பட மூலாதாரம், SAMSON KIRUBAKARAN
நகரமயமாக்கலால் பாம்புகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கோவை நகருக்குள் 35 மாதங்களில் பாம்பு மீட்பாளர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில மாதங்களில், குறிப்பிட்ட நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் அதிகளவில் படையெடுப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிக ஆபத்தானவையாக கருதப்படும் ‘பிக் 4’ நச்சுப் பாம்புகள் கோவை நகருக்குள் அதிகளவில் இருப்பதையும் அந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வரும் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுகுறித்த ஆய்வுகள் தொடர வேண்டுமென்று வனஉயிரின உயிரியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழக வனத்துறை இதற்காக ‘நாகம்’ என்ற பிரத்தியேக செயலி உருவாக்கியுள்ள நிலையில், இதற்காக மத்திய அரசின் சார்பிலும் பிரத்யேக செயலி உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள்
தேசிய சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பாம்புக்கடி உயிரிழப்பில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன.
கோயம்புத்துார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் (CMCH) மாதத்திற்கு சராசரியாக 78 நோயாளிகள் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்கே,
- 2022-இல் 976 பாம்புக்கடி சம்பவங்களும் 40 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன
- 2023-இல் 971 பாம்புக்கடி சம்பவங்களும் 40 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன
- 2024-இல் அக்டோபர் வரையில் 2,591 பாம்புக்கடி சம்பவங்களும் 108 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
பட மூலாதாரம், SAMSON KIRUBAKARAN
ஆனால் 2025-ஆம் ஆண்டில் பாம்புக்கடிக்கு 970 பேர் சிகிச்சைக்கு வந்ததில் 21 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளை விட மரண விகிதம் குறைந்திருப்பதாகவும் பிபிசி தமிழிடம் மருத்துவமனை டீன் அலுவலகம் தெரிவித்தது.
பாம்பு கடித்து, மருத்துவமனைக்கு தாமதமாக வரும் நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT–Wildlife and Nature Conservation Trust ) அமைப்பு, வனத்துறையுடன் இணைந்து பாம்புகள் குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொண்டு வருகிறது.
‘பாம்புக்கடி மரணமில்லாத கோவை’ என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, கோவையிலுள்ள பாம்பு மீட்பாளர்களை ஒருங்கிணைத்து ஒரு களஆய்வை நடத்தியுள்ளது.
கடந்த 2022 –2024 வரை 35 மாதங்களில் பாம்புகள் மீட்கப்பட்ட விவரங்களைத் தொகுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சாதிக்அலி, அபினேஷ், சிராஜூதீன், விஜயகுமார் ராஜகோபால், ரிஷி, முகம்மது ஷாஜி, மொய்னுதீன் மற்றும் சாம்சன் ஆகிய வனஉயிரின உயிரியலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இந்த ஆய்வை அறிக்கையாகத் தொகுத்துள்ளனர்.
பட மூலாதாரம், Abinesh
‘பாம்புகளின் மீட்பை வைத்து அவற்றின் வாழ்விடங்களை வரைதல்’ (Hissing for rescue: Mapping the human-snake niche in Coimbatore through a snake rescue analytical approach) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆய்வை Basic and Applied Herpetology இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் பாம்புகள் மீட்கப்பட்ட விவரம், தேதி, நேரம், இடம் (GPS), பாம்பு இருந்த இடத்தின் வகை (refugium) நாளின் குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை போன்றவற்றுடன் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் விளக்கிய வன உயிர் மற்றம் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சிராஜூதீன், ”பாம்புகளால் மக்கள் இறக்கக்கூடாது; அதேபோன்று பாம்புகளை மக்களும் கொல்லக்கூடாது. அதனால் பாம்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, யாரை எந்த எண்ணில் அழைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ” என்றார்.
”எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நேரங்களில், எந்தெந்த பாம்புகளை எந்தெந்த இடங்களில் அதிகளவில் மீட்டோம் என்ற தகவல்களை துல்லியமாக ஒருங்கிணைத்து காட்டுயிர் உயிரியலாளர்களிடம் (Wildlife Biologist) கொடுத்தோம். அவர்கள் அதை வைத்து ஜிபிஎஸ் விபரங்களைப் பார்த்து ஒரு வரைபடம் (Heat Mapping) தயாரித்து இந்த ஆய்வைத் தொகுத்துள்ளனர்.” என்றும் விளக்கினார் சிராஜ்தீன்.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 35 மாதங்களில், கோவையில் 17 இனங்களைச் சேர்ந்த 2,318 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 980 நஞ்சுள்ளவை, 1338 நஞ்சற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவை நகரில் வேகமாக வளர்ந்து வரும் வடக்கு மற்றும் மேற்கு மண்டலப் பகுதிகளில்தான், அதிகளவிலான பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் காரணமென்கிறது ஆய்வு.
பட மூலாதாரம், Abinesh
கோவை ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள்
- கோவையில் சராசரியாக நாளொன்றுக்கு 4.12 பாம்பு மீட்புகள் நடக்கின்றன.
- மார்ச் முதல் ஜூன் வரையிலான காலங்களில்தான் பாம்புகள் குடியிருப்புகளுக்கு அதிகமாகப் படையெடுத்துள்ளன. அடுத்ததாக மழைக்காலத்தில் அதிகமாகவும், குளிர்காலத்தில் மிகக்குறைவாகவும் வீடுகளுக்குள் பாம்புகள் வந்துள்ளன.
- கோடையில் 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்த காலத்தில்தான் அதிகளவிலான பாம்புகள் பிடிபட்டுள்ளன. இதற்கு அதிகமான வெப்பத்திலும், மிகக்குறைவான வெப்பநிலையிலும் பாம்புகள் நடமாட்டம் மிகமிகக் குறைவாகவே இருந்துள்ளது.
- நஞ்சற்ற பாம்பான (Ptyas mucosa– Indian Rat Snake) சாரைப்பாம்பு தான் அதிகபட்சமாக 856 என்ற எண்ணிக்கையில் வீடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
- அதையடுத்து பிக் 4 என்றழைக்கப்படும் இந்தியாவில் அதிக ஆபத்தான 4 பாம்புகளில் ஒன்றான நாகப்பாம்பு அல்லது இந்திய நல்ல பாம்பு (Naja naja– Indian Spectacled Cobra) 678 இடங்களில் மீட்கப்பட்டுள்ளது.
- பிக் 4 பாம்புகளில் மற்றொன்றான கண்ணாடி விரியன் (Daboia russelii– Russells Viper) 251 இடங்களிலும், நஞ்சற்ற பாம்பான வெள்ளிக்கோல் வரையன் பாம்பு (Lycodon aulicus– Common Wolf Snake) 239 இடங்களிலும் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய மலைப்பாம்பு (Indian rock python), கொம்பேறி மூக்கன் (Common bronzeback tree snake), ஓலைப்பாம்பு (Streaked kukri), மோதிர வளையன் (Montane trinket), மலபார் பச்சைப் பாம்பு (Malabar vine snake) ஆகிய பாம்புகளும் கோவை நகர குடியிருப்புப் பகுதிகளில் பரவலாக மீட்கப்பட்டுள்ளன.
- நஞ்சுள்ள 278 பாம்புகள் மதிய நேரத்தில்தான் வீடுகளிலிருந்து மீட்கப்பட்டன. அடுத்ததாக மாலை நேரத்தில் 269 பாம்புகளும், இரவில் 238 பாம்புகளும், காலை நேரத்தில் 195 பாம்புகளும் மீட்கப்பட்டன.
- நஞ்சற்ற பாம்புகள் 482 மதிய நேரத்திலும், காலையில் 359 பாம்புகளும், மாலையில் 295 பாம்புகளும், இரவில் 202 பாம்புகளும் மீட்கப்பட்டதாக ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.
- குளிர் காலத்தில் நஞ்சில்லா பாம்புகள்தான் அதிகளவில் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. நஞ்சுள்ள பாம்புகள் பெரும்பாலும் திறந்தவெளிகளில்தான் காணப்பட்டன.
- குளிர்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் மிகக் குறைந்துள்ளது. ஆனால் கண்ணாடி விரியன் மட்டும் 94 என்ற எண்ணிக்கையில் அதிகமாக மீட்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Abinesh
“வாழ்விடங்கள் அழிந்ததால் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள்”
இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த வன உயிரின உயிரியலாளர் அபினேஷ், ”பாம்பு குளிர் இரத்தப்பிராணி என்பதால், அதன் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிப்பதற்காக இடங்களை (Thermoregulation) மாற்றிக் கொண்டேயிருக்கும். உணவு இல்லாவிடினும் பாம்புகள் தாக்குப் பிடிக்கும். ஆனால் அதற்குரிய தட்பவெப்பநிலையில்தான் (optimal) அவற்றால் வாழமுடியும். உடல் வெப்பம் திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், குளிரான இடங்களுக்குச் சென்று பாம்புகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும்.’ என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ”குடியிருப்புகள் அதிகரித்துள்ள பகுதிகளில் இவற்றின் வாழ்விடங்கள் குறிப்பாக நீர்நிலைகள் இல்லாததால் இவை உடலுக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தேடி வீடுகளுக்குள் வருகின்றன. அதனால் எதிர்காலத்தில் பாம்புக்கடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போதே கோவை நகருக்குள் பிக் 4 பாம்புகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.” என்றார்.
தற்போது நகர்ப்புறங்களில் தொடர்ச்சியாக கான்கிரீட் கட்டடங்கள் இருப்பதால் (URBAN HEAT ISLAND) அந்த வெப்பம் வெளியே போக வாய்ப்பு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டும் அபினேஷ், பாம்புகள் இரைக்காக நகர்ந்து செல்லும்போது, உடல் வெப்பமாகும் என்பதால் உடல்சூட்டைக் குறைப்பதற்காகவே வீடுகளுக்குள் இருளான, வெப்பமில்லாத மூலைகள் போன்ற இடங்களை தேடிச்செல்கின்றன என்கிறார்.
கோவையில் நீர்நிலைகளும் அவற்றை ஒட்டிய புதர்களும் அதிகளவில் காணாமல் போயிருப்பதும் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் ஆய்வில் பங்கேற்ற வனஉயிரின உயிரியலாளரான மொய்னுதீன்.
நகரமயமாக்கலில் நீர்நிலைகள், தனியார் வனங்கள், புதர்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன் வனப்பகுதி துண்டாடப்பட்டிருப்பதும் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் அவர்.

நகர்ப்புறங்களில் பாம்புகளின் வாழ்விடங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் மொய்னுதீன். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால், கோவையில் இருக்கும் மிதமான தட்பவெப்ப நிலையும் குளிர் இரத்தப்பிராணியான பாம்புகள் அதிகம் வசிப்பதற்கு ஒரு காரணமென்பது வனஉயிரின உயிரியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒருமித்துக் கூறும் கருத்தாகவுள்ளது.
கட்டு வரையன் பாம்பு இரவில் மட்டும் வீடுகளுக்குள் புகுவதையும், நாகமும், கண்ணாடி விரியனும் பகல், இரவு ஆகிய இரு வேளையும் வருவதையும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. முள் காடுகளில் மட்டுமே காணப்படும் குட்டி வகை பாம்பான சுருட்டை விரியன், பொதுவாக மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அதிகமாக வராது என்றாலும், இந்த ஆய்வுகளில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகிலும் இந்த பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கோடை காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் அதிகம் வருவதையும், குளிர்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் குறைந்து விடுவதையும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் பிக் 4 பாம்புகளில் ஒன்றான கண்ணாடி விரியன் மட்டும் குளிர்காலத்திலும் வீடுகளில் அதிகளவில் பிடிபட்டுள்ளது.
பட மூலாதாரம், WNCT
‘பாம்புகளையும், மக்களையும் காக்க புதிய செயலி’
வாழ்விடங்கள் அழிந்து வருவதுடன், காலநிலை மாற்றமும் பாம்புகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு ஒரு காரணமென்று வனஉயிரின உயிரியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு காலத்தில் சமவெளியிலுள்ள பாம்புகளே இல்லாத இடமாக இருந்த உதகையில் சமீபகாலமாக அங்கும் இந்த பாம்புகளைப் பார்க்க முடிவதற்கு காலநிலை மாற்றமே காரணமென்கின்றனர்.
”காலநிலை மாற்றம் (climate change) பாம்பு உள்ளிட்ட வனஉயிரினங்களை இடம் பெயரச் செய்யும். உதாரணமாக 1000 மீட்டர் உயரத்தில் முன்பு 25 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை, இந்த ஆண்டில் அதே நாளில் 27 டிகிரியாகிவிட்டது. அதனால் 25 டிகிரி வெப்பநிலையில் வாழும் பாம்புகள், அந்த வெப்பநிலை உள்ள 1500 மீட்டர் உயரமுள்ள இடத்துக்கு இடம் பெயரும். இப்படியே வெப்பநிலை உயரும்போது மலையுச்சியில் மட்டுமே வாழும் பாம்பு முதலில் அழிந்துவிடும். இதைத்தான் ஆய்வாளர்கள் Up-slope shifting என்கிறார்கள். இந்தியாவில் இப்போதுதான் இது சார்ந்த ஆய்வுகள் துவங்கியுள்ளன.” என்கிறார் அபினேஷ்.
நஞ்சுள்ள பாம்புகளை சிலர் அச்சத்தில் அடித்துக் கொல்வதாகக் கூறும் அபினேஷ், ”இப்படி பாம்புகளைக் கொல்வதால்தான் எலிகள் தொல்லை அதிகரிக்கிறது. எலிகளால் மனிதர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் பலவித நோய்கள் பரவும். விவசாயத்திற்கு அவை பாதிப்பை உண்டாக்கும். உலகில் பாம்புகளுக்கு மாற்று உயிரினமே கிடையாது.” என்கிறார்.
பட மூலாதாரம், Ramesh
நீர்நிலைகள், ஈரநிலங்கள், அடர்வனம் (மியாவாக்கி) போன்றவற்றை அழிக்காமல் இருந்தாலே, பாம்புகள் குடியிருப்புகளுக்குள் படையெடுப்பதைக் குறைக்க முடியுமென்கிறார் வனஉயிரின ஆய்வாளர் மொய்னுதீன். அத்துடன் குடியிருப்புகளைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதையும் இவர்கள் அனைவருமே சுட்டிக்காட்டுகின்றனர்.
கோவையில் பாம்புக்கடி உயிரிழப்புகளை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, தமிழக வனத்துறையின் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகக் களஇயக்குநருமான வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. அதுபற்றி விளக்கிய அவர், ”மாநிலம் முழுவதும் உள்ள பாம்பு மீட்பாளர்களுக்கு இங்குதான் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்கள் அனைவரையும் வனத்துறையுடன் ஒருங்கிணைத்து ஏராளமான பாம்புகளை மீட்டு வனத்துக்குள் விடுவித்துள்ளோம்.” என்றார்.
கோவையில் பாம்பு, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, குரங்கு என எந்த வகை வனஉயிரினம், குடியிருப்புப் பகுதிக்குள் வந்தாலும் அவற்றை மீட்பதற்கு 1800 4254 5456 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் தமிழக வனத்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சமீபகாலமாக பாம்புகளை மீட்பதற்கான அழைப்புகள் அதிகளவில் வருவதாகக் கூறுகிறார் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ்.
மத்திய வனத்துறை சார்பில், மனித–வன உயிரின மோதலை கையாள்வதற்கான பயிற்சி வழங்கும் சீர்மிகு மையம், கோவை சலீம்அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டில் பிரதமர் மோதி அறிவித்திருந்தார். அந்த மையம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், அதில் பாம்புகளைப் பாதுகாக்கவும் கையாளவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் இந்த மையத்தின் இயக்குநர் ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
”இதற்கென பிரத்தியேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு, அதில் பாம்பு மீட்பாளர்கள், பாம்புக்கடி சிகிச்சை தரும் மருத்துவமனைகள் மற்றும் வனத்துறையினரை பொதுமக்களுடன் இணைக்கவும், தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்படும். இது கால்டாக்சி செயலி போன்று செயல்படும் என்பதால், வீடுகளுக்குள் பாம்பு வந்தால் இந்த செயலியில் தொடர்பு கொண்டால் பாம்பு மீட்பு, பாம்புக்கடிக்கு சிகிச்சை என அனைத்தும் சில நிமிடங்களிலேயே நடந்துவிடும். இதனால் இரு தரப்பையும் காப்பாற்ற இயலும்.” என்றார் ரமேஷ்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு