“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது.
“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்படக் குறைந்தது ஏழுபேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
பட மூலாதாரம், Reuters
இந்திய அரசு தனது அறிக்கையில், “இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன,” என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெஃரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் பூன்ச் ரஜூரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டன என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதி செய்ய முடியவில்லை.
காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் – காணொளி
ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக” இந்திய ராணுவம் கூறுகிறது.
இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ரஜோரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக” தெரிவித்துள்ளது.
மேலும் அதில், “இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.