• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

பாரதியார் பல்கலை.,க்கு நிலம் கொடுத்து 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்குக் காத்திருக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

Byadmin

Aug 12, 2025


பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு விவசாய நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு கோரி போராடும் குடும்பங்கள்
படக்குறிப்பு, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு விவசாய நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு கோரி போராடும் குடும்பங்கள்

“அந்த குடும்பத்தில் 4 பேர் இருந்தனர். அவர்கள் அப்பா காலத்தில் 5 ஏக்கரை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குக் கொடுத்தனர். ஒரு ஆளுக்கு 1.33 ஏக்கருக்கான இழப்பீடுதான் வரும். அது கிடைக்காமலே 3 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மட்டும் இருக்கிறார். அவருக்கும் வருமானம் ஏதுமின்றி மருதமலையில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது அதற்கும் முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். அவருடைய காலத்தில் இழப்பீடு கிடைக்குமா என்பது தெரியவில்லை!”

நவாவூர் பிரிவைச் சேர்ந்த மணி, பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது. இவரும் அதே பல்கலைக்கழகத்துக்கு விவசாய நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு கோரி போராடுபவர்களில் ஒருவர்.

“எங்க மாமனார் காலத்தில் 9 ஏக்கர் நிலம் கொடுத்தாங்க. அவர் இறந்து, என்னோட வீட்டுக்காரரும் இறந்து, என் மகனும் கொரோனாவில் இறந்துவிட்டார். சொல்ல முடியாத துயரத்தில் இருக்கோம். ஆனால் இன்னும் எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. நான் கண் மூடுவதற்குள் இந்த இழப்பீடு கிடைக்குமென்ற நம்பிக்கையும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது.” கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த 68 வயது லட்சுமி, விரக்தியுடன் வெளியிட்ட வார்த்தைகள் இவை.

லட்சுமி (68)
படக்குறிப்பு, லட்சுமி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு, நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுதான். கூடுதல் இழப்பீடு கோரிய தங்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளின்படி இழப்பீடு வழங்காமல், மேல் முறையீடுக்கு உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருப்பதே இந்த நிலைக்குக் காரணமென்று நில உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

By admin