விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
பாமக தலைவர் அன்புமணி, எம்எல்ஏ-க்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம், மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. ஏறத்தாழ 180 நிர்வாகிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் சுமார் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர். இக்கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தால், காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, 2 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டியதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவதே இக்கூட்டத்தின் நோக்கம். படுத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று எனக்குத் தெரிந்த வித்தையை நிர்வாகிகளுக்கு தெரிவிப்பதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மாநாட்டுக்காக கடும் வெயிலில் பணியாற்றியதால் நிர்வாகிகள் சிலருக்கு களைப்பு ஏற்பட்டிருக்கலாம். தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்காதவர்களை, பதவியில் இருந்து நீக்கத் தேவையில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைப்போம். சிங்கத்துக்கு காலில் பழுது ஏற்பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்பார்கள். சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லையே, அப்படியென்றால் சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறும்போது, “அன்புமணிக்கு வேறு பணி இருந்ததால், அவர் பங்கேற்கவில்லை. தேர்தல் பணிகள் குறித்த தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது” என்றார்.