பாமகவில் இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்ட நிலையில், பிரச்னை பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாக ராதாஸ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பனையூரில் தனது அலுவலகத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாமகவில் என்ன நடக்கிறது? அன்புமணி ஆலோசனை நடத்துவது பற்றி அக்கட்சியினர் கூறுவது என்ன?
ராமதாஸ் – அன்புமணி பகிரங்க மோதல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டானூரில் டிசம்பர் 28 ஆம் தேதி அன்று பாட்டாளி மக்கள் கட்சியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், “கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக, அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்” என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, “கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆன ஒருவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா?” எனக் கேள்வி எழுப்பியதோடு கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதனை ஏற்காத மருத்துவர் ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் கட்சியில் இருக்க முடியாது” எனக் கூறினார்.
“இது தான் உருவாக்கிய கட்சி” என்றும் ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, “மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்” என அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறேன். அங்கு தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்” எனக் கூறிவிட்டு தனது செல்போன் எண்ணையும் மேடையில் அறிவித்தார்.
“முகுந்தன் நியமனத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு விலகலாம்” எனவும் ராமதாஸ் கூறினார். இதையடுத்து அந்த இடத்தில் அன்புமணி வெளியேறினார்.
ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனை நியமிப்பதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தது, அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அன்புமணி சொன்னது என்ன?
கடந்த ஞாயிறுக்கிழமை அன்று (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடனான ஆலோசனைக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், கட்சியின் வளர்ச்சி பற்றியும் சட்டமன்றத் தேர்தலைப் பற்றியும் சித்திரை முழுநிலவு மாநாட்டை நடத்துவது குறித்தும் மருத்துவர் ராமதாசுடன் குழுவாக விவாதித்ததாக கூறினார்.
பொதுக்குழுவில் நடந்த மோதல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “எங்கள் கட்சி ஜனநாயகக் கட்சி. பொதுக்குழுவில் காரசாரமாக விவாதம் நடப்பது இயல்புதான்” எனக் கூறினார்.
முகுந்தன் பரசுராமன் நியமனம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அன்புமணி, “உள்கட்சி விவகாரத்தைப் பற்றி நீங்கள் பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
“பேசி சரிசெய்துவிட்டோம்” – ராமதாஸ்
ஆனால், தனக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாக வியாழக்கிழமை (ஜனவரி 2) அன்று செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, “எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. பொதுக்குழுவுக்கு எந்தக் கட்சியும் ஊடகங்களை அனுமதிப்பதில்லை. அது எங்கள் கட்சி விவகாரம். அதைப் பேசி சரிசெய்துவிட்டோம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், “இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தனை பொதுக்குழுவில் அறிவித்தோம். அவருக்கு நியமன கடிதத்தையும் கொடுத்துவிட்டேன்” என்றார்.
“அன்புமணி உடனான மோதல், கட்சியின் வளர்ச்சியை பாதிக்குமா?” என செய்தியாளர்கள் கேட்ட போது, “கட்சி வளர்ச்சியை பாதிக்காது. என் தவறுகளை விமர்சியுங்கள் என்றுதான் கட்சி நிர்வாகிகளிடம் கூறுவேன். அதைச் சொன்னால்தான் திருத்திக் கொள்ள முடியும்” என்றார்.
“அரசியல் கட்சியின் தலைவரோ, நிறுவனரோ எந்தப் பொறுப்பில் இருந்தாலும் ஊடகங்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது” எனவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
அன்புமணி ஆலோசனை
ராமதாஸ் இவ்வாறு கூறினாலும், கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளை அன்புமணி சந்தித்துப் பேசி வருகிறார்.
வெள்ளிக்கிழமை அன்று (ஜனவரி 3) கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமகவை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டம் நடத்தி வருவதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
விழுப்புரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பனையூரில் அலுவலகம் திறந்துள்ளதாக அன்புமணி கூறியுள்ள நிலையில், அங்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் தொடர்ந்து கூட்டம் நடத்தி வருவது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
“குடும்பத்துக்குள் மட்டுமே அதிகாரம்”
பாமகவுக்குள் புதிய அதிகார மையமாக அன்புமணி உருவெடுத்து வருவதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன், ராமதாஸின் பேரன். அவர் அன்புமணியின் அக்கா மகனாக இருக்கிறார். அப்படியானால் பாமகவில் யார் எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பத்தின்கீழ் மட்டுமே இயங்குவார்கள்” என்றார்.
இந்த விவகாரத்தை ராமதாஸும் அன்புமணியும் தங்களுக்குள் சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வார்கள் எனக் கூறும் ஆர்.மணி, “இதை கட்சி விவகாரம் எனக் கூறுவதைவிட குடும்ப விவகாரம், பொதுவெளியில் வந்துவிட்டதாகவே பார்க்க முடிகிறது” எனக் கூறுகிறார்.
“இந்த மோதலால் வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை. மருத்துவர் ராமதாஸுக்கு வயதாகும் போது அன்புமணியின் கை ஓங்கும். இந்த மோதலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் குடும்பத்துக்குள் மட்டுமே அதிகாரம் இருக்கும்” என்கிறார் ஆர்.மணி.
பாமக எம்.எல்.ஏ சொல்வது என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள் அதனை மறுத்துள்ளார். ” கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன” என்று அவர் கூறுகிறார்.
“பாமகவில் நிறுவனத் தலைவரும் (ராமதாஸ்) கட்சியின் தலைவரும் (அன்புமணி) கூறுவதுதான் முடிவு. இருவரையும் ஒரே முகமாகவே பார்க்கிறோம். இதில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை” எனக் கூறுகிறார் அருள்.
முகுந்தன் பரசுராமன் நியமனம் குறித்துப் பேசிய அருள், “எங்கள் கட்சியில் உச்சக்கட்ட அதிகாரம் என்பது மருத்துவரிடம் (ராமதாஸ்) உள்ளது. அவருக்கு அடுத்து தலைவருக்கு (அன்புமணி) அதிகாரம் இருக்கிறது” என்று மட்டும் பதில் அளித்தார்.
அன்புமணி பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, “மருத்துவர் (ராமதாஸ்) சொல்லித் தான் கூட்டங்களை நடத்துகிறார்” என்று அவர் பதிலளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.