சென்னை: பாமக போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பொது நலனைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுள்ளன. இவை அனைத்துக்கும் தமிழக காவல்துறை மவுன சாட்சியாக இருந்து வேடிக்கைப் பார்த்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு வேகமாக சீர்குலைந்து வருகிறது, பெண்களால் அச்சமின்றி நடமாட முடியவில்லை, அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த திமுகவின் ஆதரவு பெற்ற மனித மிருகம் ஒன்று அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, குற்ற்வாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபட்டது.
அதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 2-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி கோரி 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பமும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சென்னை பெருநகர காவல்துறை சட்ட விதி 41-இன் படி ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தால் மட்டும் தான் அனுமதி வழங்க முடியும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் 500-க்கும் கூடுதலான காவலர்களைக் குவித்து போராட்டக்களத்திற்கு எவரும் வராமல் தடுத்தது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை மகிழுந்தை விட்டுக் கூட இறங்க விடாமல் கைது செய்து அழைத்துச் சென்றது. பாமக போராட்டத்தின் போது கோர முகத்தைக் காட்டிய காவல்துறை, இப்போது அடிமை முகத்தைக் காட்டியிருக்கிறது.
ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தான் திமுக அறிவித்தது. அதன் பின்னர் நேற்று முன்னிரவில் தான் போராட்டத்திற்கு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்றுக் கொண்டு அடுத்த சில நிமிடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுகவினரின் போராட்டங்களின் போது பல இடங்களில் விதிமீறல்கள் நடந்தாலும் கூட அதற்காக எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திமுகவினரின் போராட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எவரேனும் நீதிமன்றத்திற்கு செல்வார்களோ, நீதிமன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரமாக காலை 10.00 மணிக்கு பதிலாக காலை 9.00 மணிக்கே சென்னை சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் திமுகவின் போராட்டங்களுக்கும் உண்டு. ஆனால், பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள். அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்.
காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. பாமகவுக்கு ஒரு நீதியையும், திமுகவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது.
திமுக அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.