• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு | seeman slams bjp and congress party

Byadmin

Nov 4, 2025


திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘உரையாடுவோம் வாருங்கள்’ எனும் தலைப்பிலான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியது: “சிறுபான்மையினருக்கு வேண்டியது உரிமை, சலுகை அல்ல. 60 ஆண்டுகளாக நீங்கள் போட்ட வாக்குப் பிச்சையால் அவர்கள் வளமாக உள்ளனர். நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தால் நாட்டை நான் வசப்படுத்தியிருப்பேன். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சிறுபான்மையினர் என உங்களை யாரேனும் அழைத்தால் செருப்பைக் கழற்றி அடியுங்கள். நீங்கள் சிறுபான்மையினர் அல்ல. ஒரு பெரிய தேசிய இனமான தமிழர்கள். இதை உணர்ந்துகொண்டு நிமிருங்கள். உரிமையை கேட்டுப் பெறுவதற்கு பதிலாக சலுகை கேட்டே இந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது.

சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது உண்மையில் திராவிடக் கட்சித் தலைவர்களின் பாதுகாப்புதான். சாராயம், கொக்கைன் அருந்தினால்தான் போதை ஏறும். ஆனால், சாதியும், மதமும் பெயரைச் சொன்னாலே ஏறிவிடும். சாதி, மத அடையாளம் செத்தாலும் போகாது. சாதி, மதங்களாக பிரிந்து நின்றால் பிளவுபடுவீர்கள். ஒன்றிணைந்து நின்றால் வலிமை பெறுவீர்கள்.

திராவிடம் நம்மை சிதைத்து, பிரித்து ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. பொதுத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி நிறுத்திய பட்டியலின வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைவிட கூடுதல் வாக்கு பெற்றுள்ளனர். இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். நாம் வந்தவரை வாழ வைப்போம். ஆனால், சொந்தவரை மட்டும் ஆள வைப்போம்.

காங்கிரஸ், பாஜக இரண்டும் கொள்கையில் ஒன்றுதான். இந்தக் கட்சிகளின் கொடியின் நிறங்கள் மட்டுமே மாறுகின்றன. பாஜக இன்று செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள், சட்டங்கள் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தவையே. இரண்டுக்கும் கொள்கை, செயல்பாட்டில் வேறுபாடு இல்லை. பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று சீமான் பேசினார்.

இந்த நிகழ்வில், ஒரு குழந்தைக்கு அரசேந்திர சோழன் என பெயர் சூட்டினார் சீமான். தொடர்ந்து தமிழர் நாள் காட்டியை அவர் வெளியிட்டார்.



By admin