பட மூலாதாரம், Getty Images
இந்திய எழுத்தாளர்-வழக்கறிஞர்-ஆர்வலர் பானு முஷ்டாக் ‘ஹார்ட் லேம்ப்’ ( Heart Lamp) என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக புக்கர் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார்.
இந்த பரிசை வென்ற முதல் கன்னட நூல் இதுவாகும். இந்த கதைத் தொகுப்பை தீபா பாஷ்டி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
1990 முதல் 2023 வரையிலான முப்பது ஆண்டுகளில் முஷ்டாக் எழுதிய 12 சிறுகதைகளைக் கொண்ட ஹார்ட் லேம்ப், தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களின் கஷ்டங்களை அழுத்தமாகப் படம்பிடிக்கிறது.
கீதாஞ்சலி ஸ்ரீயின் டோம்ப் ஆஃப் சாண்ட் ( Tomb Of Sand) 2022 -ல் இதே பரிசை வென்ற நிலையில், பானு முஷ்டாக் இந்த விருதை தற்போது பெற்றுள்ளார் . அந்நூல், டெய்ஸி ராக்வெல்லால் இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது ஆகும்.
பானு முஷ்டாக்கின் படைப்புகள் புத்தக ஆர்வலர்களிடையே நன்கு அறியப்பட்டவை. ஆனால் புக்கர் பரிசு அவரது வாழ்க்கை மற்றும் இலக்கிய படைப்புகளில் ஒரு பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது., அவரது கதைகளில் மத பழமைவாதம் மற்றும் ஆழமான ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை அவரது வாழ்க்கை பிரதிபலிக்கிறது.
இந்த சுய விழிப்புணர்வுதான் பானு முஷ்டாக் மிகவும் நுணுக்கமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை வடிவமைக்க உதவியது என்று கூறலாம்.
“விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை, அதிகம் கவனம் பெறாதவற்றை தேர்வு செய்வது ஆகியவற்றின் மீதான கவனத்தை ஹார்ட் லேம்ப் வலியுறுத்துகிறது. அதுதான் பானு முஷ்டாக்கின் வலிமை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு விமர்சனம் புத்தகத்தைப் பற்றி கூறுகிறது.
பட மூலாதாரம், Penguin Random House
பானு முஷ்டாக் யார்?
பானு முஷ்டாக் கர்நாடகாவில் ஒரு முஸ்லிம் பகுதியில் ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார், அவரைச் சுற்றியுள்ள பெரும்பாலான பெண்களைப் போலவே, பள்ளியில் உருது மொழியில் குர்ஆனைப் படித்தார்.
அரசாங்க ஊழியரான அவரது தந்தை, தனது மகளுக்கு அது போதாது என்று கருதினார். எட்டு வயதில், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கன்னட மொழியில் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியில் சேர்த்தார்.
பானு முஷ்டாக் கன்னடத்தில் சரளமாக பேச கடுமையாக உழைத்தார், பின்னர் அதுவே தனது இலக்கிய வெளிப்பாட்டிற்கு அவர் தேர்ந்தெடுத்த மொழியாக பிற்காலத்தில் மாறியது.
பள்ளியில் படிக்கும் போதே எழுதத் தொடங்கிய அவர், தனது தோழிகள் திருமணம் செய்து குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருந்த போது கல்லூரிக்குச் செல்வதைத் தேர்ந்தெடுத்தார்.
நெருக்கடியான ஆரம்ப கால திருமண வாழ்க்கை
பானு முஷ்டாக்கின் எழுத்துகள் வெளியாவதற்கு பல ஆண்டுகள் ஆயின. அது அவரது வாழ்க்கையில் குறிப்பாக சவாலான கட்டத்தில் நடந்தது.
அவரது சிறுகதை , 26 வயதில் அவர் தேர்ந்தெடுத்த ஒருவரை திருமணம் செய்த ஒரு வருடம் கழித்து உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்தது. அவரது ஆரம்ப திருமண ஆண்டுகள் மோதல் மற்றும் சச்சரவுகளால் நிரம்பியிருந்தன. பல நேர்காணல்களில் அவர் அதைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
வோக் இதழுக்கு அளித்த பேட்டியில், “நான் எப்போதும் எழுத விரும்பினேன், ஆனால் எழுத எதுவும் இல்லை, ஏனென்றால் திடீரென்று, ஒரு காதல் திருமணத்திற்குப் பிறகு, புர்கா அணிந்து வீட்டு வேலைக்கு என்னை அர்ப்பணிக்குமாறு கூறப்பட்டது. நான் 29 வயதில் மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒரு தாயானேன்.” என்று கூறியிருந்தார்.
தி வீக் இதழுக்கு அளித்த மற்றொரு நேர்காணலில் , அவர் தனது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்ததைப் பற்றி பேசினார்.
அப்போது, அதிர்ச்சியூட்டும் ஒரு செயல் அவரை விடுவித்தது.
“ஒருமுறை, விரக்தியில், என்னை நானே தீ வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் என் மீது பெட்ரோலை ஊற்றினேன். அதிர்ஷ்டவசமாக, அவர் [கணவர்] அதை சரியான நேரத்தில் உணர்ந்து, என்னைக் கட்டிப்பிடித்து, தீப்பெட்டியை எடுத்துச் சென்றார். அவர் என்னிடம் கெஞ்சினார், எங்கள் குழந்தையை என் காலடியில் வைத்து, ‘எங்களை கைவிடாதே’ என்று கூறினார்,” என்று அவர் பத்திரிகைக்கு கூறினார்.
பானு முஷ்டாக் எதைப் பற்றி எழுதுகிறார்?
ஹார்ட் லேம்ப் கதைத் தொகுப்பில், அவரது பெண் கதாபாத்திரங்கள் இந்த எதிர்ப்பையும் மீள்தன்மையையும் பிரதிபலிக்கின்றன.
“மைய நீரோட்ட இந்திய இலக்கியத்தில், முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் உருவகங்களாக குறைக்கப்படுகிறார்கள் – மௌனமாக பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறொருவரின் தார்மீக வாதத்தில் உருவகங்களாக உள்ளனர். இரண்டையும் முஷ்டாக் மறுக்கிறார். அவரது கதாபாத்திரங்கள் தாங்கிக் கொள்கின்றனர், பேச்சுவார்த்தை நடத்துகின்றனர், அவ்வப்போது எதிர்த்து நிற்கின்றனர்- தலைப்புச் செய்திகளாக அல்ல, ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழிகளில்” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளிவந்த புத்தகத்தின் மதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஷ்டாக் ஒரு முக்கிய உள்ளூர் செய்தித்தாளில் நிருபராக பணியாற்றினார். இலக்கியம் மற்றும் செயல்பாட்டின் மூலம் சமூக, பொருளாதார அநீதிகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்திய பந்தயா இயக்கத்துடன் தொடர்புடையவர்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகைத் துறையை விட்டு வெளியேறினார். அதன் பின், அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
கூரிய எழுத்துகளும் முஷ்டாக் சந்தித்த எதிர்ப்புகளும்
பானு முஷ்டாக் ஏராளமான படைப்புகளை வெளியிட்டுள்ளார்- ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு மற்றும் ஒரு நாவல் அதில் அடங்கும்.
ஆனால் அவரது கூர்மையான எழுத்து அவரை வெறுப்பின் இலக்காகவும் மாற்றியுள்ளது.
தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், 2000 -ம் ஆண்டில், மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கான பெண்களின் உரிமையை ஆதரித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்காக அவருக்கு தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல்கள் வந்தன.
அவருக்கு எதிராக ஒரு ஃபத்வா (இஸ்லாமிய சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் உத்தரவு) பிறப்பிக்கப்பட்டது. ஒரு நபர் அவரை கத்தியால் தாக்க முயன்றார். அவரது கணவர் அந்த நபரை தடுத்து நிறுத்தினார்.
ஆனால் இந்த சம்பவங்கள் முஷ்டாக்கை நிலைகுலையச் செய்யவில்லை, அவர் தொடர்ந்து கடுமையான நேர்மையுடன் எழுதினார்.
“பேரினவாத மத விளக்கங்களை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். இப்பொழுதும் என் எழுத்தின் மையமாக இவை இருக்கின்றன. சமூகம் நிறைய மாறிவிட்டது, ஆனால் முக்கிய பிரச்னைகள் அப்படியே உள்ளன. சூழல் மாறினாலும், பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் அடிப்படை போராட்டங்கள் தொடரவே செய்கின்றன” என்று அவர் தி வீக் இதழிடம் கூறினார்.
முஷ்டாக்கின் எழுத்துகள் கர்நாடக சாகித்ய அகாடமி விருது மற்றும் தான சிந்தாமணி அத்திமபே விருது உள்ளிட்ட பல மதிப்பு மிக்க உள்ளூர் மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
1990 மற்றும் 2012 க்கு இடையில் வெளியிடப்பட்ட முஷ்டாக் எழுதிய ஐந்து சிறுகதைத் தொகுப்புகளின் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலத் தொகுப்பான ‘ஹசீனா மற்றும் பிற கதைகள்’ (Haseena and Other Stories) 2024 ஆம் ஆண்டில் பென் (PEN) மொழிபெயர்ப்பு பரிசை வென்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு