பட மூலாதாரம், Getty Images
கடந்த 1980இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஜனதா கட்சி அரசில் துணைப் பிரதமராக இருந்தவரான ஜெகஜீவன் ராம், இரட்டை உறுப்பினர் விவகாரத்தை விடப்போவதில்லை என்றும் அது பற்றிய இறுதி முடிவை கண்டிப்பாக எட்டப் போவதாகவும் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவித்தார்.
இரட்டை உறுப்பினர் அதாவது ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருப்பதற்கு பல பெரிய தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜனசங்கத்தினர் ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறவில்லை என்றால் அவர்கள் ஜனதா கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஏப்ரல் 4ஆம் தேதி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஜனசங்க உறுப்பினர்கள் இதை ஏற்கெனவே அறிந்திருந்தனர்.
கின்ஷுக் நாக் தனது ‘The Saffron Tide, The Rise of the BJP’ என்ற புத்தகத்தில், “1980 ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் ஜனசங்கத்தினர், டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அதில் சுமார் மூவாயிரம் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் உருவாக்கத்தை அறிவித்தனர்,” என்று எழுதுகிறார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் கட்சியின் தலைவராகவும், லால் கிருஷ்ண அத்வானி, சூரஜ் பான், சிக்கந்தர் பக்த் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த1980ஆம் ஆண்டு தேர்தலில் ஜனதா கட்சியால் 31 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதில் ஜனசங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 16. அதாவது கிட்டத்தட்ட பாதி.
14 மாநிலங்களவை உறுப்பினர்கள், ஐந்து முன்னாள் கேபினட் அமைச்சர்கள், எட்டு முன்னாள் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆறு முன்னாள் முதல்வர்கள் ஆகியோருடன் இவர்கள் அனைவரும் புதிய கட்சியில் சேர முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் தாங்கள்தான் உண்மையான ஜனதா கட்சி என்று கூறிக்கொண்டனர்.
தேர்தல் ஆணையம் தாமரை சின்னத்தை வழங்கியது
பட மூலாதாரம், Getty Images
ஜனசங்கத்துடன் தொடர்புடைய தலைவர்கள் தாங்கள்தான் உண்மையான ஜனதா கட்சி என்று கூறிக் கொண்டதை ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் எதிர்த்த போது அவரது எதிர்ப்பை தேர்தல் ஆணையம் முதலில் ஏற்கவில்லை.
ஆணையம் நேரடியாக பாரதிய ஜனதா கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது மற்றும் ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான ‘ஹல்தர் கிஸான்’ (ஏரைத் தாக்கியபடி இருக்கும் விவசாயி) சில காலம் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்தை வழங்கியது.
முன்னதாக தேர்தல் சின்னமாக சக்கரம் அல்லது யானையை வழங்குமாறு பாரதிய ஜனதா கட்சி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
தேர்தல் சின்னத்தை முடக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் சந்திரசேகரின் கோரிக்கையை ஏற்று ஹல்தர் கிஸான் தேர்தல் சின்னம் மீதான முடக்கத்தை நீக்கியது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் கட்சி அந்தஸ்து அப்படியே இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
வெளி தலைவர்களுக்கு முன்னுரிமை
ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியில் ஆர்எஸ்எஸ் அல்லாத தலைவர்கள் புறக்கணிக்கப்படவில்லை.
“முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். ஹெக்டே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிக்கந்தர் பக்த் ஆகியோரை கட்சி திறந்த மனதுடன் வரவேற்றது மட்டுமின்றி அவர்களை மேடையிலும் அமர வைத்தது. அது மட்டுமின்றி அக்கட்சியின் சட்ட விதிகளை உருவாக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்த இருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேராதவர்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம்” என்று நளின் மேத்தா தனது ‘தி நியூ பிஜேபி’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ராம் ஜெத்மலானி நாட்டின் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்து வந்தவர். சிக்கந்தர் பக்த் டெல்லியை சேர்ந்த முஸ்லிம். கட்சித் தலைவராக வாஜ்பேயி பெயரை சிக்கந்தர் பக்த் முன்மொழிந்தார். அதை ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் வழிமொழிந்தார்.
