• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

பாஜக கூட்டணிக்கு பாராட்டு முதல் திமுக அரசுக்கு கண்டனம் வரை: அதிமுக செயற்குழுவின் 16 தீர்மானங்கள் | From praise for EPS to condemnation of DMK govt: AIADMK EC Meeting resolutions

Byadmin

May 2, 2025


சென்னை: அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

> 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும், திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளைக் கூட்டணியில் இடம்பெறச் செய்து ‘மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

> 2021 சட்டமன்றத் தேர்தலின்போது 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களைத் தந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

> ‘நீட்’ ரத்து விஷயத்தில் கபட நாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய் ஜாலத்தை மாணவ, மாணவியரும், மக்களும் இனியும் நம்பத் தயாராக இல்லை. எனவே, அடுத்தவர்கள் மீது பழிபோட்டு, போகாத ஊருக்கு வழிகாட்டுவதுபோல, ஏமாற்று வேலைகளைச் செய்யாமல், மாணவச் சமுதாயத்திடமும், அவர்தம் பெற்றோர்களிடமும், தமிழக மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

> ‘நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு’ என்கிற திரைப்படப் பாடல் வரிகளைப் போல, திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத் தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

> தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத் தீவை தாரை வார்த்ததற்குக் காரணமாக இருந்துவிட்டு, அப்போதே அதைத் தடுக்க தவறிவிட்டு, தற்போது அக்கறை உள்ளது போல காட்டிக்கொள்வதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுக அரசுக்குக் கண்டனம்.

> அதிமுக அரசு ஏற்கெனவே கொண்டுவந்த திட்டங்களை தாமதமாக செயல்படுத்தியும், நீர் மேலாண்மையை முறையாகப் பாதுகாக்கவும் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதியைப் பெற்ற, அதிமுக பொதுச் செயலாளருக்குப் பாராட்டும், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி.

> இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம். அதிமுக மதச் சார்பில்லாத ஒரு மக்கள் இயக்கம். ஆகவே, அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதி அளிக்கிறது.

> கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும், மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டும், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

> ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கின்ற வகையில் சொத்து வரியில் தொடங்கி, குடிநீர் வரி முதல் குப்பை வரி வரை உயர்த்தியுள்ள திமுக அரசுக்குக் கண்டனம். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வையும், கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு இச்செயற்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

> அதிகார மமதையில் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்துகின்ற வகையில் ஆபாசமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

> ‘அராஜகம்-வன்முறை என்றாலே திமுக; திமுக என்றாலே அராஜகம் – வன்முறை’ என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டும், கொலை, கொள்ளை, போதைப் பொருள், பாலியல் வன்கொடுமை என தொடர் சமூகவிரோதச் செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

> மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு, சுய விளம்பர ஆட்சியும், போட்டோ ஷூட் காட்சியும் நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

> காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்தேறிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம். தீவிரவாதத்தை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக துணை நிற்கும்.

> பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவது கூட்டணி. அந்த வகையில், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக, பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு முழு மனதுடன் ஆதரவை அளித்து அங்கீகரிக்கிறது.

> அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, ஆளுமைத் திறன் மிக்க, ஈடு இணையற்ற அரசியல் தலைவராகத் திகழும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026-ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என சூளுரை ஏற்போம்.

> தமிழ்நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், அதிமுக அரசு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. தற்போது, மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்ததை, இச்செயற்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



By admin