தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுகவோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்கவில்லை. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும்போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு நீதி கிடைக்கும். பல சமூகங்கள் பயனடையும். அடுத்தாண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, ஓராண்டில் முடிவடையும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும்.
பாஜக-அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு முக்கியம். எனவே, திமுவை வீழ்த்த நினைக்கும் அனைவரையும் வரவேற்போம். சீமானுக்கும் இது பொருந்தும்.
எம்ஜிஆர் வேறு, நடிகர் விஜய் வேறு. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. அவரைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை. இவ்வாறு அவர் கூறினார்