2
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, இன்று (07) பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, வீதிகளில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக பிரதமர் எச்சரித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு நிறைவு தினத்தை சிலர் இங்கிலாந்து யூதர்களைத் தாக்க ஓர் இழிவான சாக்காகப் பயன்படுத்தி வருவதாகவும், இந்த நாளில் போராட்டங்களை நடத்துவது அபாயமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இன்றையதினம் மான்செஸ்டர், கிளாஸ்கோ, எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் உட்பட பல நகரங்களில் மாணவர் போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இலண்டன் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தலைநகரில் கூட்டுப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம், காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.
அன்றுமுதல், காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் இதுவரை 67,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்தப் பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.