• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

“பாலியல் குற்றாவாளி ‘சார்’களின் சரணாலயம் அதிமுக” –  அமைச்சர் சிவசங்கர் சாடல் | Minister Sivasankar comments on AIADMK member arrested in Anna nagar case

Byadmin

Jan 9, 2025


சென்னை: “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் பாதுகாப்பில் தமிழக மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி வந்தார் பச்சைப் பொய் பழனிசாமி. அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார்.

அற்பத்தனமான புத்திக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அல்ல, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமியின் புகாரை வாங்காமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தனது கட்சியை சேர்ந்தவரைக் காப்பாற்ற பழனிசாமி யார் இந்த சார்? என நடத்திய கபட நாடகம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், தமிழக அரசு உண்மையை மறைக்க சிபிஐ விசாரணையை மறுப்பது போலவும் பொதுவெளியில் பிதற்றி வந்தார் பழனிசாமி. இதோ உண்மை சந்திக்கு வந்து விட்டது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மறைந்திருந்த அந்த சார் அதிமுக வட்டச் செயலாளர்தான். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது.

செப்டம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியான உறுதியான நீதியைப் பெற்றுத்தரவே சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தடை வாங்கியது. சிபிஐ விசாரணை ஏற்படுத்தும் தாமதத்துக்கு பொள்ளாச்சி வழக்கே சான்று.‘அண்ணா, அண்ணா விட்டுடுங்க அண்ணா’ என்று பொள்ளாச்சி பெண்கள் கதறிய குரலில் தமிழகமே அதிர்ந்து போனது. அந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தனது கள்ளக்கூட்டாளி பாஜகவோடு சேர்ந்து அதிமுக செய்த காரியங்கள்தான் இன்றும் அந்தக் கொடுமைக்கான நீதியை பெற்றுத்தர தாமதத்தை ஏற்படுத்தி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது.

இந்திய அளவில் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் முன்னணியில் இருக்கும் தனது கள்ளக்கூட்டணி பாஜகவுக்கு கொஞ்சமும் சளைத்த கட்சி அல்ல அதிமுக என்பது மற்றுமொருமுறை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நிருபிக்கப்பட்டுள்ளது. இனியும் யார் அந்த சார்? என்று பச்சைப் பொய் பழனிசாமி கேட்க விரும்பினால் கண்ணாடியைப் பார்த்துதான் கேட்க வேண்டும்.

இன்றைக்கு காவல் ஆய்வாளரையே கைது செய்திருப்பதன் மூலம் எத்தகைய சார்புமற்ற நேர்மையான விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்று தரும் திராவிட மாடல் அரசின் வெளிப்படையான நிர்வாகத்திறன் மக்கள் மன்றத்தில் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது. அண்ணா நகர் வழக்கானாலும் சரி, அண்ணா பல்கலைக்கழக வழக்கானாலும் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய எந்த “சாரும்” தமிழக முதல்வரின் கடுமையான நடவடிக்கைக்கு தப்பிக்க முடியாது.

ஆனால் அந்த சார்கள் பலரும் அதிமுகவினராக இருப்பதுதான் வெட்க கேடு. பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவை மாற்றி அவர்களை பாதுகாத்துவரும் பழனிசாமி தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து கொண்டு இனியும் யார் அந்த சார்? என மக்களிடம் நாடகமாடினால் “யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை” என மக்கள் புறக்கணித்து செல்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்தபோதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோல திசைதிருப்பல் அரசியலில் ஏன் பழனிசாமி ஈடுபடுகிறார்? எனும் சந்தேகம் தமிழக மக்களிடையே இருந்தது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் அது என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பழனிசாமி நடத்தும் கபடநாடகம் இனி ஒருநாளும் மக்களிடத்தில் எடுபடபோவதில்லை. பெண்கள் மீது எந்த வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அதை திராவிட மாடல் அரசு எந்த வகையிலும் அதை சகித்துக் கொள்ளாது, அப்படிபட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வழிகாட்டியுள்ளார். அவரது ஆட்சியில் பெண்களுக்கு குற்றமிழைத்த யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.



By admin