படக்குறிப்பு, இனப் பாகுபாடு காட்டுவதாகக் கூறி ஊர்மியும் ஆதித்ய பிரகாஷும் வழக்கு தொடர்ந்தனர்.கட்டுரை தகவல்
மைக்ரோவேவ் ஓவனில் உணவைச் சூடாக்குவது தொடர்பாகத் தொடங்கிய சர்ச்சை, ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்திடமிருந்து இரண்டு இந்திய மாணவர்கள் 200,000 (1.83 கோடி ரூபாய்) டாலர் இழப்பீடு பெறும் முடிவை எட்டியது.
ஆதித்யா பிரகாஷ் மற்றும் அவரது வருங்கால மனைவி ஊர்மி பட்டாச்சார்யா ஆகியோர் “மைக்ரோவேவ் சம்பவம்” நடந்ததற்குப் பிறகு தொடர்ச்சியாக பாகுபாட்டை வெளிப்படுத்தும் கருத்துகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாகக் கூறி, போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்திற்கு எதிராக சிவில் உரிமைகள் வழக்கைத் தாக்கல் செய்ததாக பிபிசியிடம் கூறினர்.
பிரகாஷ் தனது மதிய உணவான பாலக் பன்னீரை (வட இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று) மைக்ரோவேவில் சூடாக்குவதற்கு பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் அதன் வாசனை காரணமாக எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து இந்தத் துன்புறுத்தல் தொடங்கியதாக கூறி அந்த வழக்குத் தொடரப்பட்டது.
பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அந்தப் பல்கலைக்கழகம், மாணவர்கள் முன்வைத்துள்ள பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளின் “குறிப்பிட்ட சூழ்நிலைகள்” தொடர்பாக தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தது.
அதே நேரத்தில், “அமெரிக்கச் சட்டங்களாலும் பல்கலைக்கழகக் கொள்கைகளாலும் பாதுகாக்கப்படும், அனைத்து பிரிவை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட சூழலை உருவாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்” தெரிவித்தது.
“2023-ஆம் ஆண்டில் இந்த புகார்கள் எழுந்தபோது, நாங்கள் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டோம். அனைத்து பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் புகார்களையும் கையாள்வது போலவே, இவற்றைத் தீர்க்க வழிமுறைகளைப் பின்பற்றினோம். செப்டம்பர் [2025]-இல் மாணவர்களுடன் ஓர் உடன்பாட்டை எட்டினோம். இந்த வழக்கில் எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் மறுக்கிறோம்” என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாலக் பனீர் அரைத்த கீரை மற்றும் பனீர் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
‘உணவு குறித்து கேலி’
தங்களைப் பொறுத்தவரை, இந்த வழக்கின் நோக்கம் பணம் பெறுவது அல்ல என்று பிரகாஷ் கூறினார்.
“இந்தியர்களை அவர்களின் ‘இந்தியத்தன்மைக்காக’ பாகுபாடு காட்டுவதால் விளைவுகள் ஏற்படும் என்ற கருத்தை முன்வைப்பதே இதன் நோக்கம்,” என்றார் அவர்.
கடந்த வாரம் இந்த வழக்கு குறித்து செய்தி வெளியானதில் இருந்து இந்தியாவில் ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளில் “உணவு பாகுபாடு” என்று பலர் விவரிப்பது குறித்த விவாதத்தைத் இது தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் தங்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து கேலி செய்யப்பட்ட அனுபவங்களை சமூக ஊடகங்களில் பல இந்தியர்களும் பகிர்ந்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூட
அதே சமயம், இந்தியாவிலும் உணவு தொடர்பான பாகுபாடு பரவலாக இருப்பதாகச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட/தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களுக்காகப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். சிலர் அவர்கள் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் வாசனை குறித்துப் புகார் தெரிவிக்கின்றனர்.
இது இந்திய அல்லது தெற்காசிய உணவுகளுக்கு மட்டும் நடப்பதில்லை. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த சமூகத்தினரும் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களுக்காக அவமானப்படுத்தப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
தங்களது சிக்கல்கள் 2023ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியதாக பிரகாஷும் ஊர்மியும் கூறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவரான பிரகாஷ், தனது மதிய உணவான பாலக் பனீரை மைக்ரோவேவில் சூடாக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பிரிட்டன் ஊழியர் உணவு “கடுமையான ” வாசனையைத் தருவதாகவும், அந்த மைக்ரோவேவில் கடுமையான வாசனை கொண்ட உணவுகளைச் சூடாக்கக் கூடாது என்று விதி இருப்பதாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய விதி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், பின்னர் எந்த உணவுகள் கடுமையான வாசனை கொண்டவை என்று விசாரித்தபோது, சாண்ட்விச்கள் இல்லை என்றும், குழம்பு வகைகள் தான் அப்படிப்பட்டது என்றும் தனக்குச் சொல்லப்பட்டதாகப் பிரகாஷ் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சமரச உடன்படிக்கை
பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால், அவரும் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவியாக இருந்த ஊர்மியும் தங்களது ஆராய்ச்சி நிதி, கற்பித்தல் பணிகள் மற்றும் பல மாதங்களாக இணைந்து பணியாற்றிய முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டிகளையும் இழக்க நேரிட்டதாக பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
மே 2025இல், பிரகாஷும் ஊர்மியும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பாகுபாடான நடத்தை மற்றும் தங்களுக்கு எதிரான “தீவிரமடையும் பழிவாங்கும் போக்கு” ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி வழக்குத் தொடர்ந்தனர்.
செப்டம்பர் மாதத்தில், பல்கலைக்கழகம் இந்த வழக்கை சமரசமாக முடித்துக்கொண்டது. இரு தரப்பினருக்கும் நீண்ட கால மற்றும் அதிக செலவு பிடிக்கும் நீதிமன்றப் போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக பொதுவாக இத்தகைய சமரசங்கள் எட்டப்படுகின்றன.
சமரச உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, மாணவர்களுக்கு அவர்களின் பட்டங்களை வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், அனைத்துப் பொறுப்புகளையும் மறுத்த பல்கலைக்கழகம், வருங்காலத்தில் அவர்கள் அங்கு படிக்கவோ அல்லது பணிபுரியவோ தடை விதித்தது.
பிபிசியுடன் பகிர்ந்த செய்தியில் பல்கலைக்கழகம் இதுகுறித்து கூறியது.
“பாகுபாடு மற்றும் துன்புறுத்தலைத் தடுக்கும் பல்கலைக்கழகக் கொள்கைகளை மீறியதாக உறுதி செய்யப்படும் நபர்கள், அதற்குப் பொறுப்பேற்க வைக்கப்படுகிறார்கள்,” என்று பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.
உணவு தொடர்பான பாகுபாட்டைத் தான் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல என்று பிரகாஷ் கூறுகிறார்.
அவர் இத்தாலியில் வளர்ந்தபோது, அவரது வகுப்புத் தோழர்கள் அவரது உணவின் மணம் “ஒவ்வாமை” தருவதாகக் கருதியதால், மதிய உணவு இடைவேளையின் போது அவரைத் தனி மேசையில் அமருமாறு பள்ளி ஆசிரியர்கள் அடிக்கடி கேட்டுக்கொள்வார்கள் என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘உணவு ஒரு கருவி’
“எனது ஐரோப்பிய வகுப்புத் தோழர்களிடமிருந்து என்னைத் தனிமைப்படுத்துவது அல்லது எனது உணவின் வாசனை காரணமாகப் பொதுவான மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்துவதைத் தடுப்பது போன்ற செயல்கள், வெள்ளை இனத்தவர்கள் உங்களது ‘இந்தியத்தன்மையை’ கட்டுப்படுத்துவதற்கும், நீங்கள் வாழக்கூடிய இடங்களைச் சுருக்குவதற்கும் வழிவகுக்கின்றன” என்று பிரகாஷ் கூறுகிறார்.
இந்திய மற்றும் பிற இனக்குழுக்களைத் தாழ்த்திப் பேசுவதற்கு உணவு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட கால வரலாறு உண்டு என்றும் அவர் கூறுகிறார்.
“கறி’ (குழம்பு வகை) என்ற சொல், சமையலறைகளிலும் பிறர் வீடுகளிலும் கடினமாக உழைக்கும் விளிம்புநிலை சமூகங்களின் ‘வாசனை’யுடன் இணைக்கப்பட்டு, ‘இந்தியர்’ என்பதைக் குறிக்கும் ஒரு இழிவான சொல்லாக மாற்றப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போன்றவர்கள் கூட உணவு தொடர்பாக அவமதிக்கப்படுவதிலிருந்து தப்பவில்லை என்று ஊர்மி கூறுகிறார்.
2024-ஆம் ஆண்டில் தீவிர வலதுசாரி ஆர்வலர் லாரா லூமர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஹாரிஸ் அதிபரானால், வெள்ளை மாளிகை “கறி மணம் வீசும்” என்று லூமர் அதில் குறிப்பிட்டிருந்தார். லூமர் தான் இனவெறியாளர் என்பதை மறுத்துள்ளார்.
தனது மானுடவியல் வகுப்பில் ‘கலாசார சார்பியல்’ என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரையாற்ற பிரகாஷை அழைத்த பிறகு, தானும் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக ஊர்மி அந்த வழக்கில் குற்றம் சாட்டியுள்ளார்.
கலாசார சார்பியல் என்பது, எந்தவொரு கலாசாரமும் மற்றொன்றை விட உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல, அனைத்துக் குழுக்களின் கலாசார நடைமுறைகளும் அந்தந்த கலாசாரச் சூழலில் சரியானவை என்ற கருத்தாகும்.
அந்த விரிவுரையின் போது, தான் சந்தித்த பாலக் பனீர் சம்பவம் உட்பட பல உணவு பாகுபாடு உதாரணங்களை எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிடாமல் பகிர்ந்து கொண்டதாகப் பிரகாஷ் கூறுகிறார்.
2024-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் தானும் பிரகாஷும் எதிர்கொண்ட “அமைப்பு ரீதியான பாகுபாடு” குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டபோது, தானும் பாகுபாடு சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக ஊர்மி கூறுகிறார்.
அந்தப் பதிவின் கீழ், அவர்கள் இருவருக்கும் ஆதரவாகவும் பல கருத்துகள் இருந்தன.
அதே சமயம் “இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்”, “காலனித்துவ நீக்கம் ஒரு தவறு” மற்றும் “இது உணவு மட்டுமல்ல, உங்களில் பலர் குளிப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்” போன்ற கருத்துகளும் பதிவிடப்பட்டன.
பல்கலைக்கழகத்திடமிருந்து தாங்கள் விரும்புவது தங்கள் தரப்புக் கேட்கப்பட்டுப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதே என்று பிரகாஷும் ஊர்மியும் கூறினர்.
தாங்கள் “அந்நியர்களாக” நடத்தப்பட்டதால் ஏற்பட்ட வேதனையும் வலியும் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் அர்த்தமுள்ள வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
பல்கலைக்கழகத்திடமிருந்து தங்களுக்கு முறையான மன்னிப்பு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இது குறித்த பிபிசியின் கேள்விக்கு பல்கலைக்கழகம் பதிலளிக்கவில்லை.
அவர்கள் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். இனி ஒருபோதும் அமெரிக்காவுக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறுகிறார்கள்.
“உங்கள் துறையில் நீங்கள் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், உங்கள் தோல் நிறம் அல்லது உங்கள் குடியுரிமை காரணமாக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பி அனுப்பப்படலாம் என்று இந்த அமைப்பு தொடர்ந்து உங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நிச்சயமற்ற நிலை மிகவும் கொடுமையானது. பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்,” என்று பிரகாஷ் கூறுகிறார்.