புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஜேசிஎம் அமைப்பு ஒன்றை தொடங்கி பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேரும்படியும், தேவையான நிதியை கொடுப்பதாகவும் கூறி வருகிறார். இதில் சிலர் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பானது பாஜகவின் “பி டீம்”. அவர்கள் எங்களுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று வெளியே கூறுகின்றனர். ஆனால் பாஜகவின் நிழலாக ஜோஸ் சார்லஸ் மார்டினின் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பாஜக அமைச்சர் ஜான்குமார், எம்எல்ஏ கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் ஜோஸ் சார்லஸ் மார்டினுடன் இணைந்து செயல்படுகின்றனர். அவரது படத்தோடு தீபாவளி பட்டாசு உள்ளிட்டவற்றை கொடுக்கின்றனர். அவர்கள் மீது ஆனால் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. அவர்களை பாஜகவில் இருந்து நீக்கவில்லை. ஜோஸ் சார்லஸ் மார்டின், இந்த அரசுக்கு ஆளத்தகுதியில்லை என்று கூறுகிறார். ஆனால் அவரோடு பாஜக கை கோர்த்து நிற்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். பிரிட்ஜ் போன்றவற்றை கொடுக்கிறார். பாஜக எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளில் அவர் பணி செய்யவில்லை. இதில் இருந்து பாஜகவின் தூண்டுதலின் பேரில் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜகவுக்கும், ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.
முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பச்சோந்தி போன்று செயல்படுபவர். அவர் தன்னுடைய நிறத்தை நேரத்துக்கு நேரம் மாற்றுவார். அது அவருடைய வழக்கம். எந்த பக்கம் அலை அடிக்கிறதோ அந்தப் பக்கம் செல்வார். அதுதான் அவருடைய நிலை.
மத்திய அரசின் சுகாதாரத் துறையில் 3,500 செவிலியர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் புதுச்சேரி ஜிப்மருக்கு மட்டும் 454 பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு முறை என்று சொல்லி ஜிப்மரில் தேர்வு மையம் இல்லை. இதனால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வடமாநிலங்களுக்கு சென்று அவதியுற்று வருகின்றனர்.
புதுச்சேரி அரசும், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை எந்தவித நுழைவு தேர்வும் இல்லாமல் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிகப்பெரிய ஊழலுக்கு இடம் கொடுக்கும். வேண்டியவர்களை உள்ளே நுழைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும். தேர்வில் வெளிப்படை தன்மை இருக்காது.
புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி மொத்த மது விற்பனை உரிமம் கொண்டவர்களுக்கு எப்.எல் 1 ரூ.22 லட்சமாக இருந்த வருடாந்திர உரிமமம் ரூ.44 லட்சமாகவும், சில்லரை விற்பனை மதுக்கடைகளுக்கு எப்.எல் 2 ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ரெஸ்டோ பார்களுக்கு மட்டும் ரூ.6 லட்சமாக இருந்ததை ரூ.1 லட்சம் மட்டும் உயர்த்தி ரூ.7 லட்சமாக உள்ளது.
இதனை எதிர்த்து மது விற்பனையாளர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறினர். ஆனால் அதற்கு முதல்வர் செவிசாய்க்கவில்லை. ரெஸ்டோ பாருக்கு வரி உயர்த்தாதது குறித்து கேட்டபோது அவர்களிடம் கடினமாக பேசியுள்ளார். காரணம் முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டியவர்கள் ரெஸ்டோ பார்களை நடத்துகின்றனர். முதல்வருடன் 6 புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் மது விற்பனையாளர்களிடம் பணம் கேட்டு பேரம் பேசியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.