வேலூர்: கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,200 கன அடிக்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கடந்து வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழக – ஆந்திர எல்லையில் புல்லூரில் ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கடந்து வருகிறது. தடுப்பணையை கடந்த ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தால் பாலாற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியுள்ளதால் இனி வரும் நாட்களில் பாலாற்று வெள்ளத்தின் அளவு தற்போதைய நிலையை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களின் ஜீவாதாரமான பாலாறு கர்நாடக மாநிலம் நந்திதுர்கத்தில் உற்பத்தியாகி 93 கி.மீ அம்மாநிலத்தில் பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ, தமிழ்நாட்டில் 222 கி.மீ கடந்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பாலாற்றுக்கான நீர்ப்பிடிப்பு பகுதி கர்நாடக மாநிலமாக இருந்தாலும் மூன்றரை டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பேத்தமங்கலா அணையும், அதற்கு கீழ் பகுதியில் நான்கரை டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ராமசாகர் அணையும் நிரம்பினால் மட்டுமே ஆந்திர மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும்.
மேலும், ஆந்திர மாநிலத்தில் சுமார் 33 கி.மீ பயணிக்கும் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு சுமார் 28 தடுப்பணைகளை கட்டியதால் அங்கிருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் வராத நிலை இருந்தது. தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை பகுதியில் சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழையால் நிரம்பினால் மட்டுமே ஆந்திராவில் இருந்து கொஞ்சம் தண்ணீர் கிடைத்து வந்தது.
இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பேத்தமங்கலா அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமசாகர் ஏரியும் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.
அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலாற்றுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம், ஆந்திர மாநிலத்தில் உள்ள 28 தடுப்பணைகளும் ஏற்கெனவே முழுமையாக நிரம்பியுள்ளதால் புல்லூர் தடுப்பணைக்கு நேற்று காலை 1,200 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.
கர்நாடகம், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 1,200 கன அடிக்கு நீர்வரத்து உள்ள நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் துணை ஆறுகளிலும் தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. பேரணாம்பட்டில் வழியாக வரும் மலட்டாற்றில் 734 கன அடியும், மேல் அரசம்பட்டில் இருந்து வரும் அகரம் ஆற்றில் இருந்து 103 கன அடியும், கவுன்டன்யாவில் இருந்து 989 கன அடியும், பொன்னை ஆற்றில் இருந்து 745 கன அடி வெள்ளமும் பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.
வேலூர் பாலாற்றில் 3,341 கன அடி அளவுக்கும், வாலாஜா பாலாறு அணைக்கட்டு பகுதியில் அது 4,086 கன அடியாகவும் உள்ளது. இதையடுத்து, பாலாறு அணைக்கட்டில் இருந்து 3 கால்வாய்கள் வழியாக 1,144 கனஅடி நீர் ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. பாலாறு அணையில் இருந்து நேரடியாக ஆற்றுக்கு 2,942 கன அடி தண்ணீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.
பாலாற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடியதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்கள், வேலூர் மாவட்டத்தில் 6 இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், சவுக்கு கம்புகள், மணல் மூட்டைகள், ‘பொக்லைன்’ இயந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கர்நாடக மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலம் பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு அமைக்கப்பட்டு பாலாற்றில் வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகள் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் 49 ஏரிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளில் 189-ம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 19 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 சதவீத்தில் இருந்து 50 சதவீதம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஏற்கெனவே, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம், மோர்தானா அணை, ராஜாதோப்பு அணைகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.