பட மூலாதாரம், Getty Images
காந்திய சோஷியலிசத்தை ஏற்றுக்கொண்டது
புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தது. புதிய சித்தாந்தத்துடன் கட்சிக்கு புதிய பெயரும் சூட்டப்பட வேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார்.
கட்சியின் முதல் அமர்வுக்கு வந்தவர்களிடம் கட்சியின் பெயர் பற்றிக் கேட்டபோது, மூவாயிரம் உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே ஜனசங் என்ற பழைய பெயரைத் தொடர்வதை ஆதரித்தனர் என்று பாஜகவின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இறுதியில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரைச் சூட்ட கருத்தொற்றுமை ஏற்பட்டது. கருத்தியல் ரீதியாக கட்சி ‘காந்திய சோஷலிசத்தை’ ஏற்றுக்கொண்டது. ஆனால் ஆரம்பத்தில் கட்சியின் பல வட்டாரங்களில் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
“சோஷலிசம் என்ற வார்த்தைப் பயன்பாட்டை விஜயராஜே சிந்தியா தலைமையிலான பல பா.ஜ.க தலைவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் இது கம்யூனிஸ்டுகளுடன் கருத்தியல் நல்லிணக்கம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து விலகியிருக்க ஆர்எஸ்எஸ் விரும்பியது. ‘காந்திய சோஷலிசத்தை’ ஏற்றுக் கொள்வதன் மூலம் கட்சி காங்கிரஸை பின்பற்றுவதாகக் குற்றச்சாட்டு எழும்’ என்று வேறு சில தலைவர்கள் நினைத்தனர்,” என்று கின்ஷுக் நாக் எழுதுகிறார்.
அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாஹேப் தியோரஸ் காந்திய சோஷலிசத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக இல்லை என்றும் பின்னர் அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
“முஸ்லிம்கள் உள்பட இந்துக்கள் அல்லாதவர்களை கட்சியில் சேர்த்ததில் ஆர்எஸ்எஸ் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் ஜனசங்கத்தின் பழைய சித்தாந்தத்தை மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கட்சியில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் காரணத்திற்காகவே கட்சியின் மேடையில் ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயின் படங்களுடன் ஜெய்பிரகாஷ் நாராயணின் படமும் வைக்கப்பட்டிருந்தது,” என்று கின்ஷுக் நாக் குறிப்பிடுகிறார்.
பம்பாயில் கட்சியின் முதல் மாநாடு
பட மூலாதாரம், Rupa Publications
கடந்த 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத கடைசி வாரத்தில் பம்பாயில் (இப்போது மும்பை) கட்சியின் முழு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதற்குள் நாடு முழுவதும் 25 லட்சம் பேர் பாரதிய ஜனதாவில் உறுப்பினர்களாகி இருந்ததாக லால் கிருஷ்ண அத்வானி தனது சுயசரிதையான ‘மை கண்ட்ரி, மை லைஃப்’ புத்தகத்தில் கூறுகிறார்.
ஜன சங்கம் தனது புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டவில்லை.
1981 ஜனவரி 31ஆம் தேதி இந்தியா டுடேவில் வெளியான ‘பாஜக மாநாடு, புதிய பாட்டிலில் பழைய ஒயின்’ என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் “பாஜகவின் மொத்தம் 54,632 பிரதிநிதிகளில் 73 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். பம்பாயின் பாந்த்ரா ரெக்லேமேஷன் பகுதியில் ஒரு தற்காலிகக் குடியிருப்பு உருவாக்கப்பட்டது,” என்று சுமித் மித்ரா எழுதியுள்ளார்.
டிசம்பர் 28ஆம் தேதி மாநாடு தொடங்கியது. 40 ஆயிரம் பேருக்கு தங்கும் வசதி, உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதியத்திற்குள் 44 ஆயிரம் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தனர். மாலைக்குள் மேலும் அதிகமான பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாநாடு முடியும் பட்சத்தில் கூட்டத்திற்கு வெளியே சென்று சாப்பிடுமாறு கட்சியின் பொதுச் செயலர் லால் கிருஷ்ண அத்வானி கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
பட மூலாதாரம், Rupa Publications
திறந்த ஜீப்பில் வாஜ்பேயி
கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கட்சியின் புதிய கொடி பறக்கவிடப்பட்டு இருந்தது. கொடியில் மூன்றில் ஒரு பங்கு பச்சை நிறமாகவும், இரண்டு பங்கு காவி நிறமாகவும் இருந்தது.
கடந்த 1980 டிசம்பர் 28ஆம் தேதி மாலை, 28 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிவாஜி பூங்காவில் கட்சியின் திறந்த அமர்வு நடைபெற்றது. அதில் பொது மக்களும் அனுமதிக்கப்பட்டனர்.
வினய் சீதாபதி தனது ‘ஜுகல்பந்தி, பிஜேபி பிஃபோர் மோதி’ என்ற புத்தகத்தில், “கட்சியின் புதிய தலைவர் அடல் பிஹாரி வாஜ்பேயி, கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சிவாஜி பூங்கா வரையிலான நான்கு கிலோமீட்டர் பாதையைத் திறந்த ஜீப்பில் கடந்து சென்றார்.
உள்ளூர் மக்களின் உணர்வையும், இந்து தேசியத்தையும் உணர்த்தும் வகையில் ஒருவர் மராத்தி சிப்பாய் வேடம் அணிந்து முன்னால் குதிரையில் சென்றார். அதற்குப் பின்னால் டிரக்குகளின் அணிவரிசை இருந்தது. டிரக்குகளில் தீன்தயாள் உபாத்யாய் மற்றும் ஜெய்பிரகாஷ் நாராயணின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன,” என்று எழுதியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் தியோரஸின் சகோதரர் பாவ்ராவ் தியோரஸும் அங்கு வந்திருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணின் காந்திய சோஷலிசத்தை ஜீரணிப்பது கடினம் என்று அங்கிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஸேஷாத்ரி சாரி ஒப்புக்கொண்டார்.
“பெரும்பாலான பா.ஜ.க.வினர் காந்திய சோஷலிசத்தையும், கட்சிக் கொடியை மாற்றுவதையும் ஏற்கவில்லை. அப்போது நான் தொண்டனாக இருந்ததால் இது எனக்குத் தெரியும். இந்தக் கருத்து வேறுபாடு பரவலாக இருந்தது. ஆனால் அது தலைதூக்க அனுமதிக்கப்படவில்லை,” என்று பிரவீன் தொகாடியாவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
விஜயராஜே சிந்தியாவின் கடும் எதிர்ப்பு
கட்சியின் மூத்த தலைவர் விஜயராஜே சிந்தியா, கட்சியின் புதிய சித்தாந்தம் தொடர்பான தனது எதிர்ப்பை மறைக்கவில்லை. இந்திரா காந்தியின் சோஷலிசம்தான் அரச சமஸ்தானங்களின் அதிகாரத்தைப் பறித்தது என்று அவர் கருதினார்.
அவர் தனது சொந்த 5 பக்க எதிர்ப்பு வரைவைப் பிரதிநிதிகள் மத்தியில் விநியோகித்தார். ‘காந்திய சோஷலிசம்’ என்ற முழக்கம் சாதாரண பா.ஜ.க தொண்டர்களிடையே குழப்பத்தை உருவாக்கும். ஏனென்றால் முற்போக்கானதாகத் தோன்றுவதற்காக மட்டுமே இந்த முழக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பா.ஜ.கவை காங்கிரஸின் நகல் போன்று ஆக்கி அதன் அசல் தன்மையை அழித்துவிடும்,” என்று அந்த வரைவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் அவர் தனது ‘ராயல் டு பப்ளிக் லைஃப்’ என்ற புத்தகத்தில், “இந்த மாற்றத்திற்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தேன். இருப்பினும் அது பம்பாய் மாநாட்டில் கட்சியின் வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனதா கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டதால், காந்திய சோஷலிசத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்று பல கட்சித் தலைவர்கள் கருதினர்” என்று எழுதினார்.
“இறுதியில் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ராஜமாதா தனது எதிர்ப்புக் கடிதத்தை வாபஸ் பெறும்படி வற்புறுத்தப்பட்டார். பா.ஜ.கவின் சோஷலிசம் மார்க்ஸின் சோஷலிசத்திற்கு நேர் எதிரானது என்பதை மூத்த கட்சித் தலைவர்கள் தன்னிடம் தெளிவுபடுத்தியதாக அவர் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்,” என்று கிறிஸ்டோபர் ஜாஃப்ரலெட் தனது ‘தி இந்து நேஷனலிஸ்ட் மூவ்மெண்ட் அண்ட் இண்டியன் பொலிடிக்ஸ்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பா.ஜ.கவின் சோஷலிசம் என்பது தீன்தயாள் உபாத்யாயின் ‘பொது நலன்’, ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக வாஜ்பேயி தலையிட்டு, ‘காந்திய சோஷலிசம்’ என்ற சித்தாந்தத்தில் இருந்து கட்சி பின்வாங்காது என்றார்.
‘நேர்மறை மதச்சார்பின்மை’ என்ற வாதம்
பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 30ஆம் தேதி இரவு வாஜ்பேயி தனது உரையில், பாபா சாகேப் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கையை பா.ஜ.க ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். அவர் தனது கட்சியின் ‘நேர்மறை மதச்சார்பின்மை’ என்ற கருத்தையும் தெளிவுபடுத்தினார்.
கடந்த 17ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி சிறுபான்மையினரிடம் கடைபிடித்த கொள்கைக்கு ஏற்ப இது இருந்தது. ஆக்ராவில் சத்ரபதி சிவாஜி காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவருடைய பணியாள் முஸ்லிமாக இருந்ததாக வாஜ்பேயி கூறினார்.
கடந்த 1661ஆம் ஆண்டில் சிவாஜி தனது கொங்கன் படையெடுப்பை முஸ்லிம் துறவியான கெல்ஷியின் யாகுத்பாபாவின் ஆசியுடன் தொடங்கினார் என்று வாஜ்பேய் கூறினார்.
“ஜனதா கட்சி உடைந்திருக்கலாம், ஆனால் ஜெயபிரகாஷ் நாராயணின் கனவுகளை ஒருபோதும் உடைக்க விடமாட்டோம்” என்று அடல் பிஹாரி வாஜ்பேய் கூறினார்.
காந்திய சோஷலிசம் தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு இருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அவர் மறுத்தார். இந்த வார்த்தையின் அடிப்படை அர்த்தம் முதலாளித்துவத்தையும், கம்யூனிசத்தையும் நிராகரிப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
“இருள் நீங்கும், சூரியன் உதிக்கும், தாமரை மலரும் என்று மேற்கு கடலின் கரையில் நின்றபடி என்னால் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் சொல்ல முடியும்,” என்பது வாஜ்பேயி உரையின் கடைசி வார்த்தைகள்.
மாநாட்டில் இருந்து திரும்பிய பிறகு ஆன்லுக்கர் இதழின் ஆசிரியர் ஜனார்தன் தாக்கூர், “ஒரு நாள் அடல் பிஹாரி வாஜ்பேயி இந்தியாவின் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையுடன் பம்பாய் மாநாட்டில் இருந்து நான் திரும்பினேன். அவர் பிரதமராக வரக்கூடும் என்று நான் கூறவில்லை. அவர் நிச்சயமாக பிரதமராக வருவார் என்று கூறுகிறேன். ஜோதிடத்தின் அடிப்படையில் நான் கூறவில்லை, ஏனென்றால் நான் ஜோதிடன் அல்ல. அவரையும், அவரது கட்சியையும் மிகவும் கவனமாகப் பார்த்த பிறகு இவ்வாறு சொல்கிறேன். வாஜ்பேயி வருங்கால கட்சியின் தலைவர்,” என்று எழுதினார்.
பா.ஜ.கவுக்கு முகமது கரீம் சாக்லா ஆதரவு
பட மூலாதாரம், Getty Images
இந்த உரையின் போது நேரு மற்றும் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரான முகமது கரீம் சாக்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நாட்டின் பிரிவினைக்கு முன் சாக்லா, முகமது அலி ஜின்னாவுக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.
“அந்த நேரத்தில், அரசியல், சட்டம் ஆகிய இரு துறைகளிலும் ஜின்னா என் ஆதர்ச தலைவராக இருந்தார். அவர் ஒரு தேசியவாதியாக இருக்கும் வரை நான் அவருடன் இருந்தேன். ஆனால் அவர் ஒரு வகுப்புவாதியாகி, இரு தேசக் கோட்பாட்டைப் பரிந்துரைக்கத் தொடங்கிய போது எங்கள் பாதைகள் பிரியத் தொடங்கின,” என்று தனது சுயசரிதையான ‘ரோஸஸ் இன் டிசம்பரில்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முதன்மையாக முஸ்லிம் பெரும்பான்மையினரின் நலனுக்காக இருக்கும். ஆனால் சிறுபான்மையினராக இருப்பவர்களின் நிலை என்ன ஆகும் என்று ஜின்னாவிடம் சாக்லா கேட்டார்,
‘அவர்களின் நிலை குறித்து எனக்கு ஆர்வமில்லை’ என்பதுதான் ஜின்னாவின் பதில். (‘ரோஸஸ் இன் டிசம்பர்’ பக்கங்கள் 78-80).
“நான் ஒரு இந்து, ஏனென்றால் எனது பாரம்பரியத்தை எனது ஆரிய மூதாதையர்களுடன் இணைத்து நான் பார்க்கிறேன். உண்மையான இந்துத்துவத்தை ஒரு மதமாகப் பார்ப்பது தவறு. அது ஒரு தத்துவம் மற்றும் வாழ்க்கை முறை,” என்று ‘தி பவன்ஸ் ஜர்னல்’ இதழின் 1979 செப்டம்பர் மாதப் பதிப்பில் சாக்லா எழுதியுள்ளார்.
மாநாட்டின் செலவுகளை ஏற்றுக்கொண்ட நுஸ்லி வாடியா
பட மூலாதாரம், Getty Images
சாக்லா மதச்சார்பின்மையின் அடையாளம் என்று கூறி அடல் பிஹாரி வாஜ்பேயி அவரை வரவேற்றார். ஜின்னாவுடன் இணைந்து பணியாற்றிய போதும் இரு தேசக் கோட்பாட்டை அவர் எதிர்த்தார் என்று வாய்பேயி குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த சாக்லா, வாஜ்பேயிதான் வருங்கால பிரதமர் என்று கூறினார். அங்கு கூடியிருந்த பிரதிநிதிகளிடம் அவர், “நீங்கள் ஒரு வகுப்புவாத கட்சியோ அல்லது ஜனசங்கத்தின் புதிய வடிவமோ அல்ல என்பதை மக்களிடம் கூறுங்கள். நீங்கள் ஒரு தேசிய கட்சி. அடுத்த தேர்தலிலோ அதற்கு முன்னரோ இந்திரா காந்தியின் இடத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்,” என்று கூறினார்.
இந்த முழு நிகழ்ச்சிக்கும் 20 லட்சம் ரூபாய் செலவானது. அது அப்போது மிகப்பெரிய தொகை.
“பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியா இந்தச் செலவின் பெரும்பகுதியை வழங்கினார் என்று அந்த மாநாட்டில் பங்கேற்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். 1970களின் இறுதிக்குள் பா.ஜ.கவுக்கு அதிக நிதி வழங்கிய மிகப்பெரிய தொழிலதிபராக ஜின்னாவின் பேரன் நுஸ்லி வாடியா மாறினார்,” என்று வினய் சீதாபதி குறிப்பிடுகிறார்.
கட்சியின் முதல் மாநாடு நடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1996ஆம் ஆண்டின் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.கவுக்கு வாய்ப்பு வந்தது. அப்போது முழு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதால் பா.ஜ.கவால் ஆட்சியில் தொடர முடியவில்லை.
ஆனால் அடுத்த இரண்டு தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் முதல் பா.ஜ.க அரசு 1998இல் பதவியேற்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.