இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.
காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
“இடம்பெயர்வதற்கும் கூடாரம் வாங்குவதற்கும் என் நகைகளை விற்க வேண்டி வந்தது,” என்கிறார் லினா.
“கான் யூனிஸை அடைய 10 மணி நேரம் ஆனது. அந்த பயணத்திற்காக 3,500 ஷெக்கல்கள் (சுமார் 88,000 இந்திய ரூபாய்) செலுத்தினோம். கார்களும் லாரிகளும் முடிவில்லாமல் வரிசையாகச் சென்றன.”
ஹமாஸ் இயக்கத்தின் கடைசி பெரிய கோட்டையாகக் கூறப்படும் காஸா நகரில், ‘வலிமையான நடவடிக்கையை ‘ தொடங்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட ஒரே பாதையாக கடலோர அல்-ரஷீத் சாலையை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்தச் சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதால் முடிவில்லா வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்கள் தொடரும் நிலையில், பல குடும்பங்கள் சாலையோரங்களில் சிக்கித் தவிக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பலர் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த தாக்குதல் “முற்றிலும் பொறுப்பற்றதும், பயங்கரமானதும்” ஆகும் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் விமர்சித்துள்ளார்.
இது “மேலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி , அப்பாவி பொதுமக்களை கொன்று, மீதமுள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தும்” என்று அவர் கூறினார்.
ஆனால், திங்களன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மறைமுக ஆதரவு அளித்தார்.
“அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது. ஆனால், ஹமாஸ் போன்ற குழுவுடன் அது எப்போதும் சாத்தியமாகாது,” என்று அவர் கூறினார்.
இதேவேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இனப் படுகொலை செய்து வருவதாக குற்றம் சாட்டியது.
மறுபுறம் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் கடுமையாக நிராகரித்துள்ளது.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
படக்குறிப்பு, சமீபத்திய வாரங்களில் லட்சக்கணக்கான மக்கள் காஸா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஐந்து குழந்தைகளின் தாயான 38 வயது நிவின் இமாத் அல்-தின் கூறுகையில், தனது கணவர் வெளியேற மறுத்தபோதும், அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விமானங்கள் தனது பகுதியில் அறிவிப்பு துண்டுகளை வீசிய பிறகு, தெற்கே தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறினார்.
“பெரிய லாரியை வாடகைக்கு எடுக்க எனக்கு வசதி இல்லை. அதனால் என் வீட்டுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர வேண்டும் என்பது என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடினமான முடிவு” என்று அவர் விளக்கினார்.
இப்போது இடம்பெயர்வதற்கான செலவு, பெரும்பாலான குடும்பங்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒரு சிறிய லாரியை வாடகைக்கு எடுப்பதற்கு சுமார் 3,000 ஷெக்கல்கள் (சுமார் 75 ஆயிரம் இந்திய ரூபாய்) ஆகும்.
ஐந்து பேருக்கான ஒரு கூடாரத்தின் விலை சுமார் 4,000 ஷெக்கல்கள் (ஒரு லட்சம் இந்திய ரூபாய்). போர் தொடங்கியதிலிருந்து பெரும்பாலான குடும்பங்கள் வருமானத்தை இழந்ததால், சிலர் நீண்ட தூரம் நடந்து செல்லவோ அல்லது ஆபத்து இருந்தும் வீட்டிலேயே தங்கியிருக்கவோ வேண்டியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, இஸ்ரேல் விமானங்கள் காஸா நகரம் முழுவதும் கடுமையான குண்டுவீச்சுகளை நடத்தியது.
இதில் மத்திய அல்-தராஜ் பகுதி, மேற்கிலுள்ள கடற்கரை அகதி முகாம், வடக்கிலுள்ள ஷேக் ரத்வான் பகுதிகள் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்தத் தாக்குதல்களுடன் பீரங்கி மற்றும் ட்ரோன் தாக்குதல், ஹெலிகாப்டர் துப்பாக்கிச் சூடு ஆகியவையும் நடந்தன.
“அடுத்த கட்டம்” எனப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காஸா நகருக்குள் படிப்படியாக நுழைந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. விமானப்படை மற்றும் தரைப்படைகள் இரண்டும் இதில் பங்கேற்கும் என்றும், நாளுக்கு நாள் துருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தது.
இந்த இரவு நேர தாக்குதல்களை, “நரகம்” என்று மக்கள் விவரித்தனர்.
வட காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த காசி அல்-அலூல், தற்போது தென்மேற்கு காஸாவின் டெல் அல்-ஹவாவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனை நுழைவாயிலில் இப்போது தங்கியிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
“நான் இதைத் தேர்வு செய்யவில்லை,” என்ற அவர், “வடக்கிலிருந்து தப்பிச் சென்ற பிறகு, என் குடும்பத்துடன் கிட்டத்தட்ட ஒரு மாதமாக தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது”,
“பல மணி நேரமாக குண்டுவீச்சு கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் ராணுவம், அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டிடங்களை இடிக்கப் போவதாக மிரட்டுகிறது,” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
படக்குறிப்பு, கடந்த சில நாட்களில், சிலர் இரவில் கடற்கரைப் பாதையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய காஸாவின் அல்-தராஜ் பகுதியைச் சேர்ந்த சமி அபு தலால், அந்த இரவை “மிகவும் கடினமானது” என்று வர்ணித்தார்.
“முழு குடியிருப்பு கட்டிடங்களும் குடியிருப்பாளர்களுடன் தரைமட்டமாக்கப்பட்டன. பலர் உயிரிழந்தனர், சிலர் காணாமல் போனார்கள், பலர் காயமடைந்தனர்,” என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் மூன்று முனைகளில் முன்னேறி வருவதாகவும் தீவிர வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தின.