படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும், இந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை.
சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன.
ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ‘போலி சமூக ஊடக தகவல்களை’ அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார்.
ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா?
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பட மூலாதாரம், ANI
இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,”நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் ‘ஆம்’ பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் ‘ஆம்’.” என்றார்
மேலும் அவர், ”இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்
”என்னால் சொல்ல முடிவது இதுதான்,’நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்’. மேலும் ‘நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்” என்று கூறினார் ஏ.கே.பார்தி.
பட மூலாதாரம், ANI
‘கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்’ – இந்திய கடற்படை
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்,” இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது” என்றார்.
ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்,” அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது” என கூறினார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று பிரமோத் தெரிவித்தார்.
கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், “இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்” என்றார்
தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார்.
– இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.