மதுரை: பாதுகாப்பான ரயில் பயணத்துக்காக, திண்டுக்கல் அருகே ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாமரைப்பாடி – வடமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்வே கேட்டுகள் செயல்படுகின்றன. இதுவரையிலும் ரயில்களுக்கான கைகாட்டி (சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கு சைகை/சிக்னல் கம்பம்) வழிகாட்டுதலின்றி செயல்பட்டன. அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி வழிகாட்டுதலில் பாதுகாப்பாக கேட்டுகள் மூடி திறக்கப்பட்டன.
ரயில் விபத்துகளை தவிர்க்க, பயண பாதுகாப்பை அதிகரிக்கவும் ஏப். 28 முதல் இந்த ரயில்வே கேட்கள் கைகாட்டி வழிகாட்டுதலுடன் ( இன்டர் லாக்) செயல்பட தொடங்கியுள்ளன. இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் கேட்டுகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கேட் அடைத்தால் தான் கைகாட்டியை இயக்கி பச்சை வர்ண சைகைக்கு கொண்டு வந்து ரயிலுக்கு வழி விட முடியும். கை காட்டியில் எப்போதும் சிகப்பு வர்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
கேட் அடைத்த பிறகு பச்சை வர்ணமும், கேட் திறந்த பிறகு சிவப்பு வர்ணமாகவும் மாற்றிக்கொள்ளும். மனித ஆற்றல் மூலம் சக்கரத்தை சுழற்றி கேட் பீம்களை ஏற்றி இறக்கி சாலை வாகனங்களுக்கு வழிவிடப்பட்டது. மின்சார ஆற்றல் மூலம் கேட் பீம்கள் திறந்து மூடும் வகையில் தற்போது மாற்றியதால் எளிதில் துரிதமாக கேட்டுகளை திறந்து மூடலாம். வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இக்கேட்டுகளில் புதிய தொழில்நுட்பம் அறிமுகத்திற்கு பிறகு முதல் ரயிலாக மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் கடந்து சென்றது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.