பட மூலாதாரம், Hina Durrani/Pakistan Chronicle
கடந்த 1953ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று, லாகூரின் ‘இம்ரோஸ்’ நாளிதழ், புகழ்பெற்ற நடிகையும் பாடகியுமான நூர் ஜஹான் மற்றும் கிரிக்கெட் வீரர் நசார் முகமது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டது.
அதன்படி, நசார் முகமதுவை சந்திக்க நூர் ஜஹான் ஓர் இடத்திற்குச் சென்றபோது, அவரது கணவர் ஷௌகத் உசேன் ரிஸ்வியும் திடீரென அங்கு வந்தார்.
ஷௌகத் உசேன் ரிஸ்வியை கண்டதும், நசார் முகமது கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதன் விளைவாக, அவரது ஒரு கை உடைந்தது, அதன் பிறகு அவரால் மீண்டும் ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது.
நூர் ஜஹான் மற்றும் நசார் முகமதுவின் காதல் கதை பாகிஸ்தான் திரையுலக வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான, அதே நேரம் சோகமான அத்தியாயமாகும்.
அந்தக் காதல் கதை ஒரு துயரத்தில் முடிந்தது.
அந்த விபத்தில் நசார் முகமதுவின் கை உடைந்ததால், அவர் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற வேண்டியிருந்தது.
நசார் முகமது புகழ்பெற்ற இசைக்கலைஞர் பெரோஸ் நிசாமியின் தம்பி. அவருக்குப் பாடுவதில் ஆர்வம் இருந்தது. அவரது குரலைக் கேட்டவர்கள் அது மிகவும் இனிமையாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.
நூர் ஜஹானுக்கும் நசார் முகமதுவுக்கும் இடையிலான காதல் எப்போது, எங்கு தொடங்கியது என்பது குறித்து நூர் ஜஹான், நசார் முகமது, ஷௌகத் உசேன் ரிஸ்வி ஆகியோரின் கூற்றுகளில் பெரும் முரண்பாடுகள் உள்ளன.
நூர் ஜஹான் முதன்முதலில் நசார் முகமதுவை சந்தித்தபோது அவருக்கு 11 அல்லது 12 வயது. அந்தச் சம்பவம் மும்பையில் நடந்தது.
மும்பையில் இசை மற்றும் பாட்டு கற்க நூர் ஜஹான், பெரோஸ் நிசாமியின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில், பஞ்சாப் கிரிக்கெட் அணியுடன் நசார் முகமதுவும் மும்பைக்கு வருவதுண்டு.
பட மூலாதாரம், Pakistan Chronicle
நூர் ஜஹானும் நசாரும் எங்கே சந்தித்தார்கள்?
கடந்த 1972ஆம் ஆண்டு வசீம் அக்பருக்கு அளித்த நேர்காணலில் நூர் ஜஹான் கூறுகையில், “அது ஒரு மாலை நேரம், நான் பாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஒல்லியான இளைஞர் என் அறைக்குள் நுழைந்து என்னைச் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினார்.”
“நான் முதலில் அவரைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் அவர் என்னையே உற்றுப் பார்ப்பதை நிறுத்தவில்லை, அதனால் பெரோஸ் சாஹிபிடம் இந்த பையன் யார் என்றும், அவர் ஏன் என்னைத் தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கேட்டேன்.”
“நான் கோபப்படுவதைக் கண்டு அவரது முகம் மாறியது, ஆனால் பெரோஸ் சாஹிப் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவர் என்னிடம் அவர் தனது தம்பி என்று கூறினார்.”
“அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல பாடகரும்கூட. அவரது கஜல்களை நான் ரேடியோவில் கேட்டதே இல்லை.”
“அவர் லாகூரில் இருந்து மும்பைக்கு வந்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது? இப்போதுதான் அவர் என்னிடம் வந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
நசார் முகமது கஜல்கள் பாட வேண்டும் என்று நூர் ஜஹான் வற்புறுத்தினார். முதலில் அவர் தயங்கினாலும், பின்னர் கே. எல். சைகலின் கஜல் ஒன்றைப் பாடினார். நசார் முகமதுவின் பாணி செவ்வியல் சார்ந்ததாக இருந்தாலும், அவரது குரலில் பெரும் உணர்ச்சிப் பெருக்கு இருந்தது.
நூர் ஜஹானின் கூற்றுப்படி, அவர் மிகச் சில ஆண் பாடகர்களே அவ்வளவு சிறப்பாகப் பாடுவதைக் கேட்டிருந்தார். மேலும் நசார் முகமதுவின் குரலில் ஒரு கம்பீரம் இருந்தது. நூர் ஜஹான் நசார் இடையே படிப்படியாக காதல் மலர்ந்தது.
இருவரும் ஒருபோதும் பிரியக்கூடாது என்று சத்தியம் செய்துகொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகளை அளித்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்து வந்தனர்.
ஒரு நாள், நசார் முகமது தனது பெற்றோரின் வற்புறுத்தலை எதிர்க்க முடியவில்லை என்றும், தனது உறவினர் பெண்ணுடன் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாகவும் நூர் ஜஹானிடம் கூறினார். நிச்சயதார்த்தத்திற்கான காரணத்தை விளக்கி நசார், நூர் ஜஹானுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்.
“என் அன்பே, நான் எனது சொந்த விருப்பப்படி இந்தப் பெண்ணுடன் நிச்சயம் செய்து உனக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று நீ நினைப்பாய்” என அக்கடிதத்தில் நசார் முகமது எழுதினார்.
“நீ அப்படி நினைத்தால் அது ஒரு தவறான புரிதல். நான் துரோகி அல்ல என்று அல்லாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன். இன்றும் நான் உன்னை மட்டுமே நேசிக்கிறேன், என் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வேன்.”
“உலகில் எந்த சக்தியாலும் அந்த அன்பைக் குறைக்க முடியாது.”
“நிச்சயதார்த்தத்தை முறிக்க நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன், ஆனால் அது முடியவில்லை. எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் கதை மிகவும் வேதனையானது, இந்த நிச்சயம் முறிந்தால் ஏற்படும் அதிர்ச்சியை அவளால் தாங்க முடியாது, அவளது எதிர்காலம் என்றென்றும் இருண்டுவிடும்.”
“அந்தப் பெண் இந்த உலகில் முற்றிலும் தனிமையானவள். அவளது பெற்றோர் மிகச் சிறிய வயதிலேயே இறந்துவிட்டனர். அவளுக்கு உடன்பிறப்புகள் யாரும் இல்லை, மேலும் அவள் எங்களுக்கு உறவினரும்கூட.”
“அதனால்தான் என் பெற்றோரும் சகோதரிகளும் எந்தக் காரணத்திற்காகவும் இந்த உறவை முறிக்கத் தயாராக இல்லை.”
“நான் முன்பைப் போலவே உன்னை நேசிக்கிறேன், நான் இறந்த பிறகும் என் காதல் மாறாது. நான் இறந்தாலும், என் ஆன்மா உன்னைத் தொடர்ந்து நேசிக்கும்” என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
இவ்வாறு நூர் ஜஹான் மற்றும் நசார் முகமதுவின் காதல் கதையின் முதல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, நூர் ஜஹானின் வாழ்க்கையில் ஷௌகத் உசேன் ரிஸ்வி நுழைந்தார், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
நூர் ஜஹான் மற்றும் ஷௌகத் உசேன் ரிஸ்வி திருமணமான எட்டு முதல் பத்து நாட்களில், நசார் முகமதுவுக்கும் திருமணம் நடந்தது.
பட மூலாதாரம், Hina Durrani
ஷௌகத், நூர் ஜஹானின் காதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவு
பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகு, நூர் ஜஹானும் ஷௌகத் உசேன் ரிஸ்வியும் பாகிஸ்தானுக்கு சென்றனர். அவருக்கு லாகூரில் உள்ள ஷா நூர் ஸ்டுடியோ ஒதுக்கப்பட்டது, அங்கு அவர் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ஷௌகத் உசேன் ரிஸ்வி பலருடன் பாலியல் உறவு வைத்திருந்தார் எனக் கூறப்பட்டது.
நூர் ஜஹான் அவரைப் பல நடிகைகளுடன் தவறான உறவில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. தனது கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவதற்காக நூர் ஜஹான் மீண்டும் நசார் முகமதுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்து, நசார் முகமது எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதில் வெற்றியும் பெற்றார்.
அப்போது நசார் முகமது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார், மேலும் இந்தியாவுக்கு எதிரான லக்னௌ டெஸ்டில் சதம் அடித்த பிறகு ஒரு சூப்பர் ஸ்டாராக மாறினார்.
நூர் ஜஹான் அந்த நேர்காணலில் பேசியபோது, “நான் நசாரை ஒரு நண்பராகவும் சகோதரராகவும் சந்திப்பேன் என்று நினைத்தேன், இதன் மூலம் எங்களது சந்திப்புகளைப் பற்றி ஷௌகத் அறிந்தால், அவர் சுதாரித்துக் கொண்டு தனது குறும்புத்தனங்களைக் கைவிடுவார் என்று கருதினேன்,” என்று கூறியிருந்தார்.
“திருமணத்திற்குப் பிறகும் நான் நசாரை சந்திப்பதாக ஷௌகத் ஏற்கெனவே சந்தேகித்தார், ஆனால் திருமணத்திற்குப் பிறகு நான் நசாரை சந்திப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டேன் என்பது அல்லாவுக்கு தெரியும்.”
“ஷௌகத் யாஸ்மினை விட்டுப் பிரியமாட்டார் என்று நான் உறுதியாக நம்பிய பின்னரே மீண்டும் நசாரை சந்தித்தேன்” என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு நூர் ஜஹான் மற்றும் நசார் முகமது இடையிலான சந்திப்புகளின் தொடர்ச்சி மீண்டும் ஆரம்பமானது. இப்போது இது தொடர்பாக ஷௌகத் உசேன் ரிஸ்வி கூறிய கதையைத் தெரிந்துகொள்வோம்.
புகழ்பெற்ற பத்திரிகையாளர் முனீர் அகமதுவுக்கு அளித்த பேட்டியில் ஷௌகத் உசேன் ரிஸ்வி இந்தக் கதையைக் கூறினார்.
ஷௌகத் உசேன் ரிஸ்வி கூறுகையில், “நூர் ஜஹான், நசார் இடையிலான விவகாரம் அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது, அது பற்றிய பேச்சு அதிகம் பரவிவிட்டதால் எனது டிரைவரும் மற்றவர்களும் இது குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தனர். எனது டிரைவர் அமீர் ஹசன் என்னிடம், ‘ஐயா, நிறைய அவதூறுகள் பரப்பப்படுகின்றன’ என்று கூறினார்,” என்றார்.
பட மூலாதாரம், Social Media
நசாரும் நூர்ஜஹானும் ஒன்றாக இருந்தபோது…
ஒரு நாள், அமீர் ஹசன், ஷௌகத் உசேன் ரிஸ்வியிடம், ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பு தான் நூர் ஜஹானை இஸ்லாமியா பூங்காவில் ஒரு காரில் இறக்கிவிட்டதாகக் கூறினார்.
ஷௌகத் உசேன் ரிஸ்வி கூறுகையில், “அங்கு ஒரு பாபா வசித்து வந்தார். அவருக்கு ஒரு மருந்தகம் இருந்தது. அவர்கள் இருவரும் அவரது வீட்டில்தான் சந்திப்பார்கள்” என்றார்.
“நான் எனது நண்பர்களை இரண்டு கார்களில் ஏற்றிக்கொண்டு உடனடியாக இஸ்லாமியா பூங்காவை நோக்கிச் சென்றேன். நாங்கள் பாபாவின் வீட்டைச் சுற்றி வளைத்தோம். நான் பாபாவிடம் சென்று நூர் ஜஹான் எங்கிருந்து வந்தார் என்று கேட்டேன்?”
“நூர் ஜஹான் எங்கே?” என பாபா கேட்டார்.
‘உங்களுக்கு நூர் ஜஹானை தெரியாதா? எனக்கு எல்லாம் தெரியும்’ என நான் அவரிடம் கோபமாகச் சொல்லிவிட்டு, பாபாவின் வீட்டிற்குச் செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினேன்.”
“அந்த முதியவரால் என்னை நிறுத்த முடியவில்லை. என்னிடம் அதிக வலிமை இருந்தது. அந்த முதியவர் கோபத்தில் கத்தத் தொடங்கினார்.”
“அதனால் நூர் ஜஹானும் நசாரும் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். அதற்குள் நான் மேலே சென்றுவிட்டேன்.”
“அங்கு, வராண்டாவில், நூர் ஜஹானும் நசாரும் ஒரு படுக்கையில் ஒன்றாகப் படுத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால், நூர் ஜஹானையும் நசாரையும் சேர்த்தே சுட்டுக் கொன்றிருப்பேன்.”
“நசார் பீதியில் எழுந்து உட்கார்ந்து 25 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார். கீழே விழுந்ததில் அவரது கை உடைந்தது.”
“நூர் ஜஹான் கீழே வந்து அழத் தொடங்கினார். அவர் அலறத் தொடங்கி, ‘இவர்கள் எனது புகுந்த வீட்டினர், இவர்கள் என்னைத் திட்டுகிறார்கள். இவர்கள் ஊர்சுற்றிகள், அயோக்கியர்கள். என் மூலம்தான் பணம் சம்பாதிக்கிறார்கள், இவர்களே பெண்களைத் தவறான வழிக்குத் திருப்புகிறார்கள். நான் நசாரை நேசிக்கிறேன்’ என்று கூறினார்.”
“நூர் ஜஹான் இரண்டு மணிநேரம் கத்திக்கொண்டிருந்தார். பின்னர் உள்ளூர் மக்கள் வந்தனர். அங்கு சுமார் 200 பேர் கூடியிருந்தனர்.”
“என்னை நன்றாகத் தெரிந்தவர்கள்கூட அங்கு வந்திருந்தனர்.”
“கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மியான் ரஹ்மானும் அங்கு வந்தார். அவர் நூர் ஜஹானை தன்னுடன் அழைத்துச் சென்றார்.”
“அவர்களுக்கு நசாரையும் தெரியும். நசார் அங்கு பாதி மயக்க நிலையில் கிடந்தார்.”
“அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். கை உடைந்த பிறகு அவர் பயனற்றவராகிவிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.
ஷௌகத் உசேன் ரிஸ்வியின் கூற்றுப்படி, ‘தனது கணவரைச் சரியான பாதைக்குக் கொண்டு வர இதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று நூர் ஜஹான் நம்பினார், ஆனால் “நான் கேட்கிறேன், எனது கணவர் ஹீராமண்டிக்கு (லாகூரில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் இடம்) சென்றால், நீங்களும் ஹீராமண்டிக்கு செல்வீர்களா? அவர் எனக்கு எல்லாமே செய்துவிட்டார்.”
“இப்போது அவர் ஒரு வாக்குமூலம் அளிப்பதாகக் கூறுகிறார். ஒருவேளை, நான் அவரை மக்களின் முன்னால் வெளிப்படுத்தினேன் என்று அவர் சொல்லக்கூடும்.” என்றார் உசேன் ரிஸ்வி.
பட மூலாதாரம், Pakistan Chronicle
நசார் முகமதுவின் பார்வையில் அந்தச் சம்பவம்
நசார் முகமது தனது வாழ்நாள் முழுவதும் நூர் ஜஹானுடனான தனது உறவைப் பற்றி மௌனம் காத்தார், ஆனால் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில், பத்திரிகையாளர் இப்னு யூனுஸுக்கு ஒரு நேர்காணல் அளித்தார்.
மேற்கூறிய சம்பவத்தின் சில விவரங்கள் அந்த நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்டன. அந்த நேர்காணல் துஃபைல் அக்தரின் ‘நூர் ஜஹான், ஃபித்ர் ஜஹான்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நசார் முகமது கூறுகையில், “எனது சகோதரர் பெரோஸ் நிசாமி மூலமாகவே நான் நூர் ஜஹானை சந்தித்தேன். அவர் ஒரு மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற இசை அமைப்பாளர், மேலும் நூர் ஜஹானுக்கு பலமுறை பாட்டுப் பயிற்சிகளை அளித்து வந்தார்,” என்றார்.
“நான் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் என்பது நூர் ஜஹானுக்கு தெரியும். நான் தேசிய கிரிக்கெட் அணியில் இருந்தேன், ஆனால் அவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை, மேலும் கிரிக்கெட்டினால் அவருக்கு என்மீது ஈர்ப்பு வரவில்லை.”
“நூர் ஜஹான் எனது ஆண்மைமிக்க மற்றும் வசீகரமான ஆளுமையால் ஈர்க்கப்படவில்லை, மாறாகப் பாடுவதில் எனக்கு இருந்த புரிதல், இசை அமைப்புகள் குறித்த அறிவு, எனது இனிமையான குரல் ஆகியவற்றாலேயே ஈர்க்கப்பட்டார்.”
“நான் ஒரு மிகச்சிறந்த பாடகன் என்பது மிகச் சிலருக்கே தெரியும், அதுதான் நூர் ஜஹான் என் மீது அன்பு கொண்டதற்கான முக்கியக் காரணம்” என்று நசார் முகமது தெரிவித்தார்.
“நூர் ஜஹான் என் அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் பாடுவார், நான் அதைக் கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றும் நசார் முகமது கூறினார்.
“நான் கேட்டது போல நூர் ஜஹான் பாடுவதை வேறு யாரும் கேட்டதில்லை. அவர் எனக்காகப் பாடினார்.”
“நூர் ஜஹான் அந்த நாட்களில் ஷௌகத் உசேன் ரிஸ்வியின் மனைவியாக இருந்தார், ஆனால் நான் அவரை ஷௌகத்தின் மனைவி என்பதைவிட ஒரு பொன்சிட்டுக்குருவி என்றே அழைப்பேன். ஷௌகத் உசேன், நூர் ஜஹானை நிறைய சுரண்டினார் மற்றும் அவரை மிகவும் துன்புறுத்தினார்.”
“உண்மையில், ஷௌகத் உசேன் ரிஸ்விக்கு இது தெரியாது. அந்த நேரத்தில், ஷௌகத் மற்றும் நூர் ஜஹான் பூஞ்ச் சாலையில் உள்ள இஸ்லாமியா பூங்காவில் வசித்து வந்தனர்.”
“நாங்கள் சிராக்தீன் கடையில் சந்திப்போம், நூர் ஜஹானின் பணிப்பெண் எங்களது ரகசிய தூதுவராக இருந்தார்.”
“தற்செயலாக, அந்தப் பணிப்பெண்ணுக்குப் பதிலாக ஒரு புதிய பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அப்போது, நூர் ஜஹான் என்னை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார்.”
“நாங்கள் ஓர் அறையில் பேசிக்கொண்டிருந்தோம். ஷௌகத் உசேன் ரிஸ்வி எப்போது அங்கு வந்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அந்தப் பணிப்பெண் நாங்கள் எந்த அறையில் இருந்தோம் என்பதை அவரிடம் கூறிவிட்டார்.”
பட மூலாதாரம், Hina Durrani
அந்தச் சம்பவத்தை விவரித்த நசார் முகமது கூறுகையில், “அவர் அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் ஓடினேன். எனக்கு முன்னால் ஒரு சுவர் இருந்தது.”
“நான் அந்தச் சுவரில் ஏறி மறுபுறம் குதித்தேன். துரதிர்ஷ்டவசமாக, நான் கீழே விழுந்தபோது எனது கை அடிபட்டு உடைந்து செயலற்றுப் போனது. என்னால் மீண்டும் ஒருபோதும் (கிரிக்கெட்) விளையாட முடியாமல் போனது. நூர் ஜஹான் மீதான காதலுக்காக எனது கையைத் தியாகம் செய்தேன், அதனுடன் எனது டெஸ்ட் (கிரிக்கெட்) வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.”
“ஷௌகத் உசேன் ரிஸ்வி அந்தச் சம்பவத்தையே நூர் ஜஹானை விவாகரத்து செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட காரணமாகப் பயன்படுத்திக் கொண்டார்.”
“உண்மையில், ஷௌகத் மற்றும் யாஸ்மினின் காதல் உச்சத்தில் இருந்தது, நூர் ஜஹானிடம் இருந்து விடுபட ஷௌகத் ஒரு காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தார்” என்றும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Hina Durrani
‘நாம் குழந்தைகளை சேர்ந்து வளர்ப்போம், நீ உன் மனைவியை விவாகரத்து செய்…’
விவாகரத்திற்குப் பிறகு, நசார் முகமதுவை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை நூர் ஜஹான் வெளிப்படுத்தினார், ஆனால் அதற்குள் நசார் முகமது, முபாஷிர் நசார் மற்றும் முதஸர் நசார் ஆகிய இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி இருந்தார்.
நூர் ஜஹான் நசார் முகமதுவிடம், “நாம் குழந்தைகளை வளர்ப்போம். நீ உன் மனைவியை விவாகரத்து செய்,” என்று கூறியிருந்தார்.
நசார் முகமது ஒரு நேர்காணலில் கூறுகையில், “முபாஷிர் மற்றும் முதஸர் வளர்ந்து, எங்கள் தாயை ஏன் விவாகரத்து செய்தீர்கள் என்று என்னிடம் கேட்டால், நான் என்ன பதில் சொல்வேன் என்று நூர் ஜஹானிடம் கேட்டேன்,” என்றார்.
“நான் எனக்கு அநீதி இழைத்துக் கொள்ளலாம், ஆனால் எனது அப்பாவி மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அநீதி இழைக்க மாட்டேன். என் மீதான ஏமாற்றத்தால் நூர் ஜஹான் அஜாஸை திருமணம் செய்து கொண்டார் “என்றும், “அவர் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அஜாஸை திருமணம் செய்து கொண்டார்.” என்றும் தெரிவித்தார்.

மேலும், “அவர் ஏமாற்றுபவர்களை ஒருபோதும் மன்னித்ததில்லை. அவர்களைப் பழிவாங்கினார், ஆனால் அவர் என்னை மிகவும் நேசித்ததால் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.”
“அவரது செல்வத்தின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதும், அவரது புகழ் எனக்குப் பொருட்டல்ல என்பதும் அவருக்குத் தெரியும்” எனவும் குறிப்பிட்டார்.
அப்போது நசார் முகமது எந்தளவுக்குப் புகழ்பெற்றிருந்தார் என்றால், அவரது கை உடைந்த செய்தி பிரிட்டனை எட்டியபோது, அங்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தது.
இரு அணிகளின் கேப்டன்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, நசார் முகமதுவின் டெஸ்ட் வாழ்க்கையின் இந்த சோகமான முடிவுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர், மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதற்காக ஆட்டத்தை நிறுத்தினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு