பட மூலாதாரம், Getty Images/BBC
‘இந்தச் செடியை வைத்திருந்தால், உங்கள் வீட்டிற்கு அருகில் பாம்புகள் வராது’, ‘இது உங்கள் வயலில் இருந்து பாம்புகளை விரட்டும் செடி’ என்பன போன்ற தலைப்புகள் மற்றும் படங்களுடன் வரும் பல பதிவுகளை சமூக ஊடகங்களில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.
இதேபோல, சில செடிகளை வைத்தால் பாம்பு வராது என்ற பேச்சுகளை அன்றாட வாழ்விலும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
அதாவது, வெள்ளை நரிமிரட்டி அல்லது கிலுகிலுப்பைச் செடி, கருப்பு நரிமிரட்டி, நாகபாசி, காசுமரம் போன்ற தாவரங்கள் இருந்தால் பாம்புகள் வருவதில்லை என்ற கருத்துகளை மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
மறுபுறம், தாழை, மனோரஞ்சிதம் போன்ற தாவரங்கள் காணப்படும் இடங்களுக்கு அருகில் பாம்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது.
உண்மையில், பாம்புகளின் நடமாட்டத்திற்கும் செடிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? வெள்ளை நரிமிரட்டி, நாகபாசி போன்ற செடிகள் இருந்தால் பாம்புகள் வராதா? மனோரஞ்சிதம் போன்ற தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கக் கூடியவையா?
இதுகுறித்து விரிவாகப் புரிந்துகொள்ள விலங்கியல் மற்றும் தாவரவியல் நிபுணர்களைத் தொடர்பு கொண்டோம்.
பாம்பு வருவதை தடுக்கும் செடிகள் உள்ளதா?
சில தாவரங்கள் பாம்புகளை விரட்டும் சக்தி உடையவை என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஆந்திரா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் தாவர வகைப்பாட்டியல் குறித்து ஆராய்ந்து வரும் முனைவர் ஜே. பிரகாஷ் ராவ் பிபிசியிடம் கூறினார்.
” ஆராய்ச்சிக்காக கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு நாங்கள் சென்றபோது அங்குள்ள சில தாவரங்களைப் பார்த்தோம். அங்குள்ள மக்கள், அவை பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு தருவதாக நம்புகிறார்கள். அதே நம்பிக்கையின் அடிப்படையில் சமவெளிப் பகுதிகளிலும் மக்கள் அந்தச் செடிகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கிறார்கள். இத்தகைய சில தாவரங்கள் இணையத்திலும் ‘பாம்புகளை விரட்டும் செடிகள்’ என்ற பெயரில் விற்கப்படுகின்றன.
ஆனால், இந்தத் தாவரங்கள் பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு தருவதாகவோ பாம்புகளை விலக்கி வைப்பதாகவோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கோணத்தில் பெரிய ஆராய்ச்சிகளும் செய்யப்படவில்லை,” என்கிறார் பிரகாஷ் ராவ்.
சில தாவரங்களின் தனித்துவமான பண்புகளால் அவற்றை நெருங்க பாம்புகள் அஞ்சுவதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய கருத்துகள் “அறிவியல் அடிப்படையற்ற மக்களின் நம்பிக்கையாக மட்டுமே கருதப்பட வேண்டும்” என்று பிரகாஷ் ராவ் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

பாம்பு விரட்டிகள் என விளம்பரம் செய்யப்படும் தாவரங்கள்
நரிமிரட்டிச் செடி
அறிவியல் பெயர்: குரோடலேரியா வெருகோசா (Crotalaria verrucosa)
இது ஒரு காட்டுச் செடி. பெரும்பாலான மக்கள் இந்தச் செடி பாம்புகள் வருவதைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக நம்புகிறார்கள்.
இதிலேயே மற்றொரு வகை கருப்பு நரிமிரட்டி. இந்தச் செடியும் பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக நம்பப்படுகிறது.
சமீபகாலமாக, வெள்ளை நரிமிரட்டி செடியைப் பற்றி சமூக ஊடகங்களில் பல காணொளிகள் காணப்படுகின்றன.
வெள்ளை மற்றும் கருப்பு நரிமிரட்டிகளிடம் இருந்து பாம்புகள் விலகி இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கும்பக்கோடாரி வகையைச் சேர்ந்த ரெட்ஷாங்க்ஸ் தாவரம்
அறிவியல் பெயர்: பெர்சிகேரியா மாகுலோசா (Persicaria maculosa)
இந்தச் செடியின் இலையில் அடர் பச்சை கோடுகள் ஆங்கில ‘வி’ வடிவத்தில் காணப்படும். அந்த வடிவத்தைப் பார்த்து பாம்புகள் விலகிச் செல்லும் என்று நம்பப்படுகிறது.
இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுவதால், சில நர்சரிகள் இந்தச் செடியை “பாம்பு விரட்டிச் செடி” என்ற பெயரில் விற்பனை செய்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
பாம்புக் கற்றாழை
அறிவியல் பெயர்: டிரகேனா டிரைஃபேசியாட்டா (Dracaena trifasciata)
இந்தச் செடி உலகம் முழுவதும் பிரபலமாக ஸ்னேக் பிளான்ட் (Snake Plant) என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் நீளமாக வளர்ந்து கத்தி போலக் கூர்மையாக இருக்கும்.
இதை நோக்கிப் பாம்புகள் வந்தால், அவற்றின் உடல்கள் வெட்டப்படும் என்றும் அதனால்தான் இந்தச் செடிகள் இருக்கும் இடத்திற்கு பாம்புகள் வருவதில்லை என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை.
அறிவியல் பெயர்: பிட்டோஸ்போரம் டேசிகாலன் (Pittosporum dasycaulon)
இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் சில பழங்குடியின மக்களால் வளர்க்கப்படும் ஒரு கடுமையான நெடியுள்ள செடி. இதை வெட்டும் போது வெளிப்படும் கடுமையான வாசனை சில சிறிய காட்டு விலங்குகளையும் பூச்சிகளையும் விரட்டிவிடும் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இந்தச் செடிகள் இருக்கும் இடங்களுக்கு பாம்புகள் வருவதைத் தாங்கள் பார்த்ததில்லை என்பது அவர்களின் கூற்றாக உள்ளது. இந்த வாசனை பாம்புகள் மீது ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.
“ஆனால், இப்படியாக பாம்புகளை விரட்டக் கூடியவை எனப் பட்டியலிடப்படும் செடிகள் எதுவும் உண்மையில் அதைச் செய்வதாக அறிவியல் பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. அதாவது, ஒரு செடி இருப்பதால் ‘பாம்புகள் வராது’ என்ற எண்ணம் ஒரு கட்டுக்கதை, ஆதாரமற்ற நம்பிக்கை” என்று முனைவர் ஜே. பிரகாஷ் ராவ் கூறுகிறார்.

பாம்புகள் செடிகளுக்கு அஞ்சும் பண்பு கொண்டவையா என்று ஆந்திர பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் சி. மஞ்சுலதாவிடம் பிபிசி கேட்டது.
“பாம்புகளுக்குப் பார்வை அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால், வாசனை மூலம் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன. சில செடிகளில் உள்ள கசப்பான வாசனையை வெளியிடும் ஆல்கலாய்டுகள், காரமான வேதிமங்கள் மற்றும் ஆரஞ்சு, எலுமிச்சை தோல்களில் இருந்து வரும் வாசனைகள் பாம்புகளுக்கு ‘எரிச்சலை ஏற்படுத்துவதாக’ கருதப்படுகிறது.
பாம்புகளுடைய வாயின் பின்புறத்தில் யாகோப்சன் உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு ஒரு சென்சார் போலச் செயல்பட்டு வாசனைகளைக் கண்டறிய அவற்றுக்கு உதவுகின்றன,” என்று அவர் விளக்கினார்.
அதாவது, பாம்புகள் தங்கள் நாக்கை வெளியே நீட்டி பின்னர் உள்ளே இழுப்பது, வாசனையை நுகர்வதற்காக அல்ல, வாசனையில் உள்ள ரசாயனங்களைக் கண்டறிவதற்கே என்கிறார் அவர்.
“ஒரு செடி வலுவான, கசப்பு, புளிப்பு அல்லது காரமான வாசனையை வெளியிட்டால், பாம்புகள் அங்கே செல்ல விரும்பாமல் இருக்கலாம்.”
ஆனால், இது பாம்புகள் மட்டுமின்றி பூச்சிகளுக்கும் பொருந்தும் என்று பேராசிரியர் மஞ்சுலதா குறிப்பிட்டார்.

இந்தத் தாவரங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவையா?
வெள்ளை நரிவிரட்டி, நாகபாசி போன்ற சில செடிகளில் இருந்து வெளிப்படும் கடுமையான வாசனைகள் பாம்புகளை விலக்கி வைக்கும் என்றால், அந்தச் செடிகள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த விலங்கியல் மற்றும் தாவரவியல் வல்லுநர்கள், “அவற்றின் கடுமையான வாசனையை அதிகமாக சுவாசித்தால், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே, இந்தச் செடிகளை வளர்ப்பவர்கள் அவற்றை வீட்டிற்குள் அல்லது சிறு குழந்தைகள் இருக்கும் இடங்களில் வைக்கக்கூடாது,” என்று கூறினர்.
பட மூலாதாரம், Getty Images
பாம்புகள் எங்கிருந்து வருகின்றன?
“தாழை, மனோரஞ்சிதம் ஆகிய செடிகள் இருக்கும் இடங்களுக்கு பாம்புகள் வரும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அவை அவற்றில் பூக்கும் பூக்களுக்காக அங்கு வருவதில்லை. அந்த இடங்கள் அவை சிறிது காலம் தங்குவதற்கு ஏற்றவை. அதனால்தான் பாம்புகள் அங்கு வருகின்றன. இந்தக் குறிப்பிட்ட செடிகளுக்கு மட்டுமல்ல, இத்தகைய சூழல்கள் நிலவும் அனைத்து இடங்களுக்கும் பாம்புகள் வர வாய்ப்புள்ளது,” என்று பேராசிரியர் சி. மஞ்சுலதா விளக்குகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாழை, மனோரஞ்சிதம் உள்ள இடங்களில் அடர்ந்த பகுதிகள், நல்ல நிழல், ஈரப்பதம் மிகுந்த மண் போன்ற சூழல் நிலவும். அதோடு இந்தச் செடிகளின் அடர்த்தியால் இயற்கையாகவே இருள் அடர்ந்த இடங்கள் உருவாகின்றன. இப்படிப்பட்ட சூழல் பாம்புகள் ஒளிந்துகொள்ள ஏதுவானதாக இருக்கும்” என்றும் கூறினார்.
“உண்மையில், பாம்புகள் தாவரங்களின் வாசனையைவிட அவற்றுக்கான உணவு அதிகமுள்ள இடங்களுக்கே அதிகம் வருகின்றன.” என்று பேராசிரியர் மஞ்சுலதா தெரிவித்தார்.

பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?
வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைவதற்குப் பல காரணங்கள் இருப்பதாக பேராசிரியர் மஞ்சுலதா கூறினார்.
இதுகுறித்து விளக்கிய அவர், “பாம்புகள் பொதுவாக ‘உணவு அதிகமுள்ள இடத்திற்கு’ அல்லது ‘உணவு கிடைக்க வாய்ப்பிருக்கும் இடத்திற்கு’ அருகில் வரும். உதாரணமாக, எலிகள், சிட்டுக்குருவி கூடு, நீர்க் கசிவு, குப்பைக் குவியல்கள், விறகுக் குவியல்கள் போன்றவை இருந்தால் பாம்புகள் வர வாய்ப்பு அதிகம்.
பாம்புகளின் முக்கிய உணவு எலிகளும் பல்லிகளும் என்பதால் அவை இருக்கும் இடங்களைத் தேடி வரும். மேலும், ஈரமான இடங்கள் பாம்புகளுக்கு மிகவும் வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றன,” என்று விளக்கினார்.

அதே போல, “கொய்யா, மாமரம், பாதாம் மரம், பனை மரங்கள் இருக்கும் இடங்களில் பாம்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் பாம்புகள் இந்த மரங்களின் பழங்களுக்காக வருவதில்லை. கீழே விழுந்த பழங்களைச் சாப்பிட எலிகள் வருகின்றன. அந்த எலிகளைத் தேடி பாம்புகள் வருகின்றன” என்றார் பேராசிரியர் மஞ்சுலதா.
“குப்பை அதிகமாக இருக்கக்கூடிய, சுகாதாரமற்ற இடங்களில் எலிகளும் பூச்சிகளும் அதிகம் இருக்கும். அவற்றைத் தொடர்ந்து பாம்புகள் அங்கு நுழைய வாய்ப்பு உள்ளது. வீடும் சுற்றுப்புறமும் சுத்தமாக இல்லாவிட்டால், நீங்கள் எந்தச் செடியை நட்டு வைத்தாலும் பாம்புகள் வருவதைத் தடுக்க முடியாது” எனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் மஞ்சுலதா.
பட மூலாதாரம், Getty Images
தாவரத்தின் வாசனையைவிட சுற்றுப்புறச் சூழலே பாம்புகளை ஈர்ப்பதிலும் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆகையால், வீட்டைச் சூழ்ந்துள்ள பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதே பாம்புகள் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பாம்புகளை நேரடியாக ஈர்க்கும் குறிப்பிட்ட தாவரம் என்று எதுவும் இல்லை, அதேபோல் பாம்புகள் ஒரு குறிப்பிட்ட தாவரத்திற்கு அருகில் வராது என்பதற்கும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
“இன்னும் தெளிவாகக் கூறுவதெனில், பாம்புகளுக்கும் செடிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என்று முனைவர் ஜே. பிரகாஷ் ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு