ராணிப்பேட்டை / கோவை: “பாஜக தலைவர் எனக் கூறி நடிகர் (சந்தான பாரதி) படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள ராஜாதித்யா சோழன் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு எழுச்சி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு இன்று வந்தார். அவரை வரவேற்று ராணிப்பேட்டை, முத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில், ‘இந்தியாவின் இரும்பு மனிதரே… வாழும் வரலாறே…’ என்ற வாசகங்களோடு, அந்த போஸ்டர்களில் அமித் ஷாவுக்கு பதிலாக திரைப்பட நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி என்ற பாஜக பெண் நிர்வாகியின் பெயர் இடம் பெற்றுள்ளதால் இந்த போஸ்டர்கள் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அருள்மொழி ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அம்மனுவில், ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இது போன்ற போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்துகிறார்கள். எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இந்த போஸ்டரை ஒட்டவில்லை. இது குறித்து காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தி போஸ்டர் ஒட்டியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “போஸ்டர் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினால் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என தெரியவரும்” என்றனர். இந்தப் போஸ்டர் விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், மாவட்டத்தில் உள்ள பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜக தலைவர் எனக் கூறி நடிகரின் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக. எங்கள் கட்சியின் தலைவரை கேவலப்படுத்துவதாகக் கூறி திமுகவினர், நடிகரின் முகத்தை அச்சிட்டு ஒட்டியிருப்பதைப் பார்த்தாலே, இது பாஜக சுவரொட்டி அல்ல என்பது புரிந்திருக்கும்.
நாங்கள் சொல்லும் எந்த வாதத்தையும், திமுகவினரால் எதிர்கொண்டு பேச முடியவில்லை. அதற்கு பதில் கூற முடியாமல், இவ்வாறு செய்து, திமுக தங்களை கேவலப்படுத்திக் கொண்டுள்ளது” என்று அண்ணாமலை சாடினார்.