பட மூலாதாரம், PAF
வங்கதேச விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான், தனது சமீபத்திய பாகிஸ்தான் பயணத்தின் போது பாகிஸ்தானிடமிருந்து ஜேஎஃப்-17 பிளாக்-3 போர் விமானங்களை ‘வாங்குவதில் ஆர்வம்’ காட்டியுள்ளார்.
ஜேஎஃப்-17 தண்டர் பிளாக்-3 என்பது ஆக்டிவ் எலக்ட்ரானிக்கலி ஸ்கேன்ட் அரே ரேடார் மற்றும் லாங் ரேஞ்ச் BVR (பியாண்ட் விசுவல் ரேஞ்ச்) ஆகியவற்றைக் கொண்ட 4.5-ஆவது தலைமுறை போர் விமானமாகும், இது பல்வேறு வகையான போர் நடவடிக்கைகளில் பங்கேற்கும் திறன் கொண்டது.
சீனாவின் உதவியுடன் இந்த விமானங்களைத் தயாரிக்கும் திறனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த போர் விமானம் ஒரு குறைந்த எடை கொண்ட, நான்காம் தலைமுறை விமானமாகும்; இவை இந்தியாவுடனான 2019 மற்றும் மே 2025 பதற்றமான காலங்களில் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தான் இதுவரை அஜர்பைஜான், மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்த ஜெட் விமானங்களை விற்பனை செய்துள்ளது. இராக் மற்றும் லிபியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்த விமான விற்பனை ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த விமான விற்பனைக்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்றாலும், “அவர்கள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர் மற்றும் இது குறித்து எங்களிடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது,” என்றும் பாகிஸ்தான் விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். .
பாகிஸ்தான் விமானப்படையின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பில், “பாகிஸ்தான் ஏர் சீஃப் மார்ஷல் ஜாஹிர் அகமது பாபர் சித்து, பயிற்சி விமானங்களை விரைவாக வழங்குவதுடன், முழுமையான பயிற்சி அமைப்பு மற்றும் நீண்டகால தொழில்நுட்ப உதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.”
விமானப்படைத் தலைவர்களின் சந்திப்பில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், PAF
வங்கதேச விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்புத் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ள விமானப்படைத் தலைமையகத்திற்குச் சென்றது, அங்கு அவர்கள் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஜாஹிர் அகமது பாபர் சித்துவைச் சந்தித்தனர்.
விமானப்படை வெளியிட்ட அறிக்கையின்படி, “சந்திப்பில் செயல்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் வான்வெளி துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.”
“வங்கதேச விமானப்படைத் தலைவர், பாகிஸ்தான் விமானப்படையின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டியதோடு, அதன் செயல்பாட்டுத் திறனைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்.”
அறிக்கையின்படி, “சந்திப்பில் பாகிஸ்தான் ஏர் சீஃப் மார்ஷல் ஜாஹிர் அகமது பாபர் சித்து, பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி மையங்கள் மூலம் அடிப்படை நிலை முதல் நவீன பறக்கும் திறன் மற்றும் சிறப்புப் படிப்புகள் வரை விரிவான பயிற்சி ஒத்துழைப்பை வங்கதேச விமானப்படைக்குத் தொடர்ந்து வழங்கும் என்ற உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.”
வங்கதேச விமானப்படைத் தலைவர், “வங்கதேச விமானப்படையின் பழைய விமானங்களைப் பராமரிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் மற்றும் வான்வழி கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் வான் தற்காப்பு ரேடார் அமைப்புகளை இணைப்பதில் உதவி பெறுவது குறித்தும் பேசியுள்ளார்.”
அறிக்கையின்படி, “தூதுக்குழுவினர் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய கட்டமைப்புகளான நேஷனல் ஐஎஸ்ஆர் மற்றும் ஒருங்கிணைந்த விமான செயல்பாட்டு மையம், பாகிஸ்தான் விமானப்படை சைபர் கமாண்ட் மற்றும் நேஷனல் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பார்க் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு ஐஎஸ்ஆர், சைபர், விண்வெளி, மின்னணு போர்முறை மற்றும் ஆளில்லா விமான அமைப்புகளில் பாகிஸ்தான் விமானப்படையின் திறன்கள் குறித்து விளக்கப்பட்டது.”
இந்தப் பயணம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான வலுவான வரலாற்று உறவுகளின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது, இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதோடு நீண்டகால மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாடும் எடுக்கப்பட்டது.
பாதுகாப்புச் சந்தையில் மாறிவரும் போக்குகள்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் இதுவரை அஜர்பைஜான், மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்த விமானங்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் அஜர்பைஜானுக்கு 40 ஜேஎஃப் – 17சி பிளாக்-3 விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தது, இது 4.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் இதுவரை விற்பனை செய்யப்பட்ட விமானங்களின் துல்லியமான எண்ணிக்கையைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் இராக் மற்றும் லிபியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்த விமான விற்பனை ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இது தவிர, இரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
பாரம்பரிய மேற்கத்திய விநியோகஸ்தர்களுக்குப் பதிலாக பல நாடுகள் பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடமிருந்து போர் விமானங்களை வாங்க விரும்புவது ஏன் என்று சில ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஜேஎஃப் – 17 போன்ற தளங்கள் இந்த விமானப்படைகளுக்குக் கவர்ச்சிகரமானதாக மாறுவதற்கு என்ன காரணம்? குறிப்பாக மேற்கத்திய பாதுகாப்பு விநியோகஸ்தர்களிடம் இல்லாத என்ன நன்மைகள் பாகிஸ்தானிடமிருந்து கிடைக்கின்றன? பாகிஸ்தானிடமிருந்து விமானங்களை வாங்கும் விருப்பம் உலகளாவிய பாதுகாப்புச் சந்தையில் மாறிவரும் போக்குகளைப் பற்றி என்ன சொல்கிறது?
சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டாண்மையில் உருவாக்கப்பட்ட ஜேஎஃப் – 17 தண்டர், அதன் விலை, அரசியல் நெகிழ்வுத்தன்மை மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை காரணமாக மேற்கத்திய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் வாங்கும் நாடுகளுக்குக் கவர்ச்சிகரமானதாக இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
நவீன மேம்பாடுகள் மற்றும் உள்ளூர் மட்டத்தில் பராமரிப்பு வசதி ஆகியவை குறைந்த பட்ஜெட் கொண்ட விமானப்படைகளுக்கு இதை நடைமுறை ரீதியானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகின்றன.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பட மூலாதாரம், PAF
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ் உடன் தொடர்புடைய ராணுவ வான்வெளி நிபுணர் டக்ளஸ் பெர்ரி, சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டாண்மையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் ஜேஎஃப் – 17, மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்படும் போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் விலையின் அடிப்படையில் கவர்ச்சிகரமானதாக உள்ளது, என தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய டக்ளஸ் பெர்ரி, இந்த விமானத்தின் சமீபத்திய மேம்பாடுகளில் அதிக திறனுடைய ரேடார் மற்றும் வான்வழி ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்கிறார். “ஜேஎஃப் – 17 மற்றும் செங்டு ஜே-10 (இவை பாகிஸ்தானிலும் பயன்பாட்டில் உள்ளன) ஆகியவற்றிற்கு முன்னதாக சீன போர் விமானங்களின் வடிவமைப்புகள் மேற்கத்திய அல்லது ரஷ்ய விமானங்களை விட பலவீனமானதாகக் கருதப்பட்டன. இருப்பினும், இப்போது அந்தத் திறன் இடைவெளி கணிசமாகக் குறைந்துவிட்டது.”
அலெக்ஸ் பிளிட்சாஸ், அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் பெண்டகன் அதிகாரி ஆவார். இவர் பாதுகாப்பு, வான்வெளி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றங்களில் நிபுணர்.
அரசியல் காரணங்களால் மேற்கத்திய விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்து இருக்க முடியாத அல்லது விரும்பாத மற்றும் செலவுகளில் கவனமாக இருக்கும் நாடுகளுக்கு இந்த விமானம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், ஜேஎஃப் – 17 தண்டரை வாங்கும் நாடுகள் மேற்கத்திய போர் விமானங்களுக்குப் பதிலாக முக்கியமாக விலை, அரசியல் நெகிழ்வுத்தன்மை மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை காரணமாகவே இதைப் பாகிஸ்தானிடமிருந்து வாங்குகின்றன என்று கூறுகிறார். “ஜேஎஃப் – 17 ஐ வாங்குவதும். இயக்குவதும் எஃப்-16 போன்ற மேற்கத்திய மாடல்களை விட மிகவும் மலிவானது, இது வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு பட்ஜெட் கொண்ட விமானப்படைகளுக்குக் கவர்ச்சிகரமானதாக அமைகிறது.”
பட மூலாதாரம், Getty Images
ஏற்றுமதி கட்டுப்பாடு, பயன்பாட்டைக் கண்காணித்தல் அல்லது அமெரிக்க அல்லது ஐரோப்பிய விற்பனையுடன் தொடர்புடைய உதிரிபாகங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் போன்ற அரசியல் கட்டுப்பாடுகள் இதில் மிகக் குறைவு என்று அலெக்ஸ் பிளிட்சாஸ் கருதுகிறார்.
தடை விதிக்கப்பட்ட நாடுகள் அல்லது மேற்கத்திய நாடுகளுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ள நாடுகளுக்கு ஜேஎஃப் – 17 மட்டுமே நவீன மற்றும் நடைமுறை ரீதியான போர் விமானமாக இருக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் அசெம்பிளிங் மற்றும் உள்நாட்டுப் பராமரிப்பு வசதிகளை வழங்க பாகிஸ்தான் மற்றும் சீனா தயாராக உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார், இது உள்ளூர் விமானப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்த அவசியம்.
ஜேஎஃப் – 17 மிக உயர்தர போர் விமானம் அல்ல என்றும், இந்த நான்காம் தலைமுறை போர் விமானம், சில அம்சங்களில் மேற்கத்திய போர் ஜெட் விமானங்களை விடப் பின்தங்கியுள்ளது என்றும் அலெக்ஸ் கருதுகிறார். “அவற்றில் வேகம், ரேடார் வரம்பு மற்றும் ஏவியோனிக்ஸ் ஆகியவை அடங்கும், ஆனால் இது வான்வழி கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் இலகுவான தாக்குதல் பணிகளுக்கு மிகவும் பயனுள்ள திறனை வழங்குகிறது, இதன் மூலம் வாங்குபவர்கள் தங்களின் திறன், தன்னம்பிக்கை மற்றும் சிக்கனமான செலவு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்க முடியும்.”
2019 மற்றும் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட பதற்றத்தை உதாரணமாகக் கூறி, கடந்த சில ஆண்டுகளில் “ஜேஎஃப் – 17 மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் போரின் போது சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, இது புதிய போர் விமானங்களை வாங்கும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கலாம்” என்கிறார்.
பாகிஸ்தான் ஜேஎஃப் – 17 பணிகளை எப்போது தொடங்கியது?
பட மூலாதாரம், Getty Images
இந்தக் கதை 1995-ஆம் ஆண்டு தொடங்குகிறது, அப்போது பாகிஸ்தானும் சீனாவும் ஜேஎஃப் – 17 தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த விமானத்தின் முதல் சோதனை மாதிரி 2003-ஆம் ஆண்டு தயாரானது மற்றும் பாகிஸ்தான் விமானப்படை 2010-ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜேஎஃப் – 17 தண்டரைத் தனது படையில் சேர்த்தது. இந்தத் திட்டத்தில் மிக் விமானங்களைத் தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான மிகோயன் நிறுவனமும் இணைந்தது.
பாகிஸ்தான் விமானப்படை, பழைய மிராஜ், எஃப்-7 மற்றும் ஏ-5 விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை மாற்றும் திட்டத்தின் கீழ் ஜேஎஃப் – 17 தண்டரை வடிவமைத்தது.
ஜேஎஃப் – 17 விமானங்களின் சிறப்பு என்னவென்றால், அவை பாகிஸ்தானுக்குள் ‘கம்ரா’ என்ற இடத்தில் தயாரிக்கப்படுகின்றன.
2020-ஆம் ஆண்டில் ஜேஎஃப் – 17 பிளாக்-3 உற்பத்தியைத் தொடங்கும் போது ஜேஎஃப் – 17 பிளாக்-3 நான்காம் தலைமுறை போர் விமானங்கள் என்று பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஏர் கமோடர் அஹ்மர் ரசா பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், பிளாக்-3 ஜேஎஃப் – 17 விமானங்கள் மிகவும் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும், இது பிராந்தியத்தில் மாறிவரும் சூழ்நிலையில் ராணுவச் சமநிலையைப் பேண பாகிஸ்தான் விமானப்படைக்கு உதவும் என்றும் விமானப்படை தெரிவித்தது.
பிளாக்-3 என்பது ஜேஎஃப் – 17 இன் அடுத்த பதிப்பாகும் என்று அந்த நேரத்தில் செய்தித் தொடர்பாளர் கூறினார். இதில் புதிய ரேடார்கள் பொருத்தப்படும், இந்தப் பதிப்பின் விமானம் புதிய மற்றும் நவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டிருக்கும். மின்னணு போர்முறைத் திறன் அதிகரிக்கப்படும் மற்றும் அனைத்து அம்சங்களிலும் இதில் முன்னேற்றம் கொண்டு வரப்படும்.
ஜேஎஃப் – 17 தண்டர் என்ன திறன்களைக் கொண்டுள்ளது?
பட மூலாதாரம், Getty Images
ஜேஎஃப் – 17 தண்டர் போர் விமானத்தை பாகிஸ்தானே தயாரிப்பதால் அந்த நாட்டுக்கு இது ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் இந்த விமானங்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றது, நிபுணர்களின் கூற்றுப்படி இந்த விமானம் குறைந்த எடை கொண்ட, நான்காம் தலைமுறை விமானமாகும்.
இந்த விமானத்தின் கட்டுமானம், மேம்படுத்துதல் மற்றும் ‘ஓவர்ஹாலிங்’ வசதிகளும் பாகிஸ்தானுக்குள்ளேயே உள்ளன, அதாவது பாகிஸ்தான் இந்த விமானத் தயாரிப்பின் எந்தவொரு நிலைக்கும் மற்ற நாடுகளைச் சார்ந்து இல்லை.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, “ஜேஎஃப் – 17 தண்டர் போர் விமானம் எஃப்-16 ஃபால்கனைப் போலவே குறைந்த எடையுடன், அனைத்து வகையான வானிலையிலும் தரை மற்றும் வான்வழி இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பன்முக விமானமாகும், இது தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.”
இந்தத் திறனின் காரணமாகவே பாலகோட் சம்பவத்திற்குப் பிறகு ஜேஎஃப் – 17 தண்டர் பிவிஆர் ஏவுகணை மூலம் இந்திய விமானப்படையின் மிக் விமானத்தை வீழ்த்தியது, இதனால் ஜேஎஃப் – 17 தண்டர் குறித்து அதிக அளவில் பேசப்பட்டது.
ஜேஎஃப் – 17 தண்டர் விமானங்களில் ரஃபேல் விமானத்தின் பெரிய சிறப்பாகக் கருதப்படும் நவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் இலக்கை ‘லாக்’ செய்து ஏவுகணையை ஏவும் திறன் கொண்டது.
இதன் வரம்பு 150 கிலோமீட்டர் வரை என்று கூறப்படுகிறது, மேலும் இந்த ஏவுகணை ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போலவே தனது இலக்கைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும்.
ஜேஎஃப் – 17 தண்டர் எதிரிகளைக் கண்காணிப்பது மற்றும் வான்வழிப் போருடன் தரைவழித் தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த விமானம் வான்-தரை, வான்-வான் மற்றும் வான்-கடல் ஏவுகணை அமைப்புகளுடன் மற்ற ஆயுதங்களையும் பயன்படுத்தும் திறன் கொண்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு