படக்குறிப்பு, ஸ்பாஞ்ச்களில் ஏராளமான துளைகளும், பள்ளங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நுண்ணுயிர்கள் தங்குவதற்கு உகந்தவையாக இருக்கின்றனகட்டுரை தகவல்
நாம் சமையல் செய்த பாத்திரங்களை சுத்தப்படுத்த ஸ்பாஞ்ச்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஸ்பாஞ்ச்கள் எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. இதனால் ஸ்பாஞ்சிற்கு பதிலாக பிரஷை தேர்ந்தெடுக்க வேண்டுமா?
பொதுவாக பாக்டீரியாக்களுக்கு எந்த ஒரு மோசமான சூழலிலும் வசிப்பது எப்படி என்பது தெரியும். எந்த வகையான மோசமான சூழலிலும் பல வகை பாக்டீரியாக்களுக்கு வசிக்கத் தெரியும். அவற்றில் சில பூமியின் மேலோட்டின் ஆழத்திலோ அல்லது ஆழிநீர் வெப்ப ஊற்றுகளிலோ அல்லது மிகவும் குளிரான பிரதேசங்களிலும் போன்ற எந்த ஒரு சூழலிலும் செழித்து வளர்கின்றன. ஆனால் இதுபோன்ற பாக்டீரியாக்கள் வசிக்கத்தக்க பிரதான இடமாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச்கள் இருக்கின்றன.
சாப்பிட்ட தட்டுகள், பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் இந்த ஸ்பாஞ்ச்கள் மொத்தமும் நுண்ணுயிர்களால் நிறைந்திருக்கின்றன. அவை பாக்டீரியாக்களுக்கு சொர்க்கமாக இருக்கின்றன. அவை ஈரப்பதத்துடன், இதமாக, நுண்ணுயிர்கள் உண்ண உணவுத் துகள்களுடன் நிறைந்து இருக்கின்றன.
ஸ்பாஞ்ச்களில் 362 வகையான நுண்ணுயிர்கள்
2017-ல் ஜெர்மனியின் ஃபர்ட்வான்கன் பல்கலைக்கழகத்தில் (Furtwangen University) நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கும் மார்கஸ் எகர்ட், சமையலறையில் பயன்படுத்திய ஸ்பாஞ்ச்களில் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் குறித்த ஆய்வை வெளியிட்டார். அந்த ஸ்பாஞ்ச்களில் 362 வகையான நுண்ணுயிர்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். ஒரு சதுர சென்டிமீட்டரில் 54 பில்லியன் பாக்டீரியாக்கள் சில இடங்களில் காணப்பட்டதாக தெரியவந்தது.
“இது பெரிய எண்ணிக்கை, இது மனித மலத்தின் மாதிரியில் காணக்கூடிய நுண்ணுயிர்களின் எண்ணிக்கைக்கு இணையானது,” என்கிறார் எகர்ட்.
ஸ்பாஞ்ச்களில் ஏராளமான துளைகளும், பள்ளங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நுண்ணுயிர்கள் தங்குவதற்கு உகந்தவையாக இருக்கின்றன.
டியூக் பல்கலைக் கழகத்தில் செயற்கை உயிரியல் வல்லுநரான லின்சாங் யூவும் அவரது குழுவினரும், 2022-ல் மேற்கொண்ட ஓர் ஆய்வுக்கு ஸ்பாஞ்சின் விரிவான சூழலின் மாதிரியை உருவாக்க கணினிகளை பயன்படுத்தினர். பல்வேறு அளவுகளில் பள்ளங்கள் இருக்கிற ஸ்பாஞ்ச்களில் அதிக அளவு நுண்ணுயிர்கள் வளர்ந்ததை அவர் கண்டறிந்தார்.
அதன் பின்னர் அவரது குழுவினர் அதே முறையை பின்பற்றி செல்லுலோஸ் ஸ்பாஞ்சில் பல்வேறு வகையான ஈ.கோலி பாக்டீரியாக்களை வளர்த்தனர்.
“சமையலறை ஸ்பாஞ்சில் பல அளவுகளில் துளைகள் இருப்பது பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியது என்று அவர்கள் கண்டறிந்தனர்,” என்கிறார் எகர்ட்.
“நுண்ணுயிர்களை பொருத்தவரை சில பாக்டீரியாக்கள் தனியாக வளர விரும்பும், சிலவற்றிற்கு மற்ற பாக்டீரியாவின் துணை தேவைப்படும். ஒரு ஸ்பாஞ்சிற்குள் பல விதமான அமைப்புகள் இருப்பதால் அனைத்து வகையான பாக்டீரியாக்களுக்கும் மகிழ்ச்சி.”
ஸ்பாஞ்ச்கள் பாக்டீரியாவுக்கு சிறந்த வாழ்விடமாக இருக்கின்றன. அதனால் அவற்றை பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம் செய்வது நமது ஆரோக்கியத்திற்கு அபாயகரமானது என்று பொருளல்ல. பாக்டீரியாக்கள் நமது தோலில், மண்ணில் நம்மை சுற்றியுள்ள காற்றில் என அனைத்து இடங்களிலும் உள்ளன.
அவை அனைத்தும் அபாயகரமானவையல்ல, சொல்லப்போனால் சில பாக்டீரியாக்கள் முக்கிய பணிகளை செய்கின்றன. ஆகவே முக்கிய கேள்வி, ஸ்பாஞ்ச்களில் இருக்கும் பாக்டீரியா பற்றிய கவலை அவசியமானதுதானா என்பதுதான்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்பாஞ்சை பிளீச்சில் ஊற வைப்பதைவிட அவற்றை டிஷ்வாஷரிலோ மைக்ரோவேவ் அவனிலோ போடுவது அதிக பலனளிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன
ஸ்பாஞ்சில் உள்ள பாக்டீரியாக்களால் என்ன அபாயம்?
எகர்ட் 2017-ல் நடத்திய ஆய்வில் அதிகமாக காணப்படும் பாக்டீரியாக்களின் டிஎன்ஏக்களை வகைப்படுத்தினார். ஒவ்வொரு பாக்டீரியாவின் இனத்தையும் கண்டறிவது சாத்தியமற்றதாக இருந்தாலும், பத்தில் ஐந்து பாக்டீரியாக்கள், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள மனிதர்களிடம் தொற்றை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாவுக்கு நெருங்கிய தொடர்புடையவையாக இருந்தன.
ஸ்பாஞ்ச்களை தூய்மைப்படுத்த மைக்ரோவேவ் அவனில் சூடாக்குவது, சூடான சோப் கலந்த நீரால் கழுவுவது போன்ற நடவடிக்கைகளும் உதவவில்லை. ஏனென்றால் அவை சில பாக்டீரியாக்களை கொன்றாலும், மற்ற அதிக எதிர்ப்பாற்றல் உள்ள பாக்டீரியாக்களை பாதிக்கவில்லை.
“எங்களது அனுமானம் என்னவென்றால் ஸ்பாஞ்ச்களை தூய்மைப்படுத்துவது ஒரு சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களை மட்டும் அதிக அளவில் வளர வைக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்கக்கூடும் என்பதுதான்” என்கிறார் எகர்ட்.
“நீங்கள் இதை ஓரிரு முறை செய்தால், தூய்மைப்படுத்துவதால் பாதிக்கப்படாத ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.”
எகர்ட் கண்டறிந்த பாக்டீரியாக்களில் எதுவும் உணவு நஞ்சாதலுடனோ, மோசமான நோயுடனோ தொடர்புபடுத்தப்படவில்லை என்பதை புரிந்துகொள்வது முக்கியம். உண்மையில் உணவால் மருத்துவமனையில் சேர்க்குமளவு ஏற்படும் நோய்களில் 90% வெறும் 5 நோய்க்கிருமிகளால் ஏற்படுகின்றன. அவற்றில் மூன்று பாக்டீரியா – எஸ்ஷெரிகியா கோலை, சல்மெனெல்லா மற்றும் கேம்பலோபேக்டர். இவற்றை ஸ்பாஞ்ச்களில் காண்பது அரிது.
“நோய் உருவாக்க சாத்தியமுள்ள பாக்டீரியாக்களை மட்டும் பார்த்தோம், எனவே இவை குறைவான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள், முதியோர் அல்லது குழந்தைகளுக்கு அபாயகரமானவையாக இருக்கலாம்,” என்கிறார் எகர்ட்.
“பொதுவாக நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவருக்கு, ஸ்பாஞ்சில் உள்ள பாக்டீரியாக்களால் அபாயம் இல்லை” என்கிறார்.
பிரஷ்களை பயன்படுத்தலாமா?
பட மூலாதாரம், Getty Images
2017-ல், அமெரிக்காவில் உள்ள பிரைரி வியூ ஏ&எம் பல்கலைக் கழகத்தில் உணவு பாதுகாப்பு பேராசிரியராக உள்ள ஜெனிஃபர் குயின்லான் மற்றும் அவரது சகாக்கள் 100 வீடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட ஸ்பாஞ்ச்களை சேகரித்தனர். அவற்றில் 1-2% ஸ்பாஞ்ச்களில் மட்டுமே மனிதர்களில் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக அவர் கண்டறிந்தார். அப்படி இருந்தவற்றிலும் மிகக் குறைந்த அளவிலேயே அந்த பாக்டீரியாக்கள் இருந்தன.
இந்த முடிவுகளுக்கு 2022-ல் நார்வேயின் உணவு ஆராய்ச்சி நிறுவனமான நோஃபிமாவைச் சேர்ந்த விஞ்ஞானி சோல்வெய் லாங்ஸ்ரட் நடத்திய ஆய்வு வலுசேர்த்தது. இந்த ஆய்வில், ஸ்பாஞ்ச்களில் உள்ள பாக்டீரியாக்களும், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாக்களும் ஒப்பீடு செய்யப்பட்டன.
இரண்டிலுமே தீங்கு விளைவிக்காத அசிணடோபாக்டர், கிரிஸோபாக்டீரியம், என்ஹைட்ரோபாக்டர், எண்டென்ரோபாக்டேரியாசியே, சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. ஆனால் மொத்தத்தில் பிரஷ்களில் ஒப்பீட்டளவில் குறைவான பாக்டீரியாக்களே இருந்தன.
“ஸ்பாஞ்சில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்கள் எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை. அவை துர்நாற்றம் மட்டுமே ஏற்படுத்தப் போகின்றன. அது காலப்போக்கில் விரும்பத்தகாதவையாக இருக்கப் போகின்றன,” என்கிறார் குன்லான்.
“அப்படி சொன்னாலும், சமைக்கப்படாத இறைச்சி அல்லது கோழி ரத்தத்தை சுத்தம் செய்ய நீங்கள் ஸ்பாஞ்சை பயன்படுத்தினால் அதிலிருந்து நோய்கிருமிகள் ஸ்பாஞ்சில் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கிருமிகள் சமையலறை ஸ்பாஞ்ச்களிலிருந்து தனிமைப்படுத்தப்படலாம்.”
எனவே உங்கள ஸ்பாஞ்சில் வளரும் பாக்டீரியா பொதுவாக தீங்கு விளைவிப்பவை அல்ல என்றாலும், சால்மொனெல்லா போன்ற அபாயகரமான பாக்டீரியாக்கள் அங்கு வந்தால், ஸ்பாஞ்சின் அமைப்பு அந்த நோய்க்கிருமி வளர்வதற்கு உகந்த சூழலை கொண்டுள்ளது.
இப்படி நடப்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. லேங்ஸ்ரட்டின் ஆய்வில், ஆய்வாளர்கள் சால்மொனெல்லாவை சமையலறை ஸ்பாஞ்சில் செலுத்திய போது அவை நன்கு வளர்ந்தன. ஆனால் பிரஷ்களில் செலுத்திய போது அந்த கிருமிகள் இறந்துவிட்டன.
பிரஷ்கள் ஒவ்வொரு பயன்பாட்டுக்குமிடையில் நன்கு காய்ந்து பாக்டீரியாக்களை கொன்றுவிடுவது இதற்கு காரணமாக இருக்கலாம். அதே நேரம் ஸ்பாஞ்ச்கள் தினமும் பயன்படுத்தப்பட்டால் அவை உட்புறம் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இதனால், நோய் உருவாக்கும் பாக்டீரியா பின்னர் ஸ்பாஞ்சிலிருந்து உங்கள் பாத்திரங்களுக்கு மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆரோக்கியம் என்ற கோணத்தில் பார்க்கும் போது ஸ்பாஞ்ச்கள் வாரத்திற்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும்
சமையலறை ஸ்பாஞ்ச்களை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?
நாம் எப்போதெல்லாம் நமது சமையலறை ஸ்பாஞ்ச்களை மாற்ற வேண்டும்? ஆரோக்கியம் என்ற கோணத்தில் பார்க்கும் போது ஸ்பாஞ்ச்கள் வாரத்திற்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும் என்றும், இருப்பினும் அவற்றின் வாழ்வை நீட்டிக்க நீங்கள் செய்யக்கூடியவை என சில இருப்பதாகவும் வாதிடுகிறார் குன்லான்.
“அவற்றை தூய்மைப்படுத்த இரண்டு எளிய வழிகள் உள்ளன. நாளின் முடிவில் அவற்றை நீங்கள் டிஷ்வாஷரில் போடலாம் அல்லது அவற்றில் ஆவி வருமளவு மைக்ரோவேவ் அவனில் வைக்கலாம். இது பெரும்பாலான நோய்க்கிருமிகளை கொன்றுவிடும்.”
உங்கள் ஸ்பாஞ்சை பிளீச்சில் ஊற வைப்பதைவிட அவற்றை டிஷ்வாஷரிலோ மைக்ரோவேவ் அவனிலோ போடுவது அதிக பலனளிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் எகர்ட்டின் ஆய்வு காட்டியபடி அதிக எதிப்புத்திறன் உள்ள பாக்டீரியாக்கள் வளர காரணமாக அமைந்து காலப்போக்கில் இந்த முறைகளில் பலன் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
சோப்பு மற்றும் கொதிக்கும் நீரில் ஸ்பாஞ்சை போடுவது பெரும்பாலான பாக்டீரியாவை கொன்றுவிடும். இருப்பினும் அவற்றில் சில, குறிப்பாக ஒட்டும் தன்மையுள்ள உயிர்மென்படலம் கொண்டவை பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நடைமுறை, சால்மொனெல்லா போன்ற நோய்க்கிருமிகளை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பாஞ்சை சிங்கிலேயே விட்டுவைக்காமல் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவற்றை காய விட வேண்டும். பயன்படுத்தியபிறகு தண்ணீரை பிழிவது மற்றும் உணவு துகள்களை அகற்றுவது ஆகியவையும் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும் சிலர் பாத்திரங்களை தூய்மைப்படுத்த முற்றிலும் வேறொரு உபகரணத்தை தேர்வு செய்யலாம்.
“நான் சமையலறை ஸ்பாஞ்ச்களையே பயன்படுத்த மாட்டேன். அது போன்ற ஒரு பொருளை சமையலறை சூழலில் பயன்படுத்துவது சரியென்று எனக்கு தோன்றவில்லை,” என்கிறார் எகர்ட்.
“ஒரு பிரஷில் அதைவிட குறைவான பாக்டீரியாக்களே உள்ளன என்பதுடன் அவை விரைவில் காய்ந்துவிடுகின்றன. அதை சுத்தப்படுத்துவதும் எளிது” என்கிறார்.