• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு – விரைவில் திறக்க ஏற்பாடு | Work completed on new railway bridge at Pamban set to open soon

Byadmin

Oct 7, 2024


ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை விரைவில் திறப்பதற்கு ரயில்வே அமைச்சகம் சார்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், பழைய ரயில் பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து ரூ.535 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக 01.03.2019 அன்று காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய ரயில் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலம் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும். பழைய ரயில் பாலத்திலுள்ள தூக்குப் பாலம் இரும்பிலானது ஆகும். 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது. அதே சமயம், புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 100 டன்கள் ஆகும். மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக்கூடியது. இந்த லிஃப்ட் 3 நிமிடத்திற்குள் பாலத்தை திறந்து இரண்டு நிமிடத்திற்குள் பாலத்தை மூடிக் கூடியது.

இந்த செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத்து தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து கடந்த மாதம் சோதனை ரயில் ஓட்டமும், கடந்த வாரம் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, ஞாயிற்றுக்கிழமை பாம்பனில் உள்ள புதிய ரயில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்தை துவங்குவதற்காக பாலம் பணிகள் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், புதிய ரயில் பாலம் திறப்பு விழா தேதியும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவலும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.



By admin