பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர்.
சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.
கொள்ளை எப்படி நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.
வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.
இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி
அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, “கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, “வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது.” என தாடி தெரிவித்தார்.
கொள்ளையர்கள் மிகவும் “அனுபவம் வாய்ந்தவர்கள்” போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார்.
காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், “இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.” எனத் தெரிவித்தார்.
அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது “மிகவும் பதற்றம்” நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
திருடப்பட்ட நகைகள் எவை?
அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை.
திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை
மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன்
அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள்
அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி
“ரெலிகுவரி ப்ரூச்” என அழைக்கப்படும் நகை
இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன.
அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
திருடப்பட்ட நகைகள் “விலைமதிக்க முடியாதவை” மற்றும் “அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை” கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ்.
முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா?
1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை.
பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார்.
தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது.
1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான ‘லே செமின் தி செவ்ரே’ திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.
சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர்.
2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து “மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள” ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன.
அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர்.