படக்குறிப்பு, ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு புதிய அதிகாரம் கொடுத்தும், கைது மற்றும் வழக்குகளிலிருந்து வாழ்நாள் விலக்கு அளித்தும் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
வியாழக்கிழமை சட்டமான 27-வது அரசியலமைப்பு திருத்தம், நாட்டின் உயரிய நீதிமன்றங்கள் செயல்படும் முறையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது ஆயுதப் படைகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளைக் குறைக்க உதவும் என்றும் கூறுகிறார்கள்.
அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானின் அரசியலில் இராணுவம் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. சில நேரங்களில் அரசை கவிழ்த்து ஆட்சியையும் பிடித்திருக்கிறது, பல நேரங்களில் பின்னால் இருந்து கட்டுப்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் தனது வரலாறு முழுவதுமே, மக்களாட்சிக்கும் (civilian autonomy) ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் ஜெனரல் ஜியா-உல்-ஹக் போன்ற ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கும் இடையே ஊசலாடி வந்திருக்கிறது. சிவில் மற்றும் ராணுவம் என இந்த இரு ஆட்சி முறைக்குமான சமநிலையை ஆய்வாளர்கள் ‘கலப்பு ஆட்சி’ (Hybrid Rule) என்கிறார்கள்.
இந்த அரசியலமைப்பு திருத்தம் அந்த சமநிலையை குலைத்து ராணுவத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதை நோக்கி நகர்வதாக ஒருசிலர் கருதுகிறார்கள்.
“என்னைப் பொறுத்தவரை இந்த திருத்தம், பாகிஸ்தான் கலப்பு ஆட்சி இல்லாமல், அதற்குப் பிந்தைய ஒரு ஆட்சிமுறையில் இருக்கிறது என்பதற்கான சமீபத்திய, பலமான அறிகுறி” என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் சென்டரின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன்.
“சிவில்-ராணுவ சமநிலை எந்த அளவுக்கு சமநிலை தவற முடியும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.
இந்த சமீபத்திய திருத்தத்தின் மூலம், நவம்பர் 2022 முதல் ராணுவ தளபதியாக இருக்கும் ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார்.
அவருடைய ஃபீல்ட் மார்ஷல் பட்டமும் சீருடையும் வாழ்நாளுக்குமானது. அதுமட்டுமல்லாமல், முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட பிரதமர் அறிவுரையின் பேரில் அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார்.
அதனால் அவர் உயிரோடு இருக்கும்போது பொது வாழ்க்கையில் அவருக்கு ஒரு பிரதான பங்கு இருந்துகொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், அது பாகிஸ்தான் ராணுவத்தின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு தெளிவை கொடுப்பதாக வாதிடுகிறார்கள்.
இந்த மாற்றங்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு நவீன போர் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கான விரிவான சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி என்று பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கூறியதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் செய்தி முகமையான அசோசியேடட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், மற்றவர்கள் இதை ராணுவத்துக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு நகர்வாகவே பார்க்கிறார்கள்.
“மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஒரு சமநிலையே இல்லை” என்கிறார் பத்திரிகையாளரும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் இணைத் தலைவருமான முனிசே ஜஹாங்கிர்.
“ராணுவத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சமயத்தில் அதற்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார்.
‘நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை’
இந்த சர்ச்சைக்குரிய மாற்றங்களின் இரண்டாவது பகுதி நீதிமன்றங்களையும் நீதித்துறையயும் சார்ந்தது.
இந்தத் திருத்தத்தின்படி, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்கும் புதிய ‘மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம்’ (Federal Constitutional Court – FCC) உருவாக்கப்படும். அதன் முதல் தலைமை நீதிபதி மற்றும் அதில் பணியாற்றும் நீதிபதிகளை பாகிஸ்தான் அதிபர் நியமிப்பார்.
“இது நியாயமான விசாரணை பெறும் உரிமையின் இயல்பையும் முறையையும் நிரந்தரமாக மாற்றுகிறது,” என்று ஜஹாங்கீர் கூறுகிறார்.
“நீதிபதிகளை நியமிப்பதில் மட்டுமல்லாமல், அரசியலமைப்பு அமர்வுகளை அமைப்பதிலும் நிர்வாகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு வழக்குதாரராக நான் நியாயமான விசாரணை கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஆரிஃபா நூர், “நீதித்துறை இப்போது நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்ததாக மாறியுள்ளது” என்கிறார்.
மேலும், “தற்போது நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் முன், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரித்து வந்தது. இதனால், நீதிபதிகள் அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களையும் கேட்க வேண்டியிருந்ததால், குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நிலுவை வழக்குகள் அதிகரித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், இவ்விரு வகையான வழக்குகளையும் பிரித்தது நீதிமன்ற செயல்முறையை ஒழுங்குபடுத்த உதவியுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கு சில வழக்கறிஞர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் கராச்சியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சலாஹுதீன் அஹமது, அந்த வாதத்தை நேர்மையற்றையதாகப் பார்க்கிறார். பாகிஸ்தானில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தவையே அல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“புள்ளிவிவர ரீதியாகப் பார்க்கும்போது, வழக்குகள் விரைவாக முடிவடைய வேண்டும் என்பதில் உண்மையாக கவலைப்பட்டிருந்தால், நீங்கள் அந்த வழக்குகளுக்கான சீர்திருத்தங்களில்தான் கவனம் செலுத்தியிருப்பீர்கள்.”
இந்தத் திருத்தம் சட்டமாக கையெழுத்தான அடுத்த இரண்டு மணி நேரத்தில், இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜிநாமா செய்தனர்.
தலைமை நீதிபதி பதவியை ராஜிநாமா செய்த பின் பேசிய அதர் மினல்லா, “நான் நிலைநிறுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் சொல்லி சத்தியம் செய்த அந்த அரசியலமைப்பு இப்போது இல்லை” என்று கூறினார்.
நீதித்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறிய நீதிபதி மன்சூர் அலி ஷா, 27வது சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தை துண்டாடிவிட்டதாகவும் கூறினார்.
இந்த ராஜிநாமாக்கள் பற்றிப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “உச்சநீதிமன்றத்தில் அவர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களின் மனசாட்சி விழித்தெழுந்திருக்கிறது. அரசியலமைப்பின் உயர் அதிகாரத்தை நிரூபிக்க நாடாளுமன்றம் முயற்சி செய்துள்ளது” என்று கூறினார்.
இப்போது நீதிபதிகள் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே எந்த நீதிமன்றங்களும் மாற்றப்படலாம். ஒருவேளை அதில் நீதிபதிகளுக்கு உடன்பாடு இல்லையென்றால், அவர்கள் நீதி ஆணையத்திடம் முறையிடலாம். ஒருவேளை அவர்கள் முறையிடுவதற்கான காரணம் செல்லாவிட்டால், அந்த நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிடவேண்டும்.
இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் நீதிமன்றங்களும் சரியாக நிரப்பப்படும் என்கிறார்கள். அதேசமயம் ஒருசிலர் இது மிரட்டலாகப் பயன்படுத்தப்படும் என்றும் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
“ஒரு நீதிபதியை அவர் பணியாற்றும் மாகாணத்திலிருந்து வேறொரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது, அரசின் விதியைப் பின்பற்ற அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்கிறார் அஹமது. இது பாகிஸ்தானின் சமநிலையை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
“நம் நீதித்துறை கடந்த காலத்தில் சர்வாதிகாரிகளுக்கு ஒத்துழைத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நிர்வாகத்தைத் தட்டிக் கேட்கவும் செய்துள்ளது. அந்த நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழக்கும் வகையில் நீங்கள் அதைப் பறித்துவிட்டால், அவர்கள் வேறு மோசமான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.
அதை ஏற்றுக்கொள்ளும் குகல்மேன், “அடக்கி வைக்கப்படும் குறைகள் சமூக நிலைத்தன்மைக்கு நல்லதல்ல” என்றும் கூறினார்.
“இது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது” என்று சொல்கிறார் நூர். கடந்த ஆண்டு செய்யப்பட்டிருந்த 26வது திருத்தம், பாகிஸ்தானின் தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் அதிகாரித்ததை சட்டத்தை இயற்றுபவர்களின் கையில் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்டதாகவும், சமீபத்திய திருத்தம் அதன் மீது புதிதாக கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் 28வது திருத்தம் குறித்த ஊகங்களும் எழுந்திருக்கின்றன.