பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் ஏஜென்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்ததில்லை. அதேநேரம், எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழகம் போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை, தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் சதியை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழகமும் அதனை எதிர்க்கிறது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே என்றென்றும் சிந்திப்பதையும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதையுமே தமது கொள்கையாகக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் ஏஜென்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசுகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி அதுபோலப் பேசியிருப்பது புதியதுமல்ல; பொருட்படுத்த வேண்டியதுமல்ல.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையால் விரும்பிய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் ஆளுநர். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பிஹார் என பாஜகவும், பாஜக கூட்டணியும் ஆட்சி செய்யும் வடஇந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? என்றால், ஆளுநரிடமும், அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது.
இந்தி ஆதிக்கத்தால் தனது சொந்த மாநிலங்களிலேயே 25-க்கும் மேற்பட்ட வடஇந்திய மொழிகள் பேச்சு வழக்கையும், எழுத்து வடிவத்தையும் இழந்து அழிந்து போனதையும், அழிவின் விளிம்பில் இருப்பதையும் கூறியிருந்தேன். இதை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆதரித்துள்ளனர்.
அண்ணாவால் கொண்டுவரப்பட்ட இருமொழிக் கொள்கையால் தமிழகம் இன்று பல துறைகளிலும் அடைந்துள்ள வளர்ச்சியையும், தமிழர்கள் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதையும் பிற மாநில மக்களும் உணர்ந்து, தங்கள் முன்னேற்றத்துக்கான வழியைக் காணும் விழிப்புணர்வைப் பெற்று வருகின்றனர்.
இந்தி படித்தால் வடமாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற பிம்பத்துக்கு மாறாக, இந்தி மட்டுமே அறிந்த, அதை மட்டுமே படித்த வடமாநிலத்தவர், தமிழகத்துக்கு வேலைதேடி வரக்கூடிய வகையில் இருமொழிக் கொள்கை நம் மாநிலத்தை உயர்த்தியிருக்கிறது. ஆளுநரும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று நிர்வாக வேலை பார்ப்பவர்தான்.
இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி இரண்டையும் திணிக்க நினைக்கின்றனர். அவர்கள் சொல்கின்ற இரண்டுமே வடிகட்டிய பொய் என்பதை வரலாறு சொல்கிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.