நாமக்கல்: “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்பட யாரையும், பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்” என மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் செப்.19, 20, 21 ஆகிய நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் பாஜகவினர் திரளாக பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். அதில், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பங்கேற்று பேசும்போது, “தமிழகத்தில் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று இபிஎஸ் தமிழக முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.
இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடி அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை மக்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2024 தேர்தலில் பாஜக, அதிமுக தனித்தனியாக போட்டியிட்டபோதும், 2 தொகுதிகளில் அதிமுக கூடுதல் ஓட்டு பெற்றுள்ளது.
தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவு அதிமுக மற்றும் பாஜவினர் கலந்துகொண்டு அவருக்கு சிறப்பான ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறியது: “அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக செயல்படும் யாரையும் தேர்தல் முடியும் வரை பாஜக சந்திக்காது. கொள்ளையடித்த பணத்தை மாதந்தோறும் பிரித்துக் கொடுத்து, இஎம்ஐ வழங்கி கூட்டணியை திமுக வலுவாக வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்கு வரும் 19, 20, 21-ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதில் பாஜக சார்பில் திரளாக கலந்து கொள்ள உள்ளோம், நவம்பர் மாதத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்.
செங்கோட்டையன் சொல்லும் ஒருங்கிணைந்த அதிமுக கான்செப்ட்டே தவறு, செங்கோட்டையன் கருத்துக்கும், பாஜவுக்கும் சம்பந்தமும் இல்லை. அதிமுக ஆட்சியை அமைப்பதே பாஜகவின் நோக்கம். பாஜக தலைவரை விமர்சனம் செய்தால் நாங்கள் தினகரனை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஓட்டுப் பிரிக்க, தனிப்பட்ட பொறாமையில் கட்சியை ஆரம்பித்துவிட்டு அவர் இவ்வாறு பேசக் கூடாது. தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த செங்கோட்டையன் போல மேலும் பலர் வருவார்கள். ஆனால், அது தேர்தலில் எதிரொலிக்காது. பாஜக நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை. இபிஎஸ்ஸுக்கு எதிராக செயல்படும் யாரையும் தேர்தல் முடியும் வரை பாஜக சந்திக்காது” என்றார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ‘ஆப்சென்ட்’ – நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகிய இருவரும் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுபோல் கடந்த முறை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் இருவரும் பங்கேற்கவில்லை.
முறையான அழைப்பு விடுக்காததே இருவரும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்மணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எனினும், அழைப்பு விடுக்கிறோமா, இல்லையா என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என்றார்.