படக்குறிப்பு, காஸா போரில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 30% பேர் குழந்தைகள் என ஐ.நா விசாரணை ஆணையம் கூறுகிறதுகட்டுரை தகவல்
எழுதியவர், டேவிட் கிரிட்டன் & ஸ்டெஃபானி ஹெகார்டி
பதவி,
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
காஸா பகுதியில் பாலத்தீன குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டுக் குறிவைத்துள்ளதாகவும், இதன் விளைவாக இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் போர்க் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் ஐ.நா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளும், பாதுகாப்புப் படைகளும் “லட்சக்கணக்கான பாலத்தீன குழந்தைகளுக்கு மரணம் மற்றும் கடுமையான உடல், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன” என்றும், கடந்த அக்டோபர் மாத காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகும் இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதாகவும் ஒரு புதிய அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இந்தச் செயல்கள் “காஸாவில் உள்ள பாலத்தீனர்களின் குழந்தைகளைக் குறிவைப்பது, அவர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கான ஒரு திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதி” என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அந்த ஆணையம் கூறுகிறது.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இந்த ஆணையத்தின் அறிக்கையை “முற்றிலும் நிராகரிப்பதாக” தெரிவித்ததுடன், இதை ஒரு “அவதூறான போலி அறிக்கை” என்றும் “அதன் முந்தைய அறிக்கைகளைப் போலவே அதிர்ச்சியூட்டும் ஒரு பிரசார ஆவணம்” என்றும் கூறியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையில், அதற்கு முன்பில்லாத வகையில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ஒரு தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், காஸாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் 21,280க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்படக் குறைந்தது 73,035 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தப் பிராந்தியத்தின் ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என்று ஐ.நா கருதுகிறது.
சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் எனக் கூறப்படுபவை குறித்து விசாரிப்பதற்காக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதி மற்றும் இஸ்ரேல் மீதான சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் 2021இல் ஐ.நா மனித உரிமைகள் சபையால் நிறுவப்பட்டது.
இதன் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு அதிகாரபூர்வமாக ஐ.நா சார்பாகப் பேசுவதில்லை. கடந்த செப்டம்பரில், காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக இந்த ஆணையம் குற்றம் சாட்டியது.
கடந்த 1948 இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு செயல்களை இஸ்ரேலிய அதிகாரிகளும் ராணுவமும் செய்துள்ளதாக முடிவு செய்ய நியாயமான காரணங்கள் இருப்பதாக ஓர் அறிக்கை கூறியது.
இஸ்ரேல் அந்த அறிக்கையைக் கடுமையாக மறுத்ததுடன், அது திரித்துக் கூறப்பட்டது மற்றும் தவறானது என்று கூறியது.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் மற்றும் பிற பாலத்தீன ஆயுதக் குழுக்கள் போர்க் குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களைச் செய்துள்ளதாகவும் இந்த ஆணையம் இதற்கு முன்பு முடிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
அதன் பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காஸாவின் சுகாதார அமைச்சகம், 265 குழந்தைகள் உள்பட 1,020க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. தமது தரப்பில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று, இந்த விசாரணை ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளின் “தீவிர அளவும் முறையாகத் திட்டமிடப்பட்ட தன்மையும்” தொடர்ந்து நீடிப்பதாகக் கூறியுள்ளது.
இதன் விளைவாக, “பாலத்தீன குழந்தைகளுக்கு இதற்கு முன்பு இல்லாத வகையில் மரணம், காயம் மற்றும் மன உளைச்சல்” ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அக்டோபர் 2025 போர் நிறுத்தத்திற்குப் பிறகும், குழந்தைகள் தொடர்ந்து கொல்லப்பட்டும், பலத்த காயமடைந்தும் வருகின்றனர். போர் நிறுத்தத்தின் மீதும், சர்வதேச சட்டத்தின் கீழ் பாலத்தீன குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பின் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது” என்று இந்த ஆணையத்தின் தலைவரான இந்திய சட்ட நிபுணர் சீனிவாசன் முரளிதர் தெரிவித்துள்ளார்.
“பாலத்தீன குழந்தைகளின் பாதுகாப்பு, கவனிப்பு, அவர்களின் வாழ்வு ஆகியவை பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையில் இருந்து பிரிக்க முடியாதவை” என்று கூறிய அவர், “குழந்தைகளை இலக்கு வைப்பதன் மூலம், பாலத்தீன மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கும் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்குமான ஒட்டுமொத்தத் திறனையும் இஸ்ரேல் தாக்குவதாகவும்” குறிப்பிட்டார்.
இந்த ஆணையத்தின் புதிய அறிக்கை, “குவாட்காப்டர் ட்ரோன்கள், குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகள் போன்ற துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி பாலத்தீன குழந்தைகளின் முக்கிய உறுப்புகளை நோக்கியும், குழந்தைகள் நெருக்கமாக வாழும் குடியிருப்புக் கட்டடங்கள், பள்ளிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதல்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தியும் இஸ்ரேல் நேரடியாக அவர்களைக் குறிவைத்துள்ளதாக” கூறுகிறது.
மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களாலும் குடியேறிகளாலும் பாலத்தீன குழந்தைகள் குறிவைக்கப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்கும் இஸ்ரேலே சட்டபூர்வமாகப் பொறுப்பாகும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள குழந்தைகள், குறிப்பாக வளரிளம் பருவத்தில் உள்ள சிறுவர்கள், “இஸ்ரேலிய சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்” என்றும், “பாலத்தீன குழந்தைகளைக் குறிவைத்து, பெரும்பாலும் கைது செய்யப்பட்டபோதோ அல்லது காவலில் இருக்கும்போதோ நடத்தப்பட்ட பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களை” தாங்கள் ஆவணப்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், காஸாவில் உள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறார் மருத்துவமனைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள், “குழந்தைகளுக்கான உயிர் காக்கும் பராமரிப்பு வசதிகளைத் திறம்பட முடக்கியுள்ளதுடன், ஒரு பாதுகாக்கப்பட்ட குழுவாக அவர்கள் உயிர் வாழ்வதைச் சிதைத்துள்ளதாக” அறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன், பட்டினியை ஒரு போர் முறையாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மேலும் காஸாவுக்குள் மனிதநேய உதவிகள் கிடைப்பதற்கான கட்டுப்பாடுகள் “காஸாவில் உள்ள குழந்தைகளிடையே கடுமையான மற்றும் நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டை உருவாக்கியுள்ளன. இது அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைச் சூழலை பாதிப்படையச் செய்கிறது” என்று எச்சரிக்கிறது.
மேலும், பள்ளிகள் மீதான தாக்குதல்கள், பெருமளவிலான இடப்பெயர்வுகள் மற்றும் கட்டாயமாக அவற்றை மூடுவது போன்ற செயல்களின் மூலம், இஸ்ரேலிய அதிகாரிகள் “குழந்தைகளின் கற்கும் திறனை முறையாகச் சீர்குலைத்துள்ளனர், இதன் மூலம் பாலத்தீன சமூகத்தின் அறிவுசார் மற்றும் சமூக அடித்தளங்களையே சிதைக்கிறார்கள்” என்றும் அது குற்றம் சாட்டுகிறது.
“உண்மையைத் தேடுவதற்குப் பதிலாக, இஸ்ரேலை தனிமைப்படுத்தி இழிவுபடுத்துவதையே நோக்கமாகக் கொண்ட, அடிப்படையிலேயே குறைபாடுள்ள ஓர் அமைப்புதான் இந்த ஆணையம்” என்று கூறி, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் அந்த அறிக்கையைக் கண்டித்தது.
“இது ஹமாஸால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை முற்றிலும் மறைக்கிறது. அதே நேரத்தில் பாலத்தீன குழந்தைகளை மனிதக் கேடயங்களாகவும், போரின் பகடைக் காய்களாகவும் ஹமாஸ் வஞ்சகமாகப் பயன்படுத்துவதை இது புறக்கணிக்கிறது” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆணையம் “தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு நம்பகமான சரிபார்ப்பு வழிமுறையையும்” கொண்டிருக்கவில்லை என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் தலைவர்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். மேலும் ஹமாஸ் மற்றும் பிற பாலத்தீன ஆயுதக் குழுக்களைத் தோற்கடிக்கவும், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும் தற்காப்புக்காகவே தங்களது ராணுவ நடவடிக்கைகள் காஸாவில் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய படைகள் சர்வதேச சட்டத்திற்கு இணங்க செயல்பட்டு இருப்பதாகவும், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்வதாகக் குற்றம் சாட்டி தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. ஆனால் இதில் ஒரு முடிவு எட்டப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.
இஸ்ரேல் இந்த வழக்கை “முற்றிலும் ஆதாரமற்றது” என்றும் “சார்புடைய மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை” அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியுள்ளது.