பட மூலாதாரம், @narendramodi
-
- எழுதியவர், அர்ஜுன் பர்மர்
- பதவி, பிபிசி குஜராத்தி
-
குஜராத்தின் சோம்நாத் கோவில், இந்து மத நம்பிக்கைகளில் புனிதமாகக் கருதப்படும் 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது ஜோதிர்லிங்கமாகும்.
வரலாற்று ரீதியாகவும், இந்து மத ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சோம்நாத் கோவில் குறித்து மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சோம்நாத்தில் “சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ்” நிகழ்வு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார்.
மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் (பிஐபி) கூற்றுப்படி, ஜனவரி 1026-ல் சோம்நாத் கோவில் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடந்தது.
”அழிவை நினைவு கூர அல்ல, மாறாக நம்பிக்கை, கலாசார சுயமரியாதை மற்றும் மறுபிறப்பின் உணர்வைக் கௌரவிப்பதற்காக இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது” என பிஐபி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், @amitmalviya
ஜனவரி 8 முதல் 11 வரை சோம்நாத்தில் 4 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
ஆனால் இதனுடன் சேர்த்து இந்த நிகழ்வின் அரசியல் செய்தி குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன.
இன்று, பல அரசியல் வல்லுநர்கள் நாட்டின் தேசிய அரசியலில் ‘பாஜகவின் ஆதிக்கம்’ மற்றும் அதிகரித்து வரும் ‘இந்து தேசியவாத உணர்வு’ ஆகியவற்றை சோம்நாத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகளுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அத்வானியின் ரத யாத்திரை சோம்நாத்திலிருந்து தொடங்கியபோது என்ன நடந்தது ?
அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சோம்நாத்திலிருந்து தொடங்கிய அத்வானியின் ரத யாத்திரை இந்திய அரசியலில் ஒரு ‘திருப்புமுனையாக’ அமைந்தது.
இந்த யாத்திரையின் காரணமாக, பாஜக மற்றும் அத்வானியின் பெயர்கள் மட்டுமல்லாமல், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியின் பெயரும் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது.
1989 டிசம்பரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக முதன்முறையாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்தது.
இதன் விளைவாக, இதற்கு முந்தைய மக்களவைத் தேர்தலில் (1984) 224 இடங்களில் போட்டியிட்டு வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்த பாஜக, 1989 தேர்தலில் 85 இடங்களைக் கைப்பற்றியது.
பல ஆய்வாளர்கள் இதனை நாட்டில் ‘இந்து தேசியவாத எழுச்சியின் தொடக்கமாக’ கருதுகின்றனர்.
அக்காலத்தில், ஒருபுறம் நாட்டின் பல பகுதிகளில் ‘மண்டல் ஆணையத்திற்கு’ (இட ஒதுக்கீடு) ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
மறுபுறம், பாஜக ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல்’ என்ற விவகாரத்தை முன்வைத்து தனது அரசியலை முன்னெடுத்தது.
இதற்காக, 1991-ஆம் ஆண்டு லால் கிருஷ்ண அத்வானி சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது, அந்த யாத்திரையின் குஜராத் மாநில பொறுப்பு மோதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
‘தி ஆர்கிடெக்ட் ஆப்ஃ நியூ பிஜேபி: ஹவ் நரேந்திர மோதி டிரான்ஸபார்ம்ட் தி பார்ட்டி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் அஜய் சிங், “அத்வானியும் பிரமோத் மகாஜனும் சோம்நாத் ஆலயத்திற்கு அருகிலுள்ள வேராவல் பகுதியை அடைந்தபோது, அங்கு கட்சியின் சுவரொட்டிகளோ அல்லது கொடிகளோ தென்படவில்லை. யாத்திரைக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லையோ என்ற கவலையும் கட்சிக்குள் எழுந்தது. ஆனால், அடுத்த நாள் யாத்திரை தொடங்கியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,”சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இதில் பங்கேற்றனர். சங் பரிவார் இதுவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்யாத மக்களையும் பாஜக முதல் முறையாக சென்றடைந்தது ” என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் ஷகீல் அக்தரின் கருத்துப்படி, “ராமஜென்ம பூமி இயக்கம், இந்துக்களிடையே சிதறிக்கிடந்த தேசியவாத உணர்வை ஒரு அரசியல் இயக்கமாகவும், மதம் சார்ந்த இந்து தேசியவாதமாகவும் மாற்றியது. நாட்டில் முதல் முறையாக, ராமஜென்ம பூமி இயக்கம் இந்து தேசியவாதத்தை ஒருங்கிணைத்தது”.
அத்வானி வருகைக்கு 35 ஆண்டுகளுக்குப் பிறகு
பட மூலாதாரம், Getty Images
இந்த ரத யாத்திரை நடந்து சுமார் 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று நாட்டில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அரசாங்கம் ‘சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ்’ நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஜெகதீஷ் ஆச்சார்யாவின் கூற்றுப்படி, ”சோம்நாத் குறித்த எந்தப் பேச்சும் இந்து சமூகத்தினிடையே உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”
“இந்தியாவில் ஐந்து முதல் ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன, மேலும் குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, சோம்நாத் மீதான தாக்குதலின் 1000-வது ஆண்டு நிறைவை ஒரு பெரிய நிகழ்வாக மாற்றி, அதன் மூலம் அதிகபட்ச அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்கான உத்தியை பாஜக தயாரித்துள்ளது” என்று ஜெகதீஷ் ஆச்சார்யா கூறுகிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் மிக ‘பிரமாண்டமான’ தோற்றத்தைக் கொடுப்பதன் மூலம், பாஜக இதை ஒரு தேசிய விவாதப் பொருளாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.
“முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் கொடூரத்தையும், இந்து சமூகத்தின் வீரத்தையும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக முன்வைத்து காட்டுவதன் மூலம், இந்த சம்பவத்திற்கு பாஜக ஒரு புதிய திருப்பத்தை அளித்துள்ளது”
“இந்த நிகழ்வு பாஜகவிற்கு தனது தீவிர இந்துத்துவ அரசியலைக் வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் நேரு கோயில் கட்டுமானத்திற்கு எதிராக இருந்தார் என்ற கதையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் இது பாஜகவிற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நடவடிக்கை இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜகவின் திட்டத்திற்கு கணிசமான ஆதரவை வழங்கும் ஒரு நடவடிக்கையாகும்”
சௌராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌஷிக் மேத்தாவின் கூற்றுப்படி, “நேருவை விட தான் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை நிரூபிக்க பிரதமர் மோதி முயற்சிக்கிறார் என்பதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.”
மேலும், “நரேந்திர மோதியும் பாஜகவும் நேருவை விமர்சிக்கவோ அல்லது இழிவுபடுத்தவோ கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை. இந்த நிகழ்ச்சியும் அதன் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. இந்தச் சூழல் அந்த நோக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. “என்று கௌசிக் மேத்தா கூறுகிறார்.
“சோம்நாத் இந்து மதத்தின் ஒரு முக்கிய மையமாகும், மேலும் இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முன்னிலைப்படுத்த இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. இந்த முழு விவகாரமும் பாஜகவின் உத்திக்கு மிகவும் பொருத்தமானது,” என்றார் கௌசிக் மேத்தா.
பாஜக குஜராத்தில் 7 முறை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
இருப்பினும், பாஜக தலைவர் யக்னேஷ் தவே, “ஒரு மத விழா கொண்டாடப்படும்போது, ஒட்டுமொத்த நாடும் அதன் கொண்டாட்டத்தில் பங்கேற்கும்போது, அதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியானது என்று நான் நினைக்கவில்லை,” என்றார்.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ,சோம்நாத் கோவிலின் அறங்காவலராகவும் உள்ளார். மேலும் சோம்நாத்தின் சுற்றுப்புற மேம்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தத் தருணத்தை மத ரீதியான ஒரு விழாவாகக் கொண்டாடும் போது, அதற்கு அரசியல் சாயம் பூசுவது முறையல்ல,” என்றார் அவர்.
பட மூலாதாரம், @narendramodi
பாஜக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
குஜராத்தைப் பொறுத்தவரை அங்கு பாஜகவிற்குப் பெரிய சவால்கள் ஏதுமில்லை, ஆனால் தேசிய அளவில் சவால்கள் உள்ளன என்று ஜெகதீஷ் ஆச்சார்யா கூறுகிறார்.
“பாஜக தேசிய அளவில் பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஒரே விவகாரத்தை வைத்து நீண்ட காலத்திற்குத் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதால், பொதுநலன் மற்றும் வளர்ச்சிக்காக தாங்கள் என்ன செய்தோம் என்பதை மத்திய அரசு காட்ட வேண்டியிருக்கும்” என்றார் அவர்.
“இனிமேல் எழுப்பப்படும் கேள்விகள் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பானவையாக இருக்கும். வெளியுறவுக் கொள்கை, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் சவால்கள் குறித்த கேள்விகள் எழும். இது தவிர, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.” என்றார் ஜெகதீஷ் ஆச்சார்யா.

“சமீபத்தில் இந்தூரில் மாசடைந்த குடிநீரால் மக்கள் உயிரிழந்தனர். தூய்மையான நகரம் என்ற விருதை பெற்ற நகரிலே இது நடக்கிறது. இத்தகைய முரண்பாடுகளை மக்கள் எப்போதும் தெளிவாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ராஜ்கோட் மற்றும் காந்திநகர் போன்ற நகரங்களில், உள்ளூர் அளவில் மக்கள் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர், அதற்கு எதிராக மக்கள் அடிக்கடி குரல் எழுப்புகின்றனர்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கௌஷிக் மேத்தா
இருப்பினும், உள்ளூர் மற்றும் தேசிய அளவில் பாஜக பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்தப் பிரச்னைகளை முன்வைப்பதில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அது பாஜகவிற்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கௌஷிக் மேத்தா மற்றும் ஜெகதீஷ் ஆச்சார்யா ஆகிய இருவரும் கருதுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு