• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகளில் சிறப்புக் குழு: தமிழக அரசு தகவல் | Special committee in schools to protect against sexual harassment: TN govt informs in HC

Byadmin

Nov 13, 2024


சென்னை: மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் தரப்பில் சீலிடப்பட்ட இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மனுதாரரான வழக்கறிஞர் சூர்யபிரகாசம், “திருச்செந்தூரில் மாணவி ஒருவருக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்,” என்றார். அதற்கு அரசுத் தரப்பில், “பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றம் தெரிவித்த அறிவுறுத்தல் தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அதுதொடர்பான உத்தரவுகளை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.20-க்கு தள்ளி வைத்துள்ளனர்.



By admin