மதுரை: ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்ற நிலையில், நெல்லை பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரனுக்கு திடீர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது பாஜகவில் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பாஜக தலைவராக தற்போது இருக்கும் அண்ணாமலை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சி வாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேஸ்வரத்தில் நடைபெற்ற புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா அமைந்திருந்தது.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் மேடையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், முருகன், தமிழக அமைச்சர்கள், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நவாஸ்கனி, தர்மர் ஆகியோர் இருந்தனர். திடீரென சட்டப்பேரவைத் பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மேடை ஏற்றப்பட்டார்.
மத்திய அரசு சார்பில் இரு மத்திய அமைச்சர்கள், தமிழக அரசு சார்பில் ஆளுநர் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் ராஜ கண்ணப்பன், மாவட்டத்தை சேர்ந்த எம்பிக்கள் என்ற முறையில் நவாஸ்கனி, தர்மர் ஆகியோர் மேடை ஏற்றப்பட்ட நிலையில், திடீரென நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டது விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
எப்போதும் பிரதமர் விழாவில் உடனிருக்கும் அண்ணாமலை, பிரதமரை மண்டபம் முகாமில் வரவேற்றுவிட்டு, பிரதமருடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார். பின்னர் மதுரைக்கு திரும்பிவிட்டார். பாஜக எம்எல்ஏக்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பார்த்தால் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து பாஜகவில் பயணிக்கும் காந்தியை தான் மேடை ஏற்றியிருக்க வேண்டும். அப்படியிருக்கும் போது நெல்லையை தொகுதி எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டது அவருக்கு சிறப்பு முக்கியத்துவமாக அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதிலிருந்து பாஜக அடுத்த தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் முந்துவது உறுதியாகியுள்ளது. மேலும், ‘மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை, இதுவரை தலைவராக இருந்து செய்த பணிகளை இனிமேல் தொண்டனாக இருந்து தொடர்வேன் என அண்ணாமலையே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான துரைசாமி உள்ளிட்டோர், அண்ணாமலையே மீண்டும் தலைவராவார் என தெரிவித்தனர். எப்படியிருந்தாலும் பிரதமர் விழாவில் அண்ணாமலை பங்கேற்காதது, நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டதை வைத்து பார்க்கும் போது, தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.