிரம்பில் (டிரம்ப் தொடர்பான விவகாரங்களில்) மூழ்கியிருந்ததால், ரஷ்யாவின் நிலைப்பாட்டை யாரும் கவனிக்கவில்லை,” என்று எழுதினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவின் நிலைப்பாடு இந்தியாவுக்கு ஏமாற்றமளித்ததாகவும் ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை எனவும் தன்வி மதன் கருதுகிறார்.
மே 4 அன்று எக்ஸ் தளத்தில் தன்வி மதன் எழுதிய பதிவில், “12 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ரஷ்யா யுக்ரேனை இரு முறை தாக்கியது, ஆனால் பாகிஸ்தானுடனான மோதலை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவிடம் கூறுகிறது,” என்று குறிப்பிட்டார்.
“மோதி சீனாவை விட்டு வெளியேறிய பிறகு, புதினும் ஷெபாஸ் ஷெரீஃபும் இருதரப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தனர். புதின் பாகிஸ்தானை பாரம்பரிய நட்பு நாடு என்று அழைத்து, வர்த்தகத்தை அதிகரிக்கவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஷெரீஃபை மாஸ்கோவுக்கு வரும்படியும் அழைத்தார். ஷெரீஃப், தெற்காசியாவில் சமநிலையான கொள்கைக்கு புதினுக்கு நன்றி தெரிவித்தார்,” என ஓஆர்எஃப் ஆய்வு மையத்தில் இந்தியா-ரஷ்ய உறவுகள் நிபுணரான அலெக்ஸி ஸாகரோவ், ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் புதினின் சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதினார்.
பட மூலாதாரம், @narendramodi
ரஷ்யாவுக்கு பாகிஸ்தான் பாரம்பரிய நட்பு நாடா?
புதின் பாகிஸ்தானை பாரம்பரிய நாடு என்று கூறியுள்ளார். உண்மையில் பாகிஸ்தான் ரஷ்யாவின் பாரம்பரிய நட்பு நாடாக இருந்ததா?
“பாகிஸ்தான் ஒருபோதும் ரஷ்யாவின் பாரம்பரிய நட்பு நாடாக இருக்கவில்லை. அது சோவியத் யூனியன் காலமாக இருந்தாலும், அதன் பிறகு சிதறிய காலமாக இருந்தாலும். பிரிட்டிஷ் இந்தியாவைப் பார்த்தாலும், அவர்களுக்கும் ஜாருக்கும் (Tsar – கடந்த கால ரஷ்யாவின் பேரரசரின் பட்டப்பெயர்) இடையேயான பகை உலகறிந்ததே. இப்போது புதின் பாகிஸ்தானை பாரம்பரிய நட்பு நாடு என்று கூறுகிறார், ஆனால் இது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது,” என டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ராஜன் குமார் கூறுகிறார்.
“பாகிஸ்தானுடனான உங்கள் நெருக்கம் அதிகரித்தால், நிச்சயமாக நமது உறவுகள் பாதிக்கப்படும் என ரஷ்யாவிடம் இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் சீனாவை பயன்படுத்தி ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது,” என பேராசிரியர் ராஜன் குமார் மேலும் கூறுகிறார்.
“பாகிஸ்தானும் ரஷ்யாவும் சீனாவின் முக்கிய நட்பு நாடுகள் என்பது தெளிவு. இந்த கண்டத்தில் இந்தியாவின் சமநிலையை சீர்குலைப்பதுதான் பாகிஸ்தானின் உத்தி. ரஷ்யா மற்றும் யூரேசிய கண்டத்தில் நல்லுறவுகளை பராமரிப்பதன் மூலம் பாகிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா ஒன்றிணைவது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து. ரஷ்யாவும் சீனாவும் ஏற்கெனவே ஒன்றாக உள்ளன.”
பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், “இதை நான் மட்டும் கூறவில்லை, கார்னெகி எண்டோவ்மென்ட்டின் மூத்த ஆய்வாளர் ஆஷ்லி ஜே. டெலிஸும் இதையே கருதுகிறார். இந்தியா முழுமையாக அமெரிக்க முகாமுக்கு செல்ல முடியாது, ஏனெனில் இந்தியாவுக்கு கண்டத்தில் அபாயம் உள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஒன்று சேர்ந்தால், பிரிட்டிஷ் இந்தியாவில் பேசப்பட்ட ‘கிரேட் கேம்’ மீண்டும் தொடங்கிவிடும். இந்தியா இந்த நிலை உருவாக அனுமதிக்காது.” என்றார்.
1965-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது, ரஷ்யா மிகவும் சமநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. தாஷ்கண்டில் ரஷ்யா செய்த ஒப்பந்தமும் இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, ரஷ்யா முழுமையாக தனக்கு எதிராக இல்லை என்று பாகிஸ்தான் உணர்ந்தது.
1991-ல் ஐக்கிய நாடுகள் சபையில் ‘தெற்காசிய அணு ஆயுதமற்ற பகுதி’ என்ற முன்மொழிவை பாகிஸ்தான் முன்வைத்தது, இதை இந்தியா எதிர்த்தது.
சீனா இதில் இணையாத வரை இந்த முன்மொழிவுக்கு அர்த்தமில்லை என்பது இந்தியாவின் வாதமாக இருந்தது. பாகிஸ்தானின் இந்த முன்மொழிவு இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தை குலைப்பதற்காக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் சோவியத் யூனியன் இந்த முன்மொழிவை ஆதரித்தது.
பட மூலாதாரம், Getty Images
புதின் ஒருபோதும் பாகிஸ்தான் சென்றதில்லை
இந்தியாவின் ரஷ்யாவுடனான நட்பைப் பற்றி அமெரிக்கா அசெளகரியமாக உணர்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவின் அசெளகரியத்துக்காக அடிபணிய மறுக்கிறது.
ரஷ்யாவுடனான நட்பை முறிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தால், அது புதினின் கையை வலுப்படுத்தும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக வரிகளை மேலும் உயர்த்துவதாக மிரட்டியபோது, அனந்தா மையத்தின் தலைமை நிர்வாகி இந்திராணி பாக்சி, “இது மிகவும் ஆபத்தானது. மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு இந்தியா முக்கியமானது என்று நினைக்கின்றன, எனவே புதினை கட்டுப்படுத்த இந்தியாவை தண்டிக்க வேண்டும் என்று கருதுகின்றன. புதின் தனது நலன்களில் இருந்து விலகுவதில்லை, இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டாலும் அவருக்கு அது பொருட்டல்ல. இதுபோன்ற ஒரு சூழலில், இந்தியா தனக்கு எந்தப் பங்கும் இல்லாத விளைவுகளால் பாதிக்கப்படும்,” என எழுதினார்
“டிரம்ப் இந்தியாவுக்கு தொந்தரவு அளித்தால், புதினுக்கு பயனளிக்கும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவு மோசமானால், ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இந்தியா சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கும்,” என இந்திராணி பாக்சியின் கருத்தை மேலும் விரிவாக்கி தன்வி மதன் எழுதியுள்ளார்.
“இந்தியாவில் சிலர் நாம் உத்தியியல் தன்னாட்சியை நோக்கி திரும்புவோம் அல்லது சீனாவுக்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைக்கின்றனர். டிரம்ப் இந்தியாவைப் பற்றி இப்படி சிந்திப்பார் என்று நான் நினைக்கவில்லை. டிரம்புக்கு இப்போது சீனாவுடனான போட்டி பற்றி கவலையில்லை.”
இவை அனைத்தையும் மீறி, புதின் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை புரிந்துகொள்கிறார் என்று பேராசிரியர் ராஜன் குமார் கருதுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக புதின் ரஷ்யாவின் அதிகார மையத்தில் இருந்தாலும், இதுவரை பாகிஸ்தான் செல்லவில்லை என்பதை இதற்கு ஆதாரமாக கூறலாம்.
எந்த ரஷ்ய அதிபரும் இதுவரை பாகிஸ்தான் செல்லவில்லை. சோவியத் யூனியன் சிதறாத காலத்திலும் எந்த அதிபரும் பாகிஸ்தான் செல்லவில்லை. சோவியத் யூனியன் கவிழ்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 11, 2007 அன்று ரஷ்யாவின் பிரதமர் மிகைல் ஃப்ராட்கோவ் பாகிஸ்தான் சென்றார்.
தெற்காசியாவில் புதின் பயணம் மேற்கொள்ளும் ஒரே நாடு இந்தியாதான். மார்ச் 17, 2016 அன்று பாகிஸ்தானில் ரஷ்யாவின் அப்போதைய தூதர் அலெக்ஸி டெடோவ், இஸ்லாமாபாத்தில் உள்ள உத்தி ஆய்வு நிறுவனத்தில் பாகிஸ்தான்-ரஷ்ய உறவுகள் குறித்து பேசுகையில், “பிரச்னை என்னவென்றால், பயணம் ஒரு சடங்காக மட்டும் இருக்கக் கூடாது. பயணத்துக்கு உறுதியான காரணம் இருக்க வேண்டும். உறுதியான காரணம் இருந்தால், பயணம் நிச்சயம் நடக்கும். இதற்கு தயாரிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் அவசியம்,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு