பட மூலாதாரம், Guy Smallman/Getty Images
இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றும் ஒரு நாடு தான் பாலத்தீன் .
அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன.
ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை.
மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால், 1990களில் அமைக்கப்பட்ட பாலத்தீனிய ஆட்சி தன் நிலம், தன் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. காஸா பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து, இப்போது பேரழிவு தரும் போரின் மத்தியில் சிக்கியுள்ளது.
பாலத்தீனத்தின் ‘அரை-நாடு’ (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை.
ஆனால் அந்த குறியீட்டு அர்த்தம் (symbolism) மிக வலுவானது.
“இரு நாடுகள் தீர்வை ஆதரிக்க பிரிட்டனுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது”என ஜூலை மாதம் ஐ.நா.வில் உரையாற்றியபோது, முன்னாள் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி கூறினார்.
1917-ஆம் ஆண்டு வெளியான பால்ஃபோர் பிரகடனத்தை அவர் குறிப்பிட்டார்.
அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த ஆர்தர் பால்ஃபோர் அதில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனத்தில், “யூத மக்களுக்கு பாலத்தீனில் ஒரு தேசிய இல்லம் அமைப்பதற்கு” பிரிட்டன் ஆதரவு தரும் என முதன்முறையாக அறிவித்திருந்தது.
பட மூலாதாரம், Bettmann via Getty Images
முதல் உலகப் போருக்குப் பிறகு, 1922 முதல் 1948 வரை, ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ ஆணையின் கீழ் பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கொடுக்கப்பட்டது.
அந்த ஏற்பாட்டின் படி, போரில் தோற்ற ஜெர்மனி மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் நிலங்களை மற்ற நாடுகள் நிர்வகிக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது.
பிரிட்டன் அப்போது ஒரு நுட்பமான சமநிலையை பேண முயன்றது. (இது சாத்தியமற்றது என சிலர் கருதினார்கள்) .
ஒருபுறம், யூத மக்களுக்கு பாலத்தீனில் ஒரு “தேசிய இல்லம்” அமைக்க ஆதரவு தரும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்தது.
மறுபுறம், அங்கு வாழும் பெரும்பான்மையான அரேபியர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் உறுதியளித்தது. இந்த இரு முரண்பட்ட வாக்குறுதிகளும், யூதர் மற்றும் அரபு சமூகங்களுக்கு இடையே அதிகரித்த பதற்றமும் சேர்ந்து, பல ஆண்டுகளாக அமைதியின்மையை ஏற்படுத்தின.
1948-ல் பிரிட்டன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியது.
அதன் பிறகு, இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதும், போர் வெடித்து, பல பாலத்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல வரலாற்றாசிரியர்கள், பிரிட்டன் அந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகளே இன்றைய இஸ்ரேல்–பாலத்தீன் மோதலுக்கான அடிப்படையாக அமைந்தது என்றும், பாலத்தீன பிரதேசத்தின் தீர்வு இன்னும் முடியாத சர்வதேச பிரச்னையாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், 1917-ல் வெளியான பால்ஃபோர் பிரகடனத்தில் பாலத்தீனியர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, அவர்களின் தேசிய உரிமைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என வாதிடுகிறார்கள்.
லாமி கூறியது போல, இப்போது “இரு நாடுகள் தீர்வு” என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.
‘இரு நாடுகள் தீர்வு’ என்பது, 1967 அரபு–இஸ்ரேல் போருக்கு முன்பிருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளைச் சேர்த்து ஒரு பாலத்தீன் நாடு உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதில், கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் அந்தக் கருத்தின் ஒரு பகுதியாகும்.
ஆனால், பல ஆண்டுகளாக நடந்த சர்வதேச முயற்சிகள் எந்தச் சிறப்பான முடிவையும் தரவில்லை. மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைத்த குடியேற்றங்கள், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவையாக இருந்தாலும், ‘இரு நாடுகள் தீர்வு’ என்ற கருத்தை வெறும் கோஷமாகவே மாற்றி விட்டன.
பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது யார்?
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் சுமார் 75% நாடுகள் தற்போது பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
ஐ.நா.வில், பாலத்தீனத்திற்கு “நிரந்தர பார்வையாளர் நாடு” என்ற அந்தஸ்து உள்ளது. அதனால் பாலத்தீன் கூட்டங்களில் பங்கேற்கலாம், ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லை.
சமீபத்தில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் மால்டா ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் நான்கு பேர் விரைவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
சீனாவும் ரஷ்யாவும் 1988 இல் பாலத்தீனத்தை அங்கீகரித்தன.
இதனால், இஸ்ரேலின் மிக வலுவான கூட்டாளியான அமெரிக்கா மட்டும் தனியாக நிற்கும் நிலை உருவாகிறது.
அமெரிக்கா 1990களின் நடுப்பகுதியில், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலத்தீனிய அதிகாரத்தை அங்கீகரித்தது.
அதன் பிறகு வந்த சில அமெரிக்க அதிபர்கள், பாலத்தீன நாடு உருவாக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் மட்டும் அதற்கு எதிராக இருந்தார். அவரது ஆட்சிக் காலங்களில், அமெரிக்காவின் கொள்கை முழுமையாக இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் இருந்தது.
பிரிட்டனும் மற்ற நாடுகளும் இப்போது பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பது ஏன்?
தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.
ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, “மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்” மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.
அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.
காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
பட மூலாதாரம், Reuters
தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.
ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, “மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்” மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.
அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.
காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பாலத்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
உதாரணமாக, பாலத்தீனம், அதிகாரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும், 2026-இல் தேர்தல் நடத்த வேண்டும், மேலும் உருவாகும் பாலத்தீன் நாடு ராணுவமற்றதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அங்கீகாரம் தரப்படும் என கனடா கூறியுள்ளது.
பிரிட்டன் தனது முடிவை அறிவிக்கும் போது, பொறுப்பை இஸ்ரேலின் மீது வைத்தது.
காஸாவில் உள்ள துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்தை ஏற்படுத்த, மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பதை தவிர்க்க, மேலும் இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான சமாதான முயற்சிக்கு இஸ்ரேல் உறுதியளிக்காவிட்டால், ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாலத்தீனம் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தது.
இந்த முடிவு சில குழப்பங்களை ஏற்படுத்தியது.
சில விமர்சகர்கள், குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என்றும், அங்கீகாரம் எந்த நிபந்தனையுடனும் இருக்கக் கூடாது என்றும் வாதிட்டனர்.
ஆனால் பிரிட்டன் குறிப்பிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்ததால், அங்கீகாரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியது.
பாலத்தீன் அரசை அங்கீகரிக்க முன்வரும் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அதன் பிறகு எப்படியான அரசியல் செயல்முறை இருக்க வேண்டும் என்பதற்கான சிந்தனையை ஊக்குவித்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றன.
சில நாடுகள் பாலத்தீனத்தை ஏன் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை?
பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள், பெரும்பாலும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவுக்கு வராததால் அங்கீகாரம் தரவில்லை.
“பாலத்தீனிய அரசை உருவாக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா வாய்மொழியாக ஏற்கிறது. ஆனால், அது இஸ்ரேலும் பாலத்தீனமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனால், பாலத்தீன மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறுவதில் இஸ்ரேலுக்கு மறுப்பு சொல்லும் அதிகாரம் கிடைக்கிறது” என்று லண்டன் பொருளாதார பள்ளியின் சர்வதேச உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணர் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் கூறுகிறார்.
1990-களில் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், பின்னர் ‘இரு நாடுகள் தீர்வு’ என்பதை இலக்காகக் கொண்டன.
அதாவது, இஸ்ரேலியரும் பாலத்தீனரும் தனித்தனி நாடுகளில் அருகருகே வாழ வேண்டும் என்பதே அந்தத் தீர்வு.
ஆனால் 2000-களின் முற்பகுதியிலிருந்தே, அமைதிக்கான அந்தச் செயல்முறை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
குறிப்பாக 2014-ல் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, நிலைமை மேலும் மோசமானது.
- எதிர்கால பாலத்தீன நாட்டின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டும்?
- அந்த நாட்டின் தன்மை என்ன?
- ஜெருசலேமின் நிலை என்ன?
- 1948–49 இல் இஸ்ரேல் உருவானபின் நடந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்த பாலத்தீன அகதிகளின் நிலைமை என்ன?
போன்ற கடினமான பிரச்னைகள் அனைத்தும் இன்னும் பதில் கிடைக்காதவையாகவே உள்ளன.
மேலும், ஐ.நாவில் உறுப்பினராக சேர பாலத்தீன் எடுக்கும் முயற்சியை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது.
ஏப்ரல் 2024-ல், இஸ்ரேலின் ஐ.நா தூதர் கிலாட் எர்டன் கூறியதை ஏஎப்ஃபி (AFP) மேற்கோள் காட்டியது.
ஐ.நா.வில் பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நடப்பது கூட “இனப்படுகொலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி” இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன் கூறியிருந்தார். மேலும், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அங்கீகாரம் வழங்கப்படுவது பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண விரும்பும் நாடுகள், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தங்கள் கூட்டாளியான இஸ்ரேலை கோபப்படுத்தும் என்பதை நன்றாகவே அறிந்துள்ளன.
இஸ்ரேலின் ஆதரவாளர்கள் சிலர், பாலத்தீனியர்கள் தனி நாடு ஆவதற்கான அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வாதிடுகிறார்கள். 1933-ஆம் ஆண்டு மான்டிவீடியோ ஒப்பந்தம் கூறும் அந்த நிபந்தனைகள்:
- நிரந்தர மக்கள்தொகை
- தெளிவான எல்லைகள்
- செயல்படும் அரசு
- பிற நாடுகளுடன் தூதரக உறவை ஏற்படுத்தும் திறன்
ஆனால், சிலர் மிகவும் நெகிழ்வான வரையறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, மற்ற நாடுகள் தரும் அங்கீகாரமே ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிக்க போதுமானது என்பதே அவர்களின் வாதம்.
அமெரிக்கா என்ன சொல்கிறது?
டிரம்ப் நிர்வாகம், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மறைக்கவில்லை.
2025 செப்டம்பர் 18 அன்று, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “அந்த விஷயத்தில் [பிரிட்டிஷ்] பிரதமருடன் கருத்து வேறுபாடு உள்ளது” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
உண்மையில், அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது பாலத்தீன சுதந்திரம் என்ற கருத்துக்கே நேரடியான எதிர்ப்பாக மாறியுள்ளது.
“பாலத்தீனத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் முயற்சிப்பது ஹமாஸுக்கு மேலும் தைரியம் தரும்”என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அங்கீகாரத்தை வலியுறுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார். ‘அது, மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள தூண்டிவிடக்கூடும்’ என அவர் கூறினார்.
பட மூலாதாரம், SHAHZAIB AKBER/EPA-EFE/REX/Shutterstock
ஐ.நா.வில் பாலத்தீனத்தின் நிலை :
பாலஸ்தீனம் தற்போது, ஹோலி சீயைப் போலவே, ஐ.நா.வில் “உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
2011-ல், பாலஸ்தீனம் முழுமையான ஐ.நா உறுப்பினராக சேர விண்ணப்பித்தது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான ஆதரவு இல்லாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பிற்கே அது செல்லவில்லை.
அதற்குப் பிறகு, 2012-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் அந்தஸ்தை உயர்த்தி, “உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு” என அறிவித்தது.
இதனால், தீர்மானங்களில் வாக்களிக்க முடியாதபோதிலும், பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்கும் உரிமை பெற்றது.
மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இந்த முடிவு வரவேற்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை விமர்சித்தன.
இந்த அந்தஸ்து, பாலத்தீனத்திற்கு மற்ற சர்வதேச அமைப்புகளில் சேரும் வாய்ப்பையும் வழங்கியது. 2015-இல், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உட்பட பல அமைப்புகளில் இணைந்தனர்.
மே 2024-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் உரிமைகளை மேம்படுத்தியது. சூடான விவாதத்துக்குப் பிறகு, பாலத்தீனத்தை உறுப்பினராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது.
அந்த தீர்மானத்தின் மூலம், பாலத்தீனம் முழுமையாக விவாதங்களில் பங்கேற்க, செயல்திட்டங்களை முன்மொழிய, மற்றும் குழுக்களில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால், வாக்களிக்கும் உரிமை இன்னும் வழங்கப்படவில்லை.
ஐ.நா.வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம்.
அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக அமெரிக்கா, பாலத்தீனத்தை ஒரு நாடாக ஏற்கும் முயற்சியை “முன்கூட்டியது” என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்தது.
பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்கள் சட்டப்படி கட்டாயமானவை. ஆனால் பொதுச் சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு அந்த வலிமை இல்லை.
“ஐ.நா. முழு உறுப்பினராக மாறுவது, பாலத்தீனியர்களுக்கு அதிக ராஜ்ஜீய செல்வாக்கை தரும். அதில் தீர்மானங்களை நேரடியாக முன்மொழிவது, பொது சபையில் வாக்களிப்பது (இப்போது ‘உறுப்பினர் அல்லாத’ நாடு என்பதால் வாக்களிக்க முடியவில்லை), பின்னர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற/வாக்களிக்க கூட வாய்ப்பு உண்டு”என்று வாஷிங்டனில் உள்ள மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட் (Middle East Institute) அமைப்பில், பாலத்தீன மற்றும் இஸ்ரேல் தொடர்பான நிகழ்ச்சிகளின் இயக்குனர் கலீத் எல்கிண்டி கூறுகிறார்,
“ஆனால், இவை எதுவும் ‘இரு மாநிலத் தீர்வு’வைக் கொண்டு வராது. அது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) நிறுவனத்தில் வளர்ச்சிக் கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியரான கில்பர்ட் அச்சார், இதைப் பற்றி கூறுகையில், “ஐ.நாவில் முழு உரிமை கிடைத்தாலும், பாலத்தீனிய அதிகாரம், அதனால் பெரிதாக ஒன்றும் சாதிக்காது” என்கிறார்.
“இது வெறும் அடையாள வெற்றியாக இருக்கும். 1967ல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு சிறிய பகுதியிலும், இஸ்ரேலை முழுமையாகச் சார்ந்து இருக்கும், அதிகாரமற்ற ‘பாலத்தீனிய அதிகாரத்தின்’ உண்மைக்கு எதிராக, கற்பனையான ‘பாலத்தீன அரசு’ அங்கீகாரம் மட்டுமே”என்று கூறும் அவர்,
மேலும், இது சுயாட்சி மற்றும் முழு உரிமை கொண்ட பாலத்தீன நாடு என்ற இலக்கிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.
பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசத்தின் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு