பட மூலாதாரம், X/PMK
“அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டு…இதெல்லாம் நடக்காது. திருத்திக் கொள்” – பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் பேசிய வார்த்தைகள் இவை.
‘தான் பலம் வாய்ந்தவன் எனக் கூறிக் கொண்டு மகனுடன் ராமதாஸ் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது அவசியமற்றது’ எனக் கூறுகின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
‘மாநாட்டின் வெற்றியை பேசாமல் வெவ்வேறு விஷயங்களைத் தேடுவது தேவையற்றது’ என பா.ம.க நிர்வாகிகள் கூறுகின்றனர். மாநாடு சர்ச்சையானது ஏன்?
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மே 11 அன்று நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுவதாக, மேடையில் ராமதாஸ் குறிப்பிட்டார்.
மாநாட்டில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’, ‘வன்னியர் உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்’, ‘பட்டியல் பிரிவு மக்களுக்கு மேலும் 2 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்’ என்பன உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“இதுவரை நடக்காத போராட்டம்” – ராமதாஸ்
பட மூலாதாரம், DR. S. RAMADOSS FB
மேடையில் பேசிய ராமதாஸ், ” வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி போராட்டம் அறிவிக்கப்படும். அது இதுவரை நடந்திராத போராட்டமாக இருக்கும். அந்தப் போராட்டத்துக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாமும் ஒருநாள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என் பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப் போவதில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. ஆசை இருந்திருந்தால் ஆளுநராக இருந்திருப்பேன்; பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன்; தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், மக்களுக்காக வாழ்கிறேன்” என்றார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம், வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கொடுங்கள் எனக் கேட்டு தான் வாதாடியிருப்பதாகக் கூறிய ராமதாஸ், “நமக்குத் தேவை உங்களின் ஒரு ஓட்டு தான். இவ்வளவு நாள் என் பேச்சைக் கேட்டீர்கள். இடையில் மறந்துவிட்டீர்கள்” எனப் பேசினார்.
தொடர்ந்து, “முன்பு யானை சின்னத்தில் தனியாக நின்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதைப் பார்த்து நமக்கு கோபம் வரவில்லையா?” எனக் கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
ராமதாஸ் எச்சரிக்கை
பட மூலாதாரம், AnbumaniRamadoss/x
கூட்டணி தொடர்பாக பேசிய ராமதாஸ், “சிலர் எங்கே கூட்டணி என்று கேட்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணியை முடிவு செய்வேன். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சீட் வேண்டும், எம்.எல்.ஏ வேண்டும் என்றால் உழைக்கலாம்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “அந்தக் கூட்டணி…இந்தக் கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது. உன்னை திருத்திக் கொள். இந்தக் கட்சியில் நீ பொறுப்பில் இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன்” எனக் கூறினார். இதைக் கேட்டு அன்புமணி சிரித்தபடியே அமர்ந்திருந்தார்.
“இன்னும் 2 மாதம் கடந்தால் எனக்கு 87 வயது. வயதாகிவிட்டது எனக் கூறி ஏமாற்றப் பார்க்காதீர்கள். இந்தக் கட்சி ஒரு தனி மனிதனின் சொத்து அல்ல” எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.
மாநாடு தொடர்பாக திங்கள்கிழமை (மே 12) அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி, தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அறிக்கையில் தன்னை பா.ம.க-வின் தலைவர் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவரை செயல் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் மாநாடு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராமதாஸின் இந்த அறிவிப்பு, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.
“அவசியமற்ற மோதல்”
“மாநாட்டின் மேடையில் 87 வயதிலும் தான் வலிமையுடன் இருப்பதாக ராமதாஸ் பேசினார். அவ்வாறு கூறிவிட்டு மகனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது அவசியமற்ற ஒன்று” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இருவரும் சமசரம் ஆகவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவித பிரச்னையும் இல்லாமல் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக அன்புமணிக்கு அவர் பாராட்டு தெரிவித்திருக்கலாம்” என்கிறார்.
“ராமதாஸால் வரும் காலங்களில் நன்றாக பணியாற்ற முடியாது. அரசியல் வேண்டும் என முடிவெடுத்து அன்புமணி செயல்படுகிறார். இதில் மற்றவர்கள் யாரும் பலியாக வாய்ப்பில்லை. குடும்பத்துக்குள் கூட ஒற்றுமையாக இல்லை என்று தான் மக்கள் நினைப்பார்கள்” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“கட்சிக்குள் கூட்டணி, கூட்டணிக்குள் கூட்டணி எனப் பேசுகிறார் என்றால் யாரை ராமதாஸ் மிரட்டுகிறார் என்பது தெரியும்” எனக் கூறுகிறார், குபேந்திரன்.
அன்புமணிக்கு அதிகாரம் உள்ளதா?
பட மூலாதாரம், Twitter/Anbumani Ramadoss
கடந்த 10 ஆண்டுகளாக அன்புமணியிடம் அனைத்து அதிகாரங்களையும் ராமதாஸ் கொடுத்ததாக கூறும் குபேந்திரன், “அவரால் நியமிக்கப்பட்ட பா.ம.க நிர்வாகிகள் அன்புமணியின் பேச்சைத் தான் கேட்டார்கள். பெரும்பாலான தொண்டர்கள் அன்புமணியின் பக்கம் நிற்கிறார்கள்” என்கிறார்.
இந்தக் கருத்தில் முரண்பட்டுப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “தமிழ்நாடு முழுவதும் பா.ம.க-வுக்கு செல்வாக்கு இல்லை. வன்னியர் நிறைந்திருக்கும் தொகுதிகளில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடியும். குறிப்பிட்ட சாதிக்குத் தலைவராக ராமதாஸ் வந்தார். அவரது மகன் என்பதைத் தாண்டி அன்புமணிக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை” எனக் கூறுகிறார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதலமைச்சராக்குவோம் எனக் கூறி ஏராளமாக செலவு செய்தும் அந்தப் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.
“கூட்டணிக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு சமரசங்களை பாமக செய்து வந்துள்ளதாகக் கூறும் ஷ்யாம், “வன்னியர் சாதி மக்களே அவரது பேச்சைக் கேட்டு முழுதாக ஓட்டுப் போடுவதில்லை. அதற்கு அவர்களின் நிலைப்பாடுகள் தான் காரணம்” எனக் கூறுகிறார்.
‘நடப்பது மூன்றாம் தலைமுறை மோதல்’
பா.ம.க-வுக்குள் மூன்றாம் தலைமுறை வாரிசுகளுக்கு இடையே போட்டி நடப்பதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
“மகனுடன் ராமதாஸ் சண்டையிட்டு எந்தப் பலனும் இல்லை. தற்போது அன்புமணியின் மகள்கள் மற்றும் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பார்க்கிறேன். இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைக் கணிப்பது கடினம்” எனக் கூறுகிறார் அவர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமகவின் இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் பரசுராமன் பெயரை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
“கூட்டணி இருப்பதால் தான் பா.ம.க ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவும் இல்லாவிட்டால் அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை. வரும் காலங்களில் அனைத்து சாதிகளையும் அரவணைத்துப் போனால் தான் அக்கட்சிக்கு எதிர்காலம் இருக்கும்” என்கிறார் குபேந்திரன்.
“பட்டியல் பிரிவு மக்களுக்கு மேலும் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு பா.ம.க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?” என அவரிடம் கேட்டபோது, “இதனால் நடுநிலையோடு தங்கள் கட்சியை பார்ப்பார்கள் என ராமதாஸ் நினைத்தால் தவறு. பா.ம.க-வை பட்டியல் பிரிவு மக்கள் ஏற்க மாட்டார்கள்” எனக் கூறினார்.
“ஊடகங்களின் கற்பனை” – பாமக பொருளாளர் திலகபாமா
பட மூலாதாரம், பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா
மாநாடு தொடர்பான சர்ச்சை குறித்து பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதற்கு காரணமான அன்புமணியை மருத்துவர் ராமதாஸ் புகழ்ந்தால், மகனைப் பாராட்டியதாக கூறுவார்கள். அவர் மகனாகவே தெரிவதால் தான் பல விஷயங்களை கூறாமல் இருந்துள்ளார். மகனை தனியாக பாராட்டவில்லை என்றாலும் மாநாட்டின் மூலம் என்ன நிகழ வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்துள்ளது” எனக் கூறுகிறார்.
இருவருக்கும் இடையே மோதல் நீடிப்பதாக வெளியாகும் தகவல்கள், ஊடகங்களின் கற்பனையாக இருப்பதாகக் கூறுகிறார் திலகபாமா. “மருத்துவரின் நீட்சியாக இருக்கும் அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தவே தென்மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்தனர்” என்கிறார்.
மாநாட்டில் எதாவது நடக்கும் என நினைத்தார்கள். தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் தொண்டர்களை வைத்துக் கொள்ளும் ஆற்றல் கட்சித் தலைவருக்கு (அன்புமணி) இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் திலகபாமா குறிப்பிட்டார்.
மூன்றாம் தலைமுறை வாரிசுகளுக்கு இடையே மோதல் நடப்பதாகக் கூறுவது குறித்துக் கேட்டபோது, “மாநாட்டின் கூட்டத்துக்குள் வேறு விஷயங்களை தேடுவது அவசியமற்றது. சில நாட்களுக்கு முன்பு நடந்த விவகாரத்தைப் பேச வேண்டியதில்லை” என்கிறார்.
“கட்சியின் நிறுவனத் தலைவரே முடிவுகளை எடுக்கட்டும். அவர் வழியில் செய்து முடிப்பேன் என்று அன்புமணி கூறுகிறார். அவர்கள் கூறுவதைக் கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் என்ன பிரச்னை?” எனக் கேள்வி எழுப்புகிறார் திலகபாமா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு