நீங்கள் அவசரமாக எங்காவது செல்ல வேண்டியிருக்கும்போது, டாக்ஸி அல்லது ஆட்டோவை ஒரு செயலி மூலம் முன்பதிவு செய்ய முயன்றால், பல நேரங்களில் சாதாரண கட்டணத்தை விட அதிக கட்டணம் காட்டப்படுகிறது.
நீங்கள் நிச்சயமாக அந்த இடத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்றால், தள்ளுபடி விலையிலும் டாக்ஸியை முன்பதிவு செய்யலாம், ஆனால் சில நேரங்களில் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும்.
மற்றொரு பக்கம், வாகன ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள், ‘டாக்ஸி முன்பதிவு செயலிகள் தங்களது வருவாயில் இருந்து அதிக கமிஷனைப் பிடித்தம் செய்வதாகவும், உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை’ என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிகத் தேவையால் கட்டணம் அதிகரிக்கப்படும்போது, அந்தப் பலன்கள் ஓட்டுநர்களுக்கோ அல்லது கார் உரிமையாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியச் சந்தையில் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலே குறிப்பிட்ட இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக இந்தச் செயலி கூறுகிறது.
‘சஹாகர் டாக்ஸி’ (Sahakar Taxi) என்ற மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு சங்கத்தின் மூலம் இந்திய அரசு இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று பஞ்ச்குலாவில் இது தொடர்பாகப் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, “சந்தையில் டாக்ஸி சேவை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அதன் லாபம் ஓட்டுநர்களுக்கு செல்வதில்லை. கூட்டுறவு அமைச்சகத்தின் முன்முயற்சியால், அனைத்து லாபமும் ஓட்டுநர்களுக்கே சென்றடையும். அத்துடன் ஓட்டுநர்களுக்குக் காப்பீடு போன்ற வசதிகளும் வழங்கப்படும்” என்று கூறினார்.
பாரத் டாக்ஸி என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிசம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி, 1,20,000 ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸி செயலியில் பதிவு செய்துள்ளனர்.
டிசம்பர் 2-ஆம் தேதி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, அமித் ஷா ‘பாரத் டாக்ஸி’ செயலி குறித்து தகவல் அளித்திருந்தார்.
“கூட்டுறவுச் சங்கத்தால் இயக்கப்படும் போக்குவரத்துச் செயலியை அரசு அறிமுகப்படுத்துகிறது. நாட்டின் வணிக ரீதியிலான வாகன ஓட்டுநர்கள் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை குறைக்க இந்தச் செயலி உதவும். ‘சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட்’ என்ற மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு சங்கம் இந்தச் செயலியை இயக்கும். இதற்கு ‘பாரத் டாக்ஸி’ என்று பெயரிடப்படும்” என்று அவர் கூறியிருந்தார்.
‘சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட்’ இணையதளத்தின்படி, இது தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தால் (NCDC) ஊக்குவிக்கப்படுகிறது.
அத்துடன் அமுல், நபார்டு (NABARD) மற்றும் இஃப்கோ (IFFCO) போன்ற இந்தியாவின் 7 முக்கிய கூட்டுறவுச் சங்கங்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றன.
இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் அளித்த தகவலின்படி, டிசம்பர் 25 வரை 1 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுநர்கள் இந்தச் செயலியில் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் செயலி ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
மற்ற செயலிகளிடமிருந்து எப்படி வேறுபடுகிறது?
பட மூலாதாரம், sahkar-taxi.in
படக்குறிப்பு, பாரத் டாக்ஸி செயலியை தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் விளம்பரப்படுத்துகிறது.
இந்த டாக்ஸி சேவை புத்தாண்டு (2026) முதல் டெல்லியில் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) தொடங்கப்பட உள்ளது.
இதற்குப் பிறகு உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இது தொடங்கப்படும். எதிர்காலத்தில் நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலம் டாக்ஸிகள் மட்டுமல்லாது ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளையும் முன்பதிவு செய்யலாம்.
இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள்
சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் இணையதளத்தின்படி, இந்தச் செயலியில் பதிவு செய்யும் ஓட்டுநர்களிடம் எந்த கமிஷனும் வசூலிக்கப்படாது.
ஒவ்வொரு சவாரியிலும் கிடைக்கும் முழு வருமானமும் ஓட்டுநருக்குச் சேரும்.
கூட்டுறவுச் சங்கத்தின் முழு லாபமும் ஓட்டுநர்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
இந்தச் செயலியில் கட்டணம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் வெளிப்படையான முறையில் தீர்மானிக்கப்படும்.
மழை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களின் போதும் கட்டணம் நிலையாக இருக்கும். அதாவது வழக்கமான மொபைல் செயலிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் இதில் இருக்காது.
24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை கிடைக்கும்.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இருவரின் வசதியையும் கருத்தில் கொண்டு இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள் என்ன?
டாக்ஸியில் பயணிக்கும்போது பாதுகாப்பு என்பது ஒரு பெரிய விஷயம், குறிப்பாகப் பெண்களுக்கு.
சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் இணையதளத்தின்படி, இந்தச் செயலியுடன் இணைக்கப்பட்ட டாக்ஸிகளில் ஜிபிஎஸ் (GPS) வசதி பொருத்தப்பட்டிருக்கும்.
டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தச் செயலியின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, டெல்லி போலீசாருடன் சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (IFAT) தலைவர் பிரசாந்த் பாகேஷ் சவர்தேகர், இந்தச் செயலி குறித்து சில கவலைகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “கமிஷன் இல்லாமல் ஓட்டுநர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும் வகையில் அரசு ஒரு செயலியை கொண்டு வருகிறது என்றால் அது எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், இந்த கூட்டுறவு சங்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என்றார்.
“இந்த அமைப்பு அரசாங்கத்திற்குச் சொந்தமானதா என்று அரசிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘இல்லை, நாங்கள் இந்த கமிட்டியை உருவாக்குவோம், மற்றவற்றை ஓட்டுநர்களே நடத்துவார்கள்’ என்று கூறினர். ஆனால் மறுபுறம், இந்த கூட்டுறவுச் சங்கத்தில் மற்ற கூட்டுறவு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளை அரசாங்கம் நியமித்துள்ளது” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் தரப்பில் இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பிரசாந்த் பாகேஷ் கூறுகிறார்.
செய்தி முகமையான பிடிஐ தகவலின்படி, ஜெயன் மேத்தா ‘சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட்’ தலைவராக உள்ளார். இது தவிர, அவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் இயக்குநராகவும் உள்ளார்.
பிரசாந்த் கூறுகையில், “ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் எங்களுக்குப் பல வசதிகளை வழங்கின, ஆனால் பிறகு அவை மாற்றங்களைச் செய்யத் தொடங்கின. எங்களிடம் வசூலிக்கப்படும் கமிஷனையும் மாற்றின. ஆரம்பத்தில் ஒரு குறைந்தபட்சத் தொகையை உறுதி அளித்தார்கள், ஆனால் படிப்படியாக எல்லாம் குறையத் தொடங்கியது” என்றார்.
பிரசாந்தின் கூற்றுப்படி, இந்த ‘பாரத் டாக்ஸி’ எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்று இப்போது சொல்வது கடினம்.
தற்போது, மக்களிடையே நற்பெயரைப் பெறுவது இந்தத் திட்டத்திற்கு ஒரு சவாலாக உள்ளது.