பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்
மியான்மரை 7.7 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக பாங்காக்கில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.
கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு