கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காளிராஜ் ஓய்வு பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இது மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் உயர்கல்வி சார்ந்த கவலையை எழுப்பியுள்ளது. துணைவேந்தர் பொறுப்பு நிரப்பப்படாதது என்ன? இதனால், மாணவர்களின் உயர்கல்வியில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
கோவையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 134 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க புள்ளிவிவரங்களின்படி இங்கு மொத்தம் 41 துறைகளில் 240 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கின்றனர்.
2 ஆண்டுகளாக நிரப்பப்படாத துணைவேந்தர் பொறுப்பு
இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காளிராஜ் ஓய்வு பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதியிலிருந்து இப்போது வரையிலும் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, துணைவேந்தர் பொறுப்பை, துணைவேந்தர் குழு கவனித்து வருகிறது, இதன் ஒருங்கிணைப்பாளராக (Convenor) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். பல்கலைக்கழக நியமனமாக பேராசிரியர் லவ்லினா லிட்டில் பிளவர், ஆளுநரின் நியமனமாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் செயலாளர் வாசுகி, தமிழ்நாடு அரசின் நியமனமாக தமிழ்நாடு சுயநிதிக் கல்லுாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித்லால் மோகன் என மூன்று பேர் இந்த குழுவில் உள்ளனர்.
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் இருக்கும் நிலையில், ஆளுநர் தான் தாமதம் செய்கிறார் என்று ஒருபுறம் குற்றம்சாட்டப்படுகிறது. மறுபுறம், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், முடிவுகளை சீக்கிரம் எடுக்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.
கல்வி தரம் குறைந்ததா?
தேசிய தர வரிசை மையத்தின் (NIRF-National Institutional Ranking Framework) 2024-ம் ஆண்டு பட்டியலில், இந்தியாவிலுள்ள 100 முதன்மை கல்வி நிறுவனங்களில், பாரதியார் பல்கலைக்கழகம் 44வது இடத்தில் உள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவும், இந்த பல்கலைக்கழகத்துக்கு A++ என்ற அங்கீகாரத்தை அளித்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து புள்ளிகள் சரிந்துள்ளன என்று பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.
இதற்குக் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததுதான் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்(BHUTA) வசந்த், “குழு உறுப்பினர்கள் கோவையிலும், ஒருங்கிணைப்பாளர் சென்னையிலும் உள்ளனர். இதனால் சிறிய நிர்வாக முடிவுகளை எடுப்பதில் கூட தாமதம் ஏற்படுகிறது. தமிழக அரசின் நிதியில் ரூ.40 கோடி மதிப்பில், புதிதாக 6 கட்டடங்கள் கட்டப்பட்டு, பல மாதங்களாகத் திறக்கப்படவில்லை. நாங்கள் பல முறை முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, சென்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவை திறக்கப்பட்டன” என்றார்.
ஆனால், தர வரிசைப் போட்டியில் பங்கேற்ற பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததே, தர வரிசையில் பின் தங்கியதற்கு காரணம் என கூறுகிறார், பல்கலைக்கழக துணைவேந்தர் குழுவின் உறுப்பினராகவுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லவ்லினா லிட்டில் பிளவர்.
“துணைவேந்தர் இல்லாததால், கல்வியின் தரம் குறைந்து வருவதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. இப்போதும் நாங்கள் A++ அங்கீகாரம் பெற்றுள்ளோம். தர வரிசையில் பின் தங்கியதற்கு, பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகமானதே காரணம். தர வரிசையில் வெறும் 0.56 புள்ளிகள்தான் குறைந்திருக்கிறது’’ என்றார் அவர்.
பாடத்திட்டத்தில் குழப்பமா?
துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாததால், கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் குறித்து குழப்பம் ஏற்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் (BHUTA) வசந்த் தெரிவிக்கிறார்.
‘‘இந்த ஆண்டில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகுதி II ஆங்கிலம் I பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதை நம்பி, சில கல்லுாரிகளில் இரண்டு யூனிட் பாடங்களை எடுத்து ஒரு தேர்வும் நடத்திவிட்டார்கள். ஆனால், இப்போது பழைய பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இங்கு நடக்கும் குளறுபடிக்கு ஒரு சிறந்த உதாரணம்’’ என்றார் அவர்.
“ஆனால், சிண்டிகேட் ஒப்புதல் பெற்று, இணையதளத்தில் பதிவேற்றும் முன்பே, பரிசீலனையில் இருந்த பாடத்திட்டமே நடைமுறைக்கு வருமென்று சில கல்லுாரிகள்தான் இந்தத் தவறைச் செய்து விட்டன. மற்ற கல்லுாரிகள் அனைத்தும் பல்கலைக்கழகம் அறிவித்த பாடத்திட்டத்தைப் பின்பற்றின” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், பெயர் குறிப்பிட விரும்பாத சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர்.
காலிப் பணியிடங்கள்
துணைவேந்தர் பணியிடம் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து எட்டு ஆண்டுகளாக, பதிவாளர் பணியிடமும் காலியாக இருக்கிறது. இதைத்தவிர, 70 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) துணைத் தலைவர் திருநாவுக்கரசு , “தொலைதுாரக் கல்வி இயக்குநர் பணியிடம், 2015 ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்தும், கூடுதல் இயக்குநர் பணியிடம், 2009 ஆகஸ்ட்19-ம் தேதியிலிருந்தும் காலியாக இருக்கின்றன. ஆசிரியரல்லாத பணியிடங்களில், பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 458 பணியிடங்களில் இப்போது வரை 354 பணியிடங்களும், 12 விரிவுரையாளர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன” என்று பட்டியலிடுகிறார்.
“ஒரே நபரிடம் மூன்று பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. இதனால் பணிகளின் தரம் குறைவதுடன், தாமதம் ஏற்படுகிறது. பல்கலைகழகத்தில் உள்ள 12 விடுதிகளிலும் காப்பாளர் பணியிடங்கள், ஐந்திலிருந்து பத்தாண்டுகள் வரை காலியாகவுள்ளன.’’ என்றார் பேராசிரியர் வசந்த்.
ஆளுநரின் நியமனமாக துணைவேந்தர் குழுவில் இடம் பெற்றுள்ள வாசுகி பிபிசி தமிழிடம் கூறுகையில், ‘‘துணைவேந்தர் குழுவில் இருக்கும் நாங்கள், ஒருங்கிணைப்பாளராகவுள்ள உயர்கல்வித்துறை செயலாளாருடன் இணைந்தே பணியாற்றுகிறோம். பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு, அரசிடம்தான் உள்ளது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை செனட் கூட்டத்தையும், உரிய காலத்தில் சிண்டிகேட் கூட்டத்தையும் நடத்த வேண்டும். துணைவேந்தர் இல்லாததால் தாமதமாகிறது. துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கும், ஆளுநருக்கும் நடக்கும் விவகாரங்களில் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார்.
துணைவேந்தர் குழுவில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள அஜித்லால் மோகன், ‘‘இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.’’ என்று தெரிவித்தார்.
துணைவேந்தர் குழுவில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள லவ்லினா, வேண்டுமென்றே ஏராளமான கோப்புகளை கையெழுத்திடாமல் வைத்துள்ளார் என்று வசந்த் குற்றம்சாட்டினார்.
“துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான உயர்கல்வித்துறையின் செயலர் ஒப்புதலின்றியே பல விவகாரங்களை லவ்லினா கையாண்டுள்ளார். தகுதியற்ற உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது, அதிகாரத்தை மீறி 28 சுயநிதிக் கல்லுாரிகளில் முதல்வர் நியமனத்தை அனுமதித்தது, தனிப்பட்ட முறையில் சில பேராசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தது என்று 11 விதமான புகார்கள் உள்ளன. இதுபற்றி முதலமைச்சருக்கு நாங்கள் புகார் அனுப்பி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணையும் நடத்தப்பட்டுவிட்டது. ஆனால், நடவடிக்கை மட்டும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்றார் வசந்த்.
துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லினாவிடம் இதுபற்றி பிபிசி தமிழ் கேட்டதற்கு, ‘‘பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சொல்லும் புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அந்த சங்கத்துக்கே முறையான அங்கீகாரம் இல்லை. சமீபத்தில் கூட 250 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். நான்கு பேர் ஒவ்வொரு கோப்பிலும் கையெழுத்திடுவதால் தாமதமாக வாய்ப்பு அதிகம் உள்ளது. அனைத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பாக முடியாது.’’ என்றார்.
துணைவேந்தர் நியமனம் தாமதம் ஏன்?
முதலமைச்சரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக அங்கீகரிக்கக்கோரி, 2022ம் ஆண்டு சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது.
“அந்த வழக்கு முடிவுக்கு வராமல் இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பது என்பது இப்போதைக்கு நடக்காது!’’ என்றார் திருநாவுக்கரசு.
வழக்கு முடிவுக்கு வருவதற்கு வெகுநாட்களாகும் என்பதால் வேறு தீர்வு இல்லையா என்ற கேள்விக்கும் அவர் விளக்கமளித்தார்.
‘‘அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராகத்தான் இருக்கிறது. இப்போதுள்ள முறைப்படி, துணைவேந்தர் நியமனக் குழுவில் செனட் உறுப்பினர் ஒருவர், சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், அரசு நியமன உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் இருக்கிறார்கள்.
ஆனால், பல்கலைக்கழக மானியக்குழுவிலிருந்து (UGC) அதில் கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டுமென்று ஆளுநர் சொல்கிறார். ஆனால், பாரதியார் பல்கலைக்கழக சட்டம், சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் ஆகியவற்றின்படி, அப்படிச் செய்ய முடியாது” என்றார்.
அதற்கு இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து அதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர்.
ஏற்கெனவே தன் மீது சங்க நிர்வாகிகள் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த லவ்லினா, துணைவேந்தர் நியமனம் விரைவாக நடக்க வேண்டுமென்பதுதான் எங்களின் விருப்பமும் என்று கூறியதோடு, ‘‘காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து, அரசுதான் முடிவெடுக்க வேண்டும். காலிப் பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகளில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்களைத்தான் நியமனம் செய்துள்ளோம். அதனால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தாமதமாவதால், இதிலுள்ள இணைப்புக் கல்லுாரிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும், சுயநிதிக் கல்லூரிகள் சம்பந்தமான கோரிக்கைகள், கோப்புகள் அனைத்தும் உடனுக்குடன் கவனிக்கப்படுகின்றன என்று தமிழ்நாடு சுயநிதிக் கல்லுாரிகள் சங்கத்தின் புரவலர் கலீலிடம் பிபிசி தமிழ் தெரிவித்தார்.
இதற்கிடையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், செப்டம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியான நபரையே தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே 90 சதவிகிதப் பணியாளர்கள் இல்லை’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
துணைவேந்தர் நியமனம் தாமதமாவதற்கு அரசுதான் காரணம் என்று ஒரு தரப்பினரும், ஆளுநர்தான் காரணமென்றும் மற்றொரு தரப்பினரும் வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினருமே விட்டுக் கொடுக்காமல் பிரச்னை முடிவுக்கு வராது என்கிறார், கோவையைச் சேர்ந்த கல்வியாளர் பிச்சாண்டி.
‘‘பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான்கு துணைவேந்தர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர். அதிலும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நேரடியாக லஞ்சம் வாங்கி கைதான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மிகப்பெருமை வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் மாண்பு, கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருவது, மிகுந்த வேதனை தருகிறது’’ என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
துணைவேந்தர் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தைப் பெற மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.