படக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது 15 நாட்களாகியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது புதன்கிழமை அதிகாலை இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று குறிப்பிட்ட மிஸ்ரி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே புதன்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் கூறினார்.
பஹல்காம் தாக்குதல்கள் நடைபெற்று 15 நாட்கள் ஆகியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் நடவடிக்கை அளவிடப்பட்டதாக இருந்தது என்றார். இந்த தாக்குதல்களில் பொது மக்கள் உயிரிழக்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மிஸ்ரி, “ஏப்ரல் 22, 2025 அன்று, லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். மும்பையில் 2008 நவம்பர் 26 தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காமில் நடந்த தாக்குதல் தீவிர காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. கொலை நடந்த விதம் மூலம் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலும் இருந்தது” என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் தெளிவாக இயக்கப்பட்டது என்று கூறிய மிஸ்ரி, ” குறிப்பாக, இது பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான சுற்றுலாவை பாதிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 23 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கிற்கு வருகை தந்தனர்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதன்கிழமை அதிகாலை 1.05 மணி மற்றும் 1.30 மணிக்கு இடையில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதல் விசாரணையில் முன்னேற்றம்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
“நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் பிற தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிய மிஸ்ரி, இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள், ஆதரவாளர்கள் பற்றிய துல்லியமான சித்திரத்தை உளவுத்துறை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டு பேசினார்.
” இந்த தாக்குதலின் அம்சங்கள் இந்தியாவில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நடத்துவதற்கான பாகிஸ்தானின் நீண்டகால வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளன, இது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, கேள்விக்கு அப்பாற்பட்டது. உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் நன்கு அறியப்பட்டது.” என்றார்.
மேலும், “சஜித் மீர் வழக்கில் இந்த பயங்கரவாதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சர்வதேச அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக மீண்டும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது மிகவும் வெளிப்படையான உதாரணம். பஹல்காமில் நடந்த சமீபத்திய தாக்குதல் ஜம்மு காஷ்மீரிலும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோபத்தை உருவாக்கியுள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, சில ஆரம்ப நடவடிக்கைகள் கொண்டு இந்திய அரசு இயல்பாக எதிர்வினையாற்றியுள்ளது” என்றார்.
பட மூலாதாரம், BBC URDU
படக்குறிப்பு, இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி
“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியே இந்த தாக்குதல்” – மிஸ்ரி
ஏப்ரல் 22ம் தேதி தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்று கருதப்பட்டதாகவும் தாக்குதல்கள் நடந்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்ட போதிலும், ”பாகிஸ்தானிடமிருந்து பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
“மாறாக பாகிஸ்தான் செய்ததெல்லாம் மறுப்புகளும், குற்றச்சாட்டுகளும்தான். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத குழுக்களை எங்கள் உளவுத்துறை கண்காணித்தது, இந்தியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் வரவிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டின. ஆகவே தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.
மேலும், “இந்தியாவின் இன்றைய தாக்குதல் தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை அழிப்பதிலும், இந்தியாவுக்குள் அனுப்பப்படக்கூடிய தீவிரவாதிகளை செயலிழக்கச் செய்வதிலும் கவனம் செலுத்தின.” என்றார் விக்ரம் மிஸ்ரி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாக்குதலில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று இந்தியா கூறுகிறது.
எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது?
பட மூலாதாரம், PIB
படக்குறிப்பு, இந்திய தாக்குதல் குறித்த தகவல்களை கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர் சந்திப்பின் போது பகிர்ந்துக் கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வ்யோமிகா சிங் இந்த தாக்குதலின் விவரங்களை விளக்கிப் பேசினர்.
புதன்கிழமை அதிகாலை 1.05 மணி மற்றும் 1.30 மணிக்கு இடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்த கர்னல் சோஃபியா குரேஷி எந்தெந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரங்களை தெரிவித்தார்.
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் இந்த தாக்குதல் ஏவப்பட்டது என்று குரேஷி தெரிவித்தார். இந்த தாக்குதலின் போது ஒன்பது தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
“தீவிரவாத உட்கட்டமைப்பு பாகிஸ்தானில் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இந்த முகாம்கள் உள்ளன” என்றார் குரேஷி.
தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது முகாம்களின் விவரங்களை பட்டியலிட்டார் குரேஷி.
விங் கமாண்டர் வ்யோமிகா சிங், “இந்த தாக்குதலுக்கான இலக்குகள் நம்பகத்தக்க தகவல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.