பட மூலாதாரம், ANI
பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பிகாரின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் (பாட்னா) எம்.எல்.ஏ. ஆவார். நிதின் நபின் கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, அவருக்கு தொடர்ச்சியான பதவி நீட்டிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாஜக வரலாற்றில் ஒரு தலைவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இவ்வளவு நீண்ட காலத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் முறை.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் மிகப்பெரிய கட்சி என தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியால், தனது தலைவரைக்கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று பாஜக மீது பலமுறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வயது ஒரு சவாலாக மாறுமா?
பட மூலாதாரம், ANI
நிதின் நபின் 1980, மே 23 அன்று பிறந்தவர், அப்படியென்றால் அவருக்கு தற்போது 45 வயதுதான் ஆகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஒரு இளம் தலைவர் எவ்வாறு ஒரு தலைவராக தனது பங்கை ஆற்றுவார் போன்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
பாஜக கட்சி விதிகளின் படி, குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருந்த ஒருவர் மட்டுமே கட்சியின் தேசியத் தலைவராக முடியும். இந்த விதியின் கீழ், நிதின் நபின் செயல் தலைவராக நியமிக்கப்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை.
பாஜக எம்.பி.யும் பிகார் மாநில பாஜக முன்னாள் தலைவருமான சஞ்சய் ஜெய்ஸ்வால் பிபிசியிடம் பேசுகையில், “நீங்கள் வயதைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நிதின் நபின் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் சத்தீஸ்கரின் பாஜக பொறுப்பாளராக இருந்தார், அங்கு பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவில் யார் தலைவராக வந்தாலும், அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் அவருக்குப் பின்னால் நிற்பார்கள்” என்றார்.
பிகாரில் உள்ள ஒவ்வொரு பாஜக தொண்டருடனும் நிதின் நபினுக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நம்புகிறார்.
பிகாரைச் சேர்ந்த ஒருவர் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
சமீப காலமாக, வெளியில் அதிகமாக பேசப்படாத பல முகங்களுக்கு பாஜக பெரிய பொறுப்புகளை வழங்கி வருகிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி முதலமைச்சர்களின் பெயர்கள் இந்த வகையில் குறிப்பிடப்படுகின்றன.
மூத்த பத்திரிகையாளர் நச்சிகேத நாராயண் இதுகுறித்துப் பேசுகையில், “நிதின் நபினின் வயதை ஒரு வலுவான புள்ளியாகக் காட்டக்கூடிய ஒரு கட்சி பாஜக. இளைஞர்கள் நிறைந்த நாட்டில், இளைஞர்களுடன் சிறப்பாகத் தொடர்புகொள்ள ஒரு இளம் முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று கட்சி கூறலாம்”என்றார்.
பாஜகவா அல்லது ஆர்எஸ்எஸ்ஸா? – இது யாருடைய வெற்றி?
பட மூலாதாரம், ANI
பாஜகவில் தலைவர் பதவிக்கு இதுவரை எந்த வாக்கெடுப்பும் நடந்ததில்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களுக்குள் விவாதித்து, தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவதே வழக்கம்.
மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லா கூறுகையில், “நிதின் கட்கரி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டபோது, தேசிய அரசியலில் அவருக்கு பெரிய பங்கு இருக்கவில்லை. இப்போது பாஜக தனது தலைமையை எதிர்காலத்திற்காக தயார்படுத்தி வருகிறது, அதில் காங்கிரஸ் மிகவும் பின்தங்கியுள்ளது”என்றார்.
நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார், அதேசமயம் நிதின் நபின் ஆர்.எஸ்.எஸ்-லிருந்து விலகி இல்லாவிட்டாலும், அதற்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதில்லை.
“நிதின் கட்கரியின் சகாப்தம் பாஜகவில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு நெருங்கிய நபர்களின் சகாப்தமாக இருந்தது. தற்போதைய சகாப்தம் ஆர்எஸ்எஸ்ஸுக்கு நெருங்கிய நபர்களின் சகாப்தம் அல்ல. இப்போது நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்களின் சகாப்தம் வந்துவிட்டது” என்று பிரிஜேஷ் சுக்லா கூறுகிறார்.
நிதின் நபின் தனது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றும், அதனால் பாஜகவின் மூத்த தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
நிதின் நபினை நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகக் காணலாம் என்று நச்சிகேத நாராயண் நம்புகிறார்.
“2010 ஆம் ஆண்டு, குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதி, பாஜகவின் தேசிய செயற்குழுவில் கலந்துகொள்வதற்காக பிகாரின் தலைநகரான பாட்னாவிற்கு வந்தார். அப்போது, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தை நிதின் நபின் மற்றும் சஞ்சீவ் சௌராசியா ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் வெளியிட்டனர்” என்று அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “விளம்பரத்தில் வெளியான அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு விருந்தை நிதிஷ் குமார் புறக்கணித்தார். தேசிய அரசியலில் நரேந்திர மோதி குறித்த எந்த விவாதமும் இல்லாதபோதே நிதின் நபின், மோதிக்கு ஆதரவாக இருந்தார் என்று நாம் சொல்லலாம்”என்றார்.
“நிதின் நபினை கட்சியின் செயல் தலைவராக்குவதன் மூலம், நரேந்திர மோதியும் அமித் ஷாவும் கட்சி விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விட தாங்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதைக் காட்டியுள்ளனர்”என்று நச்சிகேத நாராயண் கருதுகிறார்.
இந்த அறிவிப்பு எத்தகைய நேரத்தில் வெளியாகியுள்ளது ?
பட மூலாதாரம், AFP via Getty Images
காங்கிரஸ் கட்சி டெல்லியில் பாஜக மீது ”வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பேரணி நடத்திய அதே நாளில், பாஜக நிதின் நபினைத் தனது செயல் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
“இப்போது எல்லா இடங்களிலும் யார் இந்த நிதின் நபின் என்பது பற்றியே செய்திகள் உள்ளன. இந்த புதிய முகம் மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் பேரணியின் செய்தி எவ்வளவு பெரியதாகியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது நிதின் நபின்தான் தலைப்புச் செய்தி ஆகியுள்ளார்” என்றார் நச்சிகேத நாராயண்.
இருப்பினும், நிதின் நபின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை வல்லுநர்கள் வேறு விதமாகவும் பார்க்கிறார்கள்.
“பாஜக மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கிறது, நேரத்தை வீணடிக்க அது விரும்பவில்லை. நிதிஷுக்குப் பிறகு பிகாரில் யார் ஆட்சியில் இருப்பார்கள் என்ற கேள்வி இப்போது அதன் முன் உள்ளது? அப்படி ஒரு விஷயத்தை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று பிரிஜேஷ் சுக்லா கூறுகிறார்.
பாஜக தற்போது நிதின் நபினை செயல் தலைவராக சோதனை செய்யும் என்றும், முழுமையாக உறுதியாகிவிட்ட பிறகு, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நிரந்தரத் தலைவராக அவரது பெயர் அறிவிக்கப்படும் என்றும் பிரிஜேஷ் சுக்லா கருதுகிறார்.

நிதின் நபினைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும், அவர் பல சவால்களை எதிர்கொள்கிறார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் உட்பட பல முனைகளில் பாஜக சவால்களை கொண்டுள்ள நேரத்தில் அவர் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர் பல தலைவர்களை விட மிகவும் இளையவர் என்பதுதான்.
பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை பொறுத்தவரை, அவர் ஆர்எஸ்எஸ்ஸால் நம்பப்பட்டவர், மேலும் வயது அடிப்படையில் பல பாஜக தலைவர்களை விட மிகவும் மூத்தவர்.
அதேசமயம் நிதின் நபின், பிகார் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார், மேலும் மூத்த தலைவர்களுடனான அவரது ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு