பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு கொண்டு வந்த பி.என்.எஸ், பி.என்.எஸ்.எஸ் சட்டங்களை தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யும் மசோதாக்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாவில், பி.என்.எஸ் சட்டப்படி வெவ்வேறு பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள இரண்டு மசோதாக்கள் கூறும் சட்ட திருத்தங்கள் யாவை? பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்குவது குற்றங்களைத் தடுப்பதற்கு உண்மையில் உதவுகிறதா?
மசோதாவில் கூறப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
தற்போதுள்ள சட்டத்தின்படி, டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்வோருக்கு, அதாவது ஆபாசமாகப் பதிவிடுவது, டிஜிட்டல் ரீதியாகப் பின்தொடர்வது, தவறான புகைப்படங்களைப் பகிர்வது, தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
ஆனால் மசோதாவின்படி, இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டு சிறையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்தக் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் 10 ஆண்டு சிறையோடு பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இப்போதைய சட்டப்படி, பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைக் குற்றங்களுக்கு 50,000 அபராதத்தோடு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள மசோதாவில் இந்தக் குற்றங்களுக்கு முறையே, 15 ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதுபோக, வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும், காவல்துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் போன்றோர் குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின்படி, குழந்தைப் பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் பொருத்தவரை 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்வது, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வது ஆகிய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இவைபோக, பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடந்துகொள்வது, பலவந்தமாகத் தாக்குவது ஆகிய குற்றங்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும். இத்தகைய குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டால், ஏழு ஆண்டுகள் சிறை விதிக்கப்படும்.
தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பெண் மீது ஆசிட் வீசுவதாக அச்சுறுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதுவே திருத்தப்பட்ட மசோதாவில், பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். அதுவே, ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால், அபராதத்தோடு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
மரண தண்டனை குற்றங்களைத் தடுக்குமா?
மசோதா குறித்த தனது சட்டப்பேரவை உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். பெண்களுக்கு எதிராகக் கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, இத்தகைய குற்றங்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் கடும் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும், இத்தகைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்ட மசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், மரண தண்டனைகளை வழங்குவதால் பாலியல் குற்றங்கள் குறைவதில்லை என்றும் குற்றங்கள் நடந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அளிக்கப்பட வேண்டிய தண்டனைகளைவிட, குற்றமே நடக்காமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதே தற்போது அவசியமானது என்றும் கூறுகிறார் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு.
அதேவேளையில், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு, குறிப்பாக இத்தகைய குற்றங்களைச் செய்ய நினைப்போருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இப்படிப்பட்ட மிகக் கடுமையான சட்டங்கள் அவசியம் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
தண்டனைகளை கடுமையாக்கினால் குற்றங்கள் குறையுமா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை உரையில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏழு தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன்விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையின் வரையறைகளை இந்தச் சட்டத்திருத்த மசோதா அணுகியுள்ள விதத்தைப் பாராட்டுகிறார் தேவநேயன் அரசு.
அதோடு, இணையத்தில் அசிங்கப்படுத்துவது, படங்களை வெளியிடுவது, பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிடுவது ஆகியவற்றுக்கான பிரிவுகளையும் நல்ல விஷயமாகப் பார்க்கும் தேவநேயன், இருப்பினும் தண்டனைகளைக் கடுமையாக்குவது மட்டுமே தீர்வு அல்ல என்பதையும் வலியுறுத்துகிறார்.
“மனித உரிமை பார்வையில் மரண தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உலக நாடுகளில் எங்குமே தண்டனைகளை மிகக் கடுமையாக்குவதால் குற்றங்கள் குறைந்ததாக வரலாறு இல்லை. சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன, ஆனால் அரசு சட்ட அமலாக்கம் குறித்துச் சிந்திப்பதே இல்லை,” என்று கூறுகிறார் அவர்.
தமிழ்நாட்டில் போக்சோ பிரிவின்கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், இருக்கும் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கான தீர்வுகளைக் கண்டறிவதே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
“தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 16% வழக்குகளில் மட்டுமே தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைப் பாலியல் வன்கொடுமை வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளுக்குத் தொடரும் வழக்குகள் இன்னும் இருக்கின்றன.”
மேலும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் தேவநேயன் அப்படிப் பதிவாகும் வழக்குகளில் பலவும் முடிவுக்கு வராமலே இருப்பதாகக் கூறுகிறார்.
“மக்கள் தைரியமாக வழக்குப் பதிவு செய்ய முன்வருகிறார்கள். ஆனால், அவற்றைக் கையாள போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் போதுமான அளவுக்கு இல்லை. விரைந்து வழக்கை முடிக்க முடிவதில்லை. ஆகவே, சட்டத் திருத்தம் கொண்டு வருவதைவிட சட்டத்தை அமலாக்குவதுதான் கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை” என்கிறார் அவர்.
‘குற்றத்தைத் தடுக்க கடும் தண்டனைகளும் அவசியம்’
அதுமட்டுமின்றி, சட்டங்களைத் திருத்துவது, புதிதாக இயற்றுவது ஆகியவற்றையும் தாண்டி, குழந்தைப் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க பள்ளிகளில் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கூறும் தேவநேயன், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிட்டிகளை கிராமப் பஞ்சாயத்து வரை உருவாக்க வேண்டியது அவசியம் என்கிறார்.
ஒரு குற்றத்தை நடக்காமல் தடுப்பதற்கான முன்முயற்சிகளை எடுப்பதும், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுகை, பாதுகாப்பற்ற தொடுகை ஆகியவற்றைக் கற்பிப்பதும்தான் காலத்தின் தேவை என்று வலியுறுத்துகிறார் தேவநேயன்.
குற்றங்களே நடக்காமல் தடுப்பதற்கான தீர்வாக தண்டனைகளை அதிகப்படுத்துவது மட்டுமே அமையாது என்றாலும் அதுவும் அவசியம் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
“குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், அந்தக் குற்றத்தைச் செய்ய நினைப்பவர்களுக்குச் சிறிதேனும் தயக்கத்தை வரவழைக்கக்கூடிய வகையில் அமைய வேண்டும்.
குற்றங்களே நடக்காமல் தடுப்பதற்கு சமூக அளவிலான பெரிய முயற்சி தேவைப்படுகிறது. அதேநேரம், இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்ற ஆதங்கம் இருந்தால், தங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக உணரமாட்டார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, சட்டமும் அரசும் இந்தக் குற்றங்களை எவ்வளவு கடுமையாகக் கையாள்கிறது என்பதே பாதிக்கப்பட்டவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும், அந்த அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் மிகத் தேவையானதுதான் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.