பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடைபெற்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில கடுமையான நடவடிக்கைகள எடுத்தது.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதில் ஒன்று தான், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை மூடுவது.
அதாவது, இந்திய விமானங்கள் இனி பாகிஸ்தான் வான்வெளி வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாது.
இந்த முடிவின்படி, கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு (இந்திய நேரப்படி) எந்தவொரு இந்திய விமானமும் பாகிஸ்தான் வான்வெளி வாயிலாக பறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்த அறிவிப்பின் காரணமாக ஏற்பட்ட விளைவால் வியாழக்கிழமையே நடவடிக்கையில் இறங்கின இந்திய விமான நிறுவனங்கள்.
இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல விமானங்கள் வானத்தில் பறந்துகொண்டிருந்தன, அதில் பலவும் பாகிஸ்தான் வான்வெளியில் பயணித்தன. இந்த விமானங்களின் நிலை அப்போது என்னவாக இருந்தது?
ஒர் இந்திய விமான நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறுகையில், “பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு வெளியானபோது அந்த சமயத்தில் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதுதான் முதல் வேலையாக இருந்தது. அதன்பின், நாங்கள் வேறொரு வியூகம் குறித்து யோசிக்க வேண்டியிருந்தது” என்றார்.
முன்னதாக, பாலகோட்டில் இந்தியா வான்வழி தாக்குதல் நிகழ்த்திய போது, நீண்ட காலத்துக்கு இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது.
2019ம் ஆண்டில் பிப்ரவரி 27 முதல் ஜூலை 16 வரை, பாகிஸ்தான் வான்வெளி தவிர்த்து மற்ற வழிகளை இந்திய விமானங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.
தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
டெல்லியிலிருந்து புறப்படும் விமானங்கள் மீது பாகிஸ்தானின் இந்த முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், அமிர்தசரஸ் மற்றும் லக்னௌ உட்பட வட இந்திய விமான நிலையங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
டெல்லியிலிருந்து மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கும் விமானங்கள், தாங்கள் பயணிக்கும் பாதையை மாற்ற வேண்டியிருக்கும்.
விமான போக்குவரத்து ஆலோசகரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநருமான ஜிதேந்திர பார்கவா பிபிசியிடம் கூறுகையில், “மும்பையிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு பயணிக்கும் விமானங்கள் மீது எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கமும் இருக்காது. ஆனால், டெல்லியிலிருந்து புறப்படும் விமானங்கள் ஆமதாபாத்திலிருந்து மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும், அப்போதுதான் அந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளிக்கு வெளியே பறக்க முடியும்” என்றார்.
அதாவது, இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு பயண நேரமும் விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கும்.
இந்த செலவுகள் அதிகரிக்கும்போது வருங்காலத்த்தில் விமான நிறுவனங்கள் அந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தி, டிக்கெட் விலையை உயர்த்தும்.
எரிபொருள் செலவு அதிகரிக்கும்
பட மூலாதாரம், Getty Images
ஏ.டி.எஃப் (ATF) எனும் விமான எரிபொருள்தான் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியன் ஆயில் கூற்றுப்படி, சர்வதேச பாதைகளில் பயணிக்கும் இந்திய விமானங்களுக்கு ஏ.டி.எஃப் எரிபொருள் விலை கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஒரு கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்) டெல்லியில் 794.41 டாலர்களாகவும் (சுமார் ரூ. 67,816.97) மும்பையில் 794.40 டாலர்களாகவும் (சுமார் ரூ. 67,816) உள்ளன.
பயண நேரம் அதிகமாக இருந்தால் விமானங்களுக்கு அதிக எரிபொருள் தேவைப்படும், இதனால் எரிபொருளை நிறுவனங்கள் அதிகமாக வாங்க வேண்டியிருக்கும்.
இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2019ல் பாகிஸ்தான் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்தபோது இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறது.
எனினும், இந்தியா மட்டும் அதற்கான இழப்புகளை சந்திக்கவில்லை. பாகிஸ்தானும் இழப்புகளை சந்தித்தது.
பிபிசி உருது சேவை கூற்றுப்படி, ஜூலை 18, 2019-ல் பாகிஸ்தானின் அப்போதையை விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான், இந்திய நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானும் 50 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 426 கோடி) இழப்புகளை சந்தித்ததாகக் கூறினார்.
எப்படி? ஏனெனில், பல உலக நாடுகள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்காக விமான நிறுவனங்களுக்குக் கட்டணம் விதிக்கும்.
மற்ற நாடுகளைப் போலவே, பாகிஸ்தானுக்கும் இந்தியா உட்பட மற்ற நாடுகளின் விமான நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.
விமானம் புறப்படும்போது இருக்கும் எடை மற்றும் பயண தொலைவு (கிலோமீட்டரில்) எவ்வளவு என்பதைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடுகிறது.
பாகிஸ்தான் தன் வான்வெளியை மூடும்போது, இந்திய விமான நிறுவனங்கள் மூலம் பெறப்படும் இந்த கட்டணம் அந்நாட்டுக்குக் கிடைக்காது, இதனால் வருமானம் குறையும்.
நீண்ட தொலைவு பயணிக்கும் விமானங்கள் மீதான தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிலிருந்து மத்திய ஆசியா, ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு பயணிக்கும் விமானங்கள், அதிக தூரமுள்ள அரபிக் கடல் அல்லது மத்திய ஆசியா வழியாக பயணத்தை மேற்கொள்ளாமல், பாகிஸ்தான் வான்வெளியைதான் வழக்கமாக பயணிக்கும்.
இம்மாதிரியான தருணங்களில், நீண்ட தொலைவு பயணிக்கும் போது விமான நிறுவனங்களுக்கு விமானத்தை இயக்குவதற்கான செலவுகள் அதிகரிக்கும். மேலும் விமான பயண நேரம் அதிகரிக்கும், அதனால் எரிபொருள் அதிகமாக தேவைப்படும்.
அதுமட்டுமல்லாமல், டெல்லியிலிருந்து மேற்கு நோக்கி நீண்ட தொலைவு பயணிக்கும் நேரடி விமானங்கள் அல்லது வட இந்தியாவின் மற்ற முக்கிய விமான நிலையங்களின் விமானங்களையும் இந்த முடிவு பாதிக்கும். ஏனெனில், வழக்கமாக இந்த விமானங்கள் 10-15 மணிநேரங்களில் தாங்கள் அடைய வேண்டிய இடத்துக்கு சென்றுவிடுகின்றன. ஆனால், பாதை மாற்றம் காரணமாக அந்த விமானங்கள் இடையே ஏதேனும் ஓரிடத்தில் தரையிறங்க வேண்டியிருக்கும்.
இதனால், நிச்சயம் செலவுகள் அதிகரிக்கும்.
முதலவாதாக, எந்தவொரு விமானமும் ஒரு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இரண்டாவதாக, வெளிநாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, அங்கிருந்து எரிபொருளை வாங்க வேண்டியிருக்கும், அதன் விலை இந்தியாவை விட அதிகமாக இருக்கலாம்.
மூன்றாவதாக, ஒவ்வொரு விமானியும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குதான் விமானத்தை இயக்க முடியும். நேரடி விமானமாக அல்லாமல் இடையே எங்கேனும் விமானத்தை தரையிறக்க வேண்டிய தருணங்களில், விமான நிறுவனங்கள் மேலும் கூடுதலாக ஒரு விமானியின் சேவையை பெற வேண்டிய சாத்தியம் உள்ளது. இதுவும் செலவுகளை அதிகரிக்கும்.
எந்தெந்த விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு?
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜிதேந்திர பார்கவா, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு இருக்கும் என்றார்.
இதண்டாவதாக, எந்தவொரு விமான நிறுவனமும் வெளிநாட்டில் ஒரு விமானத்தை குத்தகைக்கு எடுத்திருந்தால் அந்த விமானங்களுக்கும் இது பொருந்தும்.
எனினும், மும்பையிலிருந்து பயணிக்கும் விமானங்கள் மீது இந்த முடிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தாது.
பார்கவா கூறுகையில், “மும்பையிலிருந்து பறக்கும் விமானங்களுக்கு அதிக பிரச்னை இல்லை. ஆனால், டெல்லியிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு பயண நேரம் இன்னும் அதிகமாகும்” என்றார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் பலனடையுமா?
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் இந்த முடிவுக்குப் பிறகு, டெல்லி, லக்னௌ, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களிலிருந்து புறப்படும் இந்திய நிறுவனங்களின் விமானங்கள், மேற்கு நோக்கி செல்வதற்கு முன்பாக, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வாயிலாக பயணிக்க வேண்டியிருக்கும். அதன்பின், மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நோக்கி பயணிக்க வேண்டும்.
இந்திய நிறுவனங்கள் மீது மட்டும் பாகிஸ்தான் இந்த கட்டுப்பாட்டை விதித்திருப்பதால், டெல்லியிலிருந்து விமானங்களை இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியும்.
அந்த நிறுவனங்களுக்கு இதனால் செலவுகள் அதிகரிக்காது. எனவே, இந்த சூழலை வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.
அந்த நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்காத போது, டிக்கெட் விலையும் அதிகமாகாது, ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் செலவுகள் அதிகமாவதால் டிக்கெட் விலையை உயர்த்தலாம்.
இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் புதிய கட்டுப்பாடுகள் இந்திய நிறுவனங்களின் வருமானத்தை முதலில் காலி செய்யும். பின்னர், இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு