சென்னை: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, நமக்கு ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் திங்கட்கிழமை (செப்.15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தனது ஆட்சியில் தான் எதிர்கொண்ட நெருக்கடி சூழல், பாஜக உடனான கூட்டணி, உட்கட்சி விவகாரம் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. இதில் 17, 18 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நமது எழுச்சி பயணம் இருந்தது. மழை காரணமாக அந்த சுற்றுப்பயணம் வேறொரு தேதியில், அதாவது இந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்தோம்.
உடனடியாக இன்று பத்திரிகையில் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். உள்கட்சி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என கூறப்பட்டது. பத்திரிகையாளார்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.
நான் சொல்வதை எழுதிக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம்தான் முக்கியம். அதை இமியளவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு உள்ளீர்கள். அந்த கைக்கூலி யார் என்பதை அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சில பேர் அதிமுக அரசை கவிழ்க்க பார்த்தார்கள். அவர்களை மன்னித்து, அரவணைத்து, துணை முதல்வர் பொறுப்பை கொடுத்தோம். இருந்தும் திருந்தியபாடில்லை. புனிதம் மிக்க அதிமுக தலைமை கழகத்தை அடித்து நொறுக்கினார்கள். அவர்களை நாங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அது தொண்டனின் சொத்து.
உன்னொருவர் அதிமுக அரசை கவிழ்க்க 18 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி சென்றார். அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நான் தொண்டனாக இருந்து உயர்ந்திருக்கிறேன். எனக்கு உறுதியான எண்ணமும், மனநிலையும், அஞ்சா நெஞ்சமும் உண்டு. என்னை யாரும் விரட்டி விட முடியாது.
இதுவரை கடந்த காலத்திலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, இப்போதும் சரி மத்தியில் இருப்பவர்கள் யாரும் நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்யப் பார்த்தார்கள். அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் தான் காப்பாற்றி கொடுத்தார்கள்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. வள்ளுவர் சொன்னபடி நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். எனவே மத்திய பாஜக அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம். அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதில் அரசியல் வியூகம் உள்ளது. கூட்டணி சேர்வது அரசியல் நகர்வு. இது தேர்தல் சார்ந்தது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.
இதே திமுக பாஜக உடன் 1999, 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். அப்போது பேசாதவர்கள் இப்போது ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நமக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. பல ஆயிரம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளார்கள். அதனால்தான் நிதி வழங்கி வருகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இப்படி பேசி வருகிறது” என்று தெரிவித்தார்